“தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை…” – தென்னிந்திய நடிகர் சங்கம் விளக்கம்

“தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை…” – தென்னிந்திய நடிகர் சங்கம் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரான நடிகர் விஷால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் சிலரும், நடிகர் ஜி.கே.ரித்திஷ் மற்றும் அந்தச் சங்கத்தின் தற்போதைய தலைவரான தாணு, நடிகர் ராதாரவி ஆகியோர் இது பற்றி பத்திரிகைளுக்கு அளித்த பேட்டியில் நடிகர் சங்கத்தின் பெயரையும் சம்பந்தப்படுத்தி பேசியிருந்தனர்.

இதையடுத்து நேற்று கூடிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர சிறப்பு செயற்குழு கூட்டத்தில் இது பற்றியும் பேசப்பட்டதாம். கூட்டத்தின் முடிவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடர்பான விஷயங்களில் தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிடவில்லை என்று தெரிவித்து ஒரு வெளிப்படையான கடிதத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்.

அந்தக் கடித நகல் இங்கே :

siaa-letter-news

அன்புடையீர்,

வணக்கம்,

கடந்த சில நாட்களாக பத்திரிக்கை ஊடகம் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் தயாரிப்பளர் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடப் போவதாக பரபரப்பான செய்திகள் வந்தபடி உள்ளன..! அது பற்றி எங்களின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த கடந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்பது மிகப் பெரிய அமைப்பு.! திரை உலகின் முதுகெலும்பு போன்ற அதனது தலைமையை தீர்மானிக்க வேண்டியது அதை சார்ந்த உறுப்பினர்கள்தான். அதில் ஓட்டுரிமை இல்லாத தென்னிந்திய நடிகர் சங்கம் எக்காரணத்தை முன்னிட்டும் தலையிடாது..!

ஆனால் அதே சமயம் - எங்களது உறுப்பினராக உள்ள நடிகர்கள் மற்றும் தற்போதைய நிர்வாகத்தில் பொறுப்பில் உள்ள நடிகர்கள் பலரும் தங்களது சங்கத்தில் தயாரிப்பாளர்களாக உள்ள நிலையில், தயாரிப்பாளர் சங்கம் பற்றி அவர்களின் நிலைப்பாடு மற்றும் ஊடக பேட்டி.. தேர்தல் பற்றி அவர்கள் எடுக்கும் முடிவுகளை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினராக கருதியே நீங்கள் அணுகவேண்டும்.

நடிகர் சங்கத்துடன் அதை தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அதேபோல் நீங்களும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தொடர்புப்படுத்தி பேசுவதை தவிர்க்கும்படி உங்களது உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.

தங்களின் சங்கம் சுதந்திரமாக தேர்தலை நடத்தி – அதன் மூலம் வரும் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம்.

இதுவே எங்கள் நிலைப்பாடு.

நன்றி

தென்னிந்திய நடிகர் சங்கம்