சினிமா தயாரிப்பாளர்களாக மாறிய சிநேகா-பிரசன்னா ஜோடி..!

சினிமா தயாரிப்பாளர்களாக மாறிய சிநேகா-பிரசன்னா ஜோடி..!

தமிழ்ச் சினிமாவில் கல்யாணம் ஆகும்வரைக்கும்தான் ஒரு ஹீரோயினுக்கு மவுசு. ஆகிவிட்டால் குடும்ப குத்துவிளக்காக நினைத்து தூக்கி பூஜை அறையில் வைத்துவிடுவார்கள் தமிழ் ரசிகர்கள். இதனாலேயே கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுவிட்டு காலம் கடந்து கல்யாணம் செய்த நடிகைகளும் இருக்கிறார்கள்.

இப்போது நடிகை சிநேகாவுக்கும் இதே நிலைமைதான். திருமணத்திற்கு முந்தைய காலக்கட்டத்திலேயே அவருடைய படங்கள் அனைத்துமே டீஸண்டானவை. அவருடைய கேரக்டர்களும் முகம் சுழிப்பதுபோல இருக்காது. அவரும் அதுபோல் நடித்ததில்லை.  இப்போது நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்தவுடன் மேலும் படங்களில் நடிக்கவும் ஆசைப்படுகிறார். தொடர்ந்தும் நடித்து வருகிறார்.

பிரகாஷ்ராஜின் 'உன் சமையலறையில்' படம் சிநேகா நடிப்பில் அடுத்து வரக்கூடிய படம். பிரசன்னாவுக்கும் பெயர் சொல்லும்படியான படங்கள் கையில் இல்லை. அவரும் தேடிச் செல்பவருமில்லை. நமக்கு வர்றது வரட்டும் என்று காத்திருக்கும் கேரக்டர்..

ஆனாலும் தம்பதிகள் இருவரும் விளம்பரப் படங்களில் நடித்து நன்றாகவே கல்லா கட்டிவிட்டார்கள். இன்றைக்கும் விளம்பரப் படவுலகத்தில் இவர்கள்தான் முன்னணி. இப்படியிருக்க.. இப்படியே நமக்கான தயாரிப்பாளர்களை எதிர்பார்ப்பதைவிட, நாமளே தயாரிப்பாளர்களாக ஆனால் என்ன என்று யோசித்திருக்கிறார்கள் போலும்..!

எல்லா நட்சத்திரங்களுக்கும் வரக்கூடிய அதே வியாதிதான் இவர்களுக்கும் வந்திருக்கிறது. தயாரிப்பாளர்களாக உருவெடுத்துவிட்டார்கள். தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு Game Changer Entertainment என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இவர்களுடைய முதல் தயாரிப்பை இயக்கப் போவது இயக்குநர் பாண்டிராஜிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய லஷ்மி ராமு என்பவர் இயக்கப் போகிறாராம்.

மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.. முதல்முறையாக ஒரு துணிச்சலுடன் களத்தில் குதித்திருக்கும் இந்த நட்சத்திரத் தம்பதிகளை வாழ்த்தி வரவேற்கிறோம்..!