‘சிக்ஸர்’ படத்துக்காக ஜிப்ரான் இசையில் பாடிய அனிருத்..!

‘சிக்ஸர்’ படத்துக்காக ஜிப்ரான் இசையில் பாடிய அனிருத்..!

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.ரவீந்திரனுடன் இணைந்து வால்மேட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்காக தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சிக்ஸர்’.

இந்தப் படத்தில் வைபவ் நாயகனாகவும், பாலக் லால்வானி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநரான சாச்சி எழுதி, இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜோமின் (படத்தொகுப்பு), பசார் என்.கே.ராகுல் (கலை), சாம் மற்றும் ராம்குமார் (சண்டைப் பயிற்சி), ஜி.கே.பி, லோகன் மற்றும் அனு (பாடல்கள்), என்.ஜே.சத்யா மற்றும் கீர்த்தி வாசன் (ஆடை) ஆகியோர் தொழில் நுட்பக் கலைஞர்களாகப் பணி புரிந்திருக்கிறார்கள்.

பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கும் ‘சிக்ஸர்’ படத்தில் இன்னொரு இசையமைப்பாளரான அனிருத் ஒரு துள்ளலான ராப் பாடலை பாடியிருக்கிறார்.

IMG_5556

இசையமைப்பாளர் ஜிப்ரான் இது குறித்து கூறும்போது, “இது எனக்கு ஒரு புதிய மற்றும் புதுமையான அனுபவம். முதலாவதாக, சகோதரர் சிவகார்த்திகேயன், லோகன் எழுதிய ஒரு புதுமையான ‘லவ் கானா’வை பாடிக் கொடுத்தார். இப்போது,  அனிருத் ஒரு ராப் பாடலை பாடியிருப்பது ஆல்பத்தை இன்னும் உயர்த்தியுள்ளது.

SFTS7813 (1)

மிகவும் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த போதிலும், அவரது பணிவான இயல்பு மற்றும் தன்னார்வத்துடன் மிகச் சரியாக பாடிக் கொடுக்க அவர் எடுக்கும் முயற்சி என்னை ஆச்சரியப்படுத்தியது.

இது குழுவில் உள்ள எங்களுக்கு மட்டுமல்லாமல், பாடலை கேட்கும் அனைவருக்கும் அற்புதமான ஒன்றாக இருக்கும் என நான் உறுதியாக இருக்கிறேன். இதை நான் செய்த வேலைக்காக சொல்லவில்லை. அனிருத் பாடியதைப் பார்த்த நம்பிக்கையுடன் சொல்கிறேன்…” என்றார்.

SFTS7812

இந்த ‘சிக்ஸர்’ படத்தின் முதல் தோற்றம் ரசிகர்களிடையே ஒரு உடனடி ஆர்வத்தை உருவாக்கியது. அதை தொடர்ந்து விலா நோக சிரிக்க வைத்ததோடு, வேடிக்கையான ஒரு கதை வளாகத்திற்குள் நம்மை அழைத்து சென்றது படத்தின் டீசர். அதற்குப் பிறகு சிவகார்த்திகேயனின் ‘லவ் கானா’ பாடல் கூடுதல் சுவையை ஊட்டியது. இப்போது அனிருத்தின் குரல் சேர்க்கப்பட்ட நிலையில், ஒரு வெற்றித் திரைப்படத்திற்கான அம்சமாகவே தெரிகிறது.

தற்போது “சிக்ஸர்” திரைப்படம் அதன் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகளில் இருக்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.




error: Content is protected !!