சிவாஜிகணேசன் சிலையை அடுத்த மாதம் 16-ம் தேதிக்குள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சிவாஜிகணேசன் சிலையை அடுத்த மாதம் 16-ம் தேதிக்குள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை கடற்கரை சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை வரும் நவம்பர் 16-ம் தேதிக்குள் அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சிக காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே சிலை அமைக்கப்பட்டது.

இந்த சிலை அந்தச் சாலையின் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருப்தாகக் கூறி பொது நலன் வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் ஆரம்பத்திலேயே சிவாஜி சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக தமிழக அரசே பதில் மனு தாக்கல் செய்து ஒத்துக் கொண்டது. சிலையை அகற்ற கால அவகசம் கேட்டிருந்தது.

இந்த நிலையில் சென்ற மாதம் சட்டப் பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா சிவாஜிக்கு மணிமண்டபத்தை தமிழக அரசே தன் செலவில் கட்டித் தரும் என்றார். 

இதற்குப் பின்னர் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிவாஜியின் மணி மண்டபத்திற்கு சிவாஜியின் சிலை கொண்டு செல்லப்படும் என்றும் அதுவரையில் சிலையை அகற்ற கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. ஆனால் நீதிபதிகள் அதனை ஏற்க மறுத்து உடனடியாக சிலையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இப்போதுவரையிலும் சிலை அகற்றப்படாத நிலையில், இந்த வழக்கு இன்றைக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைக்கு தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேரில் ஆஜராகி சிலையை அகற்ற மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டார். ஆனால் நீதிபதிகள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. 

அடுத்த மாதம் 16-ம் தேதிக்குள் சிலையை அகற்றி அதற்கான அறிக்கையை இந்தக் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதோடு வழக்கையும் அடுத்த மாதம் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.




error: Content is protected !!