“சிவாஜிகணேசன் சிலை மணிமண்டபத்திற்கு டிரான்ஸ்பர்..” – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்..!

“சிவாஜிகணேசன் சிலை மணிமண்டபத்திற்கு டிரான்ஸ்பர்..” – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்..!

அடையாறில் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டி முடித்தவுடன், மெரினா கடற்கரை முன்புள்ள நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அங்கு இடமாற்றம் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

sivaji ganesan statue-1

சென்னை திருவல்லிகேணியை சேர்ந்தவர் நாகராஜன் என்பவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மெரீனா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக ஒத்துக் கொண்ட தமிழக அரசு சிலையை அகற்ற கால அவகாசம் கேட்டிருந்தது.

அப்படியிருந்தும் சிலை அகற்றப்படாததால்  அவர் மீண்டும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில், “சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள, காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சிவாஜிகணேசனின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த இந்த நீதிமன்றம், சிவாஜி சிலையை அகற்றுவது குறித்த என்னுடைய கோரிக்கையை பரிசீலிக்கவேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 230ம் தேதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். “ என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலாளர் எம்.ராஜாராம் பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “இந்த உயர்நீதிமன்றத்தின் மீது உயர்ந்து மரியாதையும், மதிப்பும் கொண்டுள்ளேன். ஒருபோதும், இந்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்தது கிடையாது. காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், மெரினா கடற்கரைக்கு எதிர்புறம் நிறுவப்பட்டுள்ள நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அகற்றக் கோரி மனுதாரர் நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சிலையை அகற்றுவது குறித்து தமிழக அரசு விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு, அடையாறு ஆந்திர மகிளா சபா அருகில் மணிமண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆகஸ்டு 26-ம் தேதி சட்டசபையில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்துக்கு, சுற்றுலாத் துறை ஒதுக்கியுள்ள 65 சென்ட் நிலத்தில், இந்த மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. 

அந்த மணிமண்டபம் கட்டப்பட்டவுடன், அந்த இடத்துக்கு மெரினா கடற்கரை எதிரே உள்ள நடிகர் சிவாஜிகணேசன் சிலை மாற்றப்படும். இந்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த காலதாமதம் ஆவதற்கு நிர்வாக பணிதான் காரணமே தவிர, வேறு எந்த ஒரு உள்நோக்கமும் அரசுக்கு கிடையாது. எனவே, இந்த கோர்ட்டு அவமதிப்பு மனுவை முடித்து வைக்க வேண்டும்…” என்று சொல்லியிருக்கிறார்.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜியிடம், “சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டும் பணி எப்போது தொடங்கப்படும்?, அந்த பணி எப்போது முடிவடையும்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, இது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அட்வகேட் ஜெனரல் கூறினார்.  இதையடுத்து மனு மீதான விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது சிவாஜி சமூக நலப் பேரவையின் சார்பில் வக்கீல் பிரபாகரன் ஆஜராகி, “இந்த சிலை அகற்றம் குறித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும்…” என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை வருகிற 21-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.  




error: Content is protected !!