‘சிங்கம்-3’ தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமை 41 கோடியா..?

‘சிங்கம்-3’ தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமை 41 கோடியா..?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சிங்கம்-3' படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமை இதுவரையிலும் சூர்யா படங்களுக்குக் கொடுக்கப்படாத அளவுக்கு விற்பனையாகியிருக்கிறதாம்.

இந்த 'சிங்கம்-3' திரைப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். 'சிங்கம்-2'-ல் நடித்த மற்ற நடிகர், நடிகையர் இதிலும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

'சிங்கம்-2' திரைப்படம் 2013-ம் ஆண்டு வெளியாகி வசூலை வாரிக் குவித்திருப்பதால் இந்தப் படத்திற்கும் ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.  

படத்தின் ஷூட்டிங் இப்போது விசாகப்பட்டிணத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. இன்னமும் படமே தயாராகி முடியாத நிலையிலும் படம் விற்பனையாகிவிட்டதாம்.

'சிங்கம்-3' படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமை மட்டும் 41 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருப்பதாக கோடம்பாக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த அளவு தொகை இதுவரையிலும் அஜீத், விஜய் படங்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கின்றன. சூர்யா படங்களைப் பொறுத்தவரையில் இதுவொரு சாதனை அளவுதான்..!