விஜய் சேதுபதியும், அவரது மகனும் இணைந்து நடித்திருக்கும் ‘சிந்துபாத்’ திரைப்படம்..!

விஜய் சேதுபதியும், அவரது மகனும் இணைந்து நடித்திருக்கும் ‘சிந்துபாத்’ திரைப்படம்..!

‘பாகுபலி-2’ திரைப்படத்தை வெளியிட்டவரும், ‘ப்யார்  ப்ரேமா காதல்’ திரைப்படத்தை தயாரித்தவருமான  K புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் S.N.ராஜராஜனும், ‘சேதுபதி’ திரைப்படத்தை தயாரித்த வான்சன் மூவிஸ், ஷான் சுதர்ஷனும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சிந்துபாத்’.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், அஞ்சலி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, படம் முழுவதும் வரும் மிக முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார்.

‘சேதுபதி’ திரைப்படத்தில் சப்-இன்ஸ்பெக்டராக நடித்த லிங்கா, இப்படத்தில் தாய்லாந்தை சேர்ந்த வில்லனாக நடித்துள்ளார்.

‘சேதுபதி’யில் நடித்த நடிகர் விவேக் பிரசன்னாவும் முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் ஜார்ஜ் நடித்துள்ளார். பட ரிலீசுக்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் ஜார்ஜ் கூட்டணி ரசனையான பேசு பொருளாக மாறும். மேலும் மலேசியாவை சேர்ந்த நடிகர்கள் கணேசன் மற்றும் சுபத்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதன் முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தனது தந்தையுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, அது ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தையும் மகனுமாக நடிக்கவில்லை என்றாலும், இருவரின்  கதாபாத்திரமும் அவர்களிடையே நிலவும் ஒரு உன்னதமான தனித்துவ உறவுநிலையை பிரதிபலிக்கிறது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய இரண்டு வெற்றிப் படங்களுக்கு பிறகு இயக்குநர் S.U.அருண்குமாருடன் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி இந்த ‘சிந்துபாத்’ படத்தில் இணைந்திருக்கிறார்.

இயக்குநர்  S.U.அருண்குமார் ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்திற்கு பிறகு வேறுபட்ட கதைக் களத்தில் ‘சேதுபதி’ திரைப்படத்தை இயக்கியதைப் போல தனது மூன்றாவது படமான இந்த ‘சிந்துபாத்’ படத்திலும் முற்றிலும் வேறுபட்ட புதிய கதைக் களத்தைத் தொட்டுள்ளார்.  

ஒரு எளிய மனிதன் தன்னுடைய எளிமையான வாழ்க்கையை வாழ, இந்தச் சமூகம் எவ்வளவு பெரிய தடையாக உள்ளது என்பதையும் அதற்கு தீர்க்கமான தீர்வையும் பேசும் படமாக உருவாகியுள்ளது இந்த ‘சிந்துபாத்’ திரைப்படம்.

நாயகி அஞ்சலி நீண்ட நாட்களுக்கு பிறகு வலிமையான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அஞ்சலிக்கும், விஜய் சேதுபதிக்குமான காதல் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளன. அஞ்சலியின் நடிப்பு இத்திரைப்படத்தில் பெரிதாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி இப்படத்தில் சற்றே காது கேளாத சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபடுபவராக, ஒரு முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஒரு பெண்ணை மையப்படுத்தியே இப்படத்தின் கதை சுழலுதால், அஞ்சலியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.

லிங்கா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தின் தேவையறிந்து தனது எடையை 20 கிலோ அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், ‘தாய்’ மொழியையும் கற்றுக் கொண்டு, வசனம் பேசி அசத்தியிருக்கிறார்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, மற்றும் தென்காசியில் படமாக்கப்பட்டு, 52 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. ‘தாய்’ மொழியில் டப்பிங் இருந்ததால், தாய்லாந்திலேயே அந்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் நிறைந்த படமென்பதால், ஹாலிவுட் சண்டைகாட்சியமைப்பு வல்லுனர் ‘பிரதித் சீலம்’ என்ற ‘நுங்’ இப்படத்தில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் சுமார் ஒன்பதரை நிமிடங்கள் ‘சிங்கிள் ஷாட் சீக்வன்ஸ்’ மூலம் படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி அமைப்புக்கென பிரத்யேகமாக 100-க்கும் மேற்பட்ட தாய்லாந்து இளநிலை கலைஞர்களும், இந்திய கலைஞர்களும் ஒன்றிணைந்து, பல ஒத்திகைகளுக்கு பின்னர் காட்சிப்படுத்தியிருப்பது ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் டீசர் வெளியானது முதல், படத் தொகுப்பாளர் ரூபனின் புதிய அணுகுமுறை மக்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜாவின் மனதிற்கினிய பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் வித்தியாசமான கோணங்களில் சண்டை காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கும்விதமாக அமைந்திருக்கிறது.

எதிர்வரும் ஜூன் 21-ம் தேதி, ‘சிந்துபாத்’ உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.




error: Content is protected !!