‘மாநாடு’ படத்தில் இருந்து சிம்பு டிஸ்மிஸ்..!

‘மாநாடு’ படத்தில் இருந்து சிம்பு டிஸ்மிஸ்..!

“நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தொடங்கவிருந்த ‘மாநாடு’ படத்தை சிம்புவை வைத்து தயாரிக்கப் போவதில்லை” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’ ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’, தற்போது ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தை தயாரித்துள்ளது.

இதற்கடுத்த திரைப்படமாக இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பில், ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிப்பதாக சென்ற ஆண்டே அறிவித்திருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருந்தார். இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கவிருந்தார்.

maanaadu-movie-poster-2

முழுக்க, முழுக்க அரசியல் கதைக் களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப் படம் உருவாகப் போவதாக அறிவித்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இதுதான் என்று பெருமையாகச் சொன்னார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்தப் படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்களாகியும் படம் துவக்கப்படவே இல்லை. இத்தனைக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் வெளியீட்டுக்கு முன்பாகவே இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிவிட்டது.

இதனால் ‘படம் அவ்வளவுதான். டைட்டில் அறிவிப்போடு கைவிடப்பட்டது..’ என்றெல்லாம் சில செய்திகள் பரவி வந்தன. ஆனால் இதை மறுத்த தயாரிப்புக் குழு சென்ற மாதம், ஜூன்-25-ம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் ‘மாநாடு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும், பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் இங்கே படமாக்கப்பட உள்ளதாகவும் செய்தியை வெளியிட்டன.

maanaadu-movie-poster-3

ஆனால் அப்போதும் துவக்கப்படவில்லை. நடிகர் சிம்பு திடீரென தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க வெளிநாடு சென்றுவிட்டதால் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த இடைவெளியில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் வெப் சீரிஸை இயக்கப் போவதாகச் சொல்லிவிட்டு அவரும் கிளம்பிவிட்டார்.

இந்த நிலையில் சிம்பு எப்போது திரும்பு வருவார்..? எந்த மாதத்தில் கால்ஷீட் தருவார்..? எப்போது படப்பிடிப்பைத் துவக்கலாம்..? என்கிற தெளிவாக விஷயங்களே தெரியாத நிலையில் இன்னமும் சிம்புவுக்காக காத்திருப்பது முட்டாள்தனம் என்பதை உணர்ந்த படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி, இன்றைக்கு அதிரடியாக முடிவெடுத்து சிம்புவை ‘கெட் அவுட்’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.

இனி ‘மாநாடு’ கதை வேறொரு நடிகரை வைத்து வெங்கட் பிரபுவின் இயக்கத்திலேயே தயாரிக்கப்படும் என்று சூசகமாகச் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

str-and-venkat-prabhu

இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“வணக்கம்…

நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..

மிக, மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து ‘மாநாடு’ படத்தை எடுக்க என்னை தூண்டி… துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் காலமும், நேரமும் கடந்து கொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக் கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன்… அந்தத் தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர, படத்தைத் தொடங்க இயலவில்லை.

அதனால் சிம்பு ‘நடிக்க இருந்த’ ‘மாநாடு’ படத்தினை கை விடுவதைத் தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும், நட்பும் தொடரும்.

இதுவரை என் மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

வெங்கட் பிரபு இயக்க ‘மாநாடு’ படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும்.

விரைவில் அந்த அறிவிப்பு வரும்.

அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!

  • சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்

‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது’ என்கிற கதையாக இப்போதாவது முழித்துக் கொண்டாரே தயாரிப்பாளர்..!

நல்லவேளை.. பிழைத்துக் கொண்டீர்..! வாழ்த்துக்கள்..!
error: Content is protected !!