சமுத்திரக்கனி – சுனைனா நடிப்பில் உருவாகும் ‘சில்லு கருப்பட்டி’

சமுத்திரக்கனி – சுனைனா நடிப்பில் உருவாகும் ‘சில்லு கருப்பட்டி’

சமுத்திரகனி – சுனைனா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘சில்லு கருப்பட்டி’. இந்தப்  படத்தை   டிவைன் ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் வெள்ளினேனி தயாரிக்கிறார்.

திரை உலகில் தற்போது  ‘அந்தாலஜி’  என்று அழைக்கப்படும் ஒரு சில குறும் படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது.

‘பூவரசம்  பீ.. பீ’ என்ற படத்தை இயக்கிய பெண் இயக்குநர் ஹலீதா ஷமீம்  தற்போது இயக்கி வரும்  ‘சில்லு கருப்பட்டி’ திரைப்படம் இந்த வகையை சேர்ந்தது.

இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு கதைகள் உள்ளன. அதிலொரு கதையில்தான் சமுத்திரக்கனி -சுனைனா ஜோடி ஒரு நடுத்தர வயது தம்பதியராக நடித்து உள்ளனர்.

நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும்  ஒரு சராசரி தம்புதியனரின் வாழ்வியல் முறையை பதிவு செய்யும்  அத்தியாயம் இவர்களுடையது. இவர்களுடன் ‘ஓகே கண்மணி’ படத்தின் மூலம் பிரபலமான லீலா சாம்சன் ஒரு கதையிலும், தெய்வ திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழேணியின் உச்சத்தில் இருக்கும் சாரா அர்ஜுன் ஒரு கதையிலும் நடிக்கிறார்.

நிவேதிதா சதிஷ் -மணிகண்டன் ஆகியோர் ஒரு கதையிலும் நடித்து உள்ளனர். இவர்களுடன் க்ராவ் மகா ஸ்ரீராம், ராகுல் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். 

இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் நான்கு வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி உள்ளனர்.  மனோஜ் பரமஹம்ஸா, அபிநந்தன் ராமானுஜம், யாமினி யஙனமூர்த்தி, விஜய் கார்த்திக் ஆகியோர் தங்களது தனித்திறமைகளை தங்களுக்கு அளிக்கப்பட்ட பகுதிகளில் திறம்பட  வெளிப்படுத்தி உள்ளனர். பிரதீப் குமார் இசை அமைத்திருக்கிறார்.

“இந்தப் படம் அனைத்து  தரப்பினரும் ரசித்து பார்க்கும் படமாக இருக்கும்..” என்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமிம்.