நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை – அ.தி.மு.க. அரசின் உள்ளடி வேலை..!

நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை – அ.தி.மு.க. அரசின் உள்ளடி வேலை..!

எதிர்பார்த்தது போலவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலுக்கு மறைமுகமாக தமிழக அரசு தடை விதித்துவிட்டது.

தென் சென்னை பகுதியின் சங்கங்களின் பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் பட்டியல் இன்னமும் இறுதி செய்யப்படாததாலும், சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களின் நிலைமை குறித்து பதிவாளர் இறுதி முடிவு எடுக்க வேண்டியிருப்பதாலும், சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைந்த பின்பு தேர்தல் நடத்த நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருப்பதாலும் நடக்கவிருந்த தேர்தலை நிறுத்தி வைப்பதாக சங்கங்களின் பதிவாளர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று தவறுகளையும் செய்ததே நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள்தான்.

siaa-election-stop-registeror-order-1

முதல் பிரச்சினை, நடிகர் சங்கத்தில் இருந்து வெளியிடப்பட்ட தேர்தல் விதிமுறை 3-ன்படி “தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் தயார் செய்த உறுப்பினர் பெயர் பட்டியலில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே சங்கத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இத்தேர்தலில் போட்டியிடலாம். வேட்பு மனுவினை தாக்கல் செய்யலாம். முன் மொழியலாம். வழி மொழியலாம். வாக்கும் அளிக்கலாம்.” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

siaa-election-stop-registeror-order-2

பொதுவாக பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் அனைத்தும் வருடா வருடம் தங்களது உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை இ-பார்ம் எனப்படும் படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அந்தப் பெயர்ப் பட்டியலை பிரச்சினைகள் இல்லையெனில் பதிவாளர் அலுவலகம் அப்படியே ஏற்றுக் கொள்ளும்.

இதேபோல் சங்கங்களின் தேர்தல் நடவடிக்கையின்போது வாக்காளர் பட்டியலுக்கு சங்கப் பதிவாளரின் அனுமதியோ, அங்கீகாரமோ தேவையில்லை என்பதே இப்போதைய நிலைமை. ஆனால் தற்போதைய நடிகர் சங்க நிர்வாகிகள் நீக்கப்பட்ட உறுப்பினர்கள் போட்டியிட வந்தால் அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டி, சங்கப் பதிவாளர் அங்கீகரித்த உறுப்பினர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.. வாக்களிக்க முடியும் என்று வாலண்டியராக தேர்தல் விதிமுறையில் சொல்லி வைக்க.. இதுவே அவர்களுக்கு எதிராக அமைந்துவிட்டது.

இதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் பதிவாளர், “இந்தப் பெயர்ப் பட்டியல் 2017-2018-ம் ஆண்டு கணக்குப்படி தாக்கல் செய்யப்பட்டு, பதிவு அலுவலகத்தின் பரிசீலனைக்காக இன்னமும் உள்ளதால், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை…” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

வாக்காளர் பட்டியலுக்கு தான் இன்னமும் ஒப்புதல் தராததால் தேர்தல் நடத்த முடியாது என்று பதிவாளர் சொல்லியிருக்கும் கருத்து நூற்றுக்கு நூறு ஏற்புடையதே. இது நீதிமன்றம் சென்றாலும் பதிவாளர் தரப்புக்கே சாதகமாக அமையும். 

அடுத்து சங்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட 61 உறுப்பினர்களும் கடந்த ஜூன் 6-ம் தேதியன்று சங்கப் பதிவாளரிடம் தங்களது நீக்கம் சட்ட விரோதமானது என்று புகார் அளித்துள்ளனர்.

siaa-election-stop-registeror-order-3

அவர்களது புகாருக்கு பதில் அளிக்கும்படி பதிவாளர் அலுவலகம் நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 13-ம் தேதியன்று பதிவாளர் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

இந்தக் கடிதத்திற்கு ஜூன் 17-ம் தேதியன்று பதில் அளித்திருக்கும் நடிகர் சங்க நிர்வாகிகள், “அனைத்து உறுப்பினர்களின் உறுப்பினர் அட்டைகளையும் பரிசோதித்து, பரிசீலித்தோம்.

இவர்களில் 44 பேர் தொழில் முறை நடிகர்கள் என்ற பட்டியலில் இருந்து தொழில் முறை இல்லாத நடிகர்கள் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

4 பேர் மீது சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களை சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.

13 பேர் தொழில் முறை நடிகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள்.

இவர்கள் மனு தொடர்பாக பதிவாளரே அவர்களிடத்தில் நேரில் விசாரித்து உண்மையறிந்து எந்த முடிவைச் சொன்னாலும் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயார்..” என்று தங்களது பதிலில் சங்க நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள்.

இதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பதிவாளர், “இவர்கள் மீதான மனுக்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கும்வரையிலும் தேர்தல் நடத்தக் கூடாது” என்று சொல்லியிருக்கிறார்.

இந்தப் பிரச்சினையில் “பதிவாளரே விசாரித்து சொன்னால் ஏற்றுக் கொள்கிறோம்…” என்று நிர்வாகிகள் ஏன் சொல்ல வேண்டும்..? பதிவாளர் இந்தப் பிரச்சினையை விசாரித்து முடிக்க சில மாதங்களாகும். அதற்குள்ளாக தேர்தலை நடத்திவிடலாம் என்று சங்க நிர்வாகிகள் கணக்குப் போட்டார்கள்.

ஆனால் அரசியல்வியாதிகளுக்கு ஊதுகுழலாக இருக்கும் அதிகாரிகள் இது போன்று எத்தனை அரசியல் களங்களைக் கண்டிருப்பார்கள்..? நிர்வாகிகள் சொன்ன பதிலை வைத்தே அவர்களது ஆட்டத்தைத் துவக்கிவிட்டார்கள். இதுவும் நீதிமன்றத்திற்குச் சென்றால் நிச்சயம் பதிவாளர் தரப்புக்குச் சாதகமாகத்தான் முடியும்..!

மூன்றாவது பிரச்சினை தற்போதைய நிர்வாகிகளுக்கு சங்கத்தின் தேர்தலை நடத்தத் தகுதி இருக்கிறதா.. இல்லையா..  என்பது..!

2015-2018-ம் ஆண்டுக்கான நிர்வாகிகளின் பதவிக் காலம் சென்ற 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதமே நிறைவடைந்துவிட்டது. ஆனால் 2018 ஆகஸ்ட் 19-ம் தேதியன்று நடைபெற்ற சங்கத்தின் 65-வது பொதுக் குழுக் கூட்டத்தில் நடிகர் சங்கக் கட்டிடம் இன்னமும் முழுமையடையாததால் இப்போதைய நிர்வாகிகளின் பணிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது 2019 ஏப்ரல் வரையிலும் நீட்டித்து பொதுக் குழுவில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அத்தீர்மானமும் நிறைவேறியுள்ளது.

“ஆனால், 2019 ஏப்ரல் மாதம் முடிவதற்குள்ளாக தேர்தலை நடத்தியிருக்க வேண்டியவர்கள், அதையும் கடந்து 2 மாதங்கள் கழித்து இப்போது தேர்தலை நடத்துவதால் தேர்தல் நடத்தும் தகுதி இப்போதைய நிர்வாகிகளுக்கு இருக்கிறதா என்பதை பதிவாளர் அலுவலகம் முடிவு செய்ய வேண்டியிருப்பதாலும், தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க ஆணையிடுவதாக…” பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

அட்லீஸ்ட் ஏப்ரல் மாதத்திற்குள்ளாக இந்தத் தேர்தலை தற்போதைய நிர்வாகிகள் நடத்தியிருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது. ஆனால் பதவிக் காலம் முடிந்து 2 மாதங்கள் கழித்து தற்போது பதவியில் நீடிக்க வழியே இல்லாத நிலையில் தேர்தலை நடத்த முன் வந்தால் பதிவாளர் இப்படித்தான் கேட்பார்.

இந்தப் பிரச்சினையும் நீதிமன்றத்தில் பதிவாளர் தரப்புக்கு சாதகமாகவே முடியும்.

ஆக மொத்தத்தில் தாங்கள் செய்த தவறுகளினாலேயே “தேர்தல் ஒத்தி வைப்பு” என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் இப்போதைய நிர்வாகிகள்.

பதிவாளரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் அலுவலர் நீதியரசர் பத்மநாபனும் அறிவித்துவிட்டார்.

siaa-election-stop-registeror-order-4

பதிவாளரின் இந்த உத்தரவுக்கு எதிராக விஷால் அணியினர் நாளை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவுள்ளனர்.  

ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அடையாறு ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்தினால் எங்களால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாது என்று காவல்துறை அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து நடிகர் சங்கத்தினர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து அந்த வழக்கும் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி இரு நாட்களுக்கு முன்பேயே “ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்த அனுமதியில்லை. வேறு இடம் சொல்லுங்கள்” என்று சொல்லி வழக்கினை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார்.

IMG_7648

அதற்குள்ளாக இன்றைக்கு சங்கங்களின் பதிவாளர் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுவிட்டதால் இப்போதைக்கு இந்த வழக்கு விசாரணை தேவையில்லை என்பதால் இந்த வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார் நீதிபதி.

ஆக மொத்தத்தில், தமிழக அரசின் அனைத்துத் துறையினரும் போட்டி போட்டுக் கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் உள்ளடி வேலை பார்ப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

இதற்கெல்லாம் ஒரே காரணம் நடிகர் விஷால்தான். விஷால் மட்டுமே. அவர் மட்டும் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிப் போயிருந்தால், இன்னொரு அணியும் உருவாகியிருக்காது. தேர்தலும் தள்ளிப் போயிருக்காது.

சரத்குமார், ராதாரவியை எதிர்த்து மிகவும் கஷ்டப்பட்டு போராடி நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்றிய விஷால் மீது அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவுக்குக்கூட பெரிய அபிப்ராயம் ஏதுமில்லை. வந்துவிட்டுப் போகிறார்கள் என்பதாகத்தான் அவர் நடந்து கொண்டார்.

ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விஷால் போட்டியிட்டதுதான் பிரச்சினையின் ஆரம்பப் புள்ளி. அந்தத் தேர்தலின்போதே விஷாலின் வேட்பு மனுவை திட்டமிட்டு போலீஸாரை வைத்து நாடகமாடி தள்ளுபடி செய்தது ஆளும் கட்சி. இதனால் கோபமடைந்த விஷால், சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஆளும் கட்சியை விளாசிக் கொண்டிருந்தார்.

IMG_7639

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்திலும் பிரச்சினை என்று சொல்லி அங்கேயும் தான் தலைவராக நின்று ஜெயித்தார் விஷால். நடிகர் சங்கத்தில் செயலாளராக இருப்பவர் தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவராவது இதுதான் முதல் முறை என்றாலும் பிரச்சினைகளை பேசித் தீர்க்கும்போது சங்கடங்கள் ஏற்படும் என்று தயாரிப்பாளர்கள் பலரும் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் விஷால் பிடிவாதமாக நின்று ஜெயித்தார்.

கியூப் நிறுவனத்தின் திரைப்பட வெளியீட்டுக் கட்டணங்களை குறைக்கச் சொல்லி திடுதிப்பென்று ஸ்டிரைக் அறிவித்து தயாரிப்புகளை நிறுத்தினார் விஷால். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் ஸ்டிரைக் முடிந்த பின்பும் தமிழகத்தில் ஸ்டிரைக்கை வாபஸ் பெறாமல் தொடர்ந்து நடத்தினார் விஷால்.

இதனால் தமிழக அரசுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை அழைக்குமாறு சொல்லி உட்படுத்தினார். இதுவும் ஆட்சியாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க.. இதுவும் அமைச்சர் முன்னிலையில் பஞ்சாயத்தானது.

இத்தனைக்குப் பிறகும் அவ்வப்போது ஆட்சியாளர்களை சீண்டிக் கொண்டிருந்தவர், தற்போதைய ஆளும் கட்சி புதிய தொலைக்காட்சியைத் துவக்கியபோது “தொலைக்காட்சியைத் துவக்க பணம் எங்கேயிருந்து வந்தது.. ஆளும் கட்சி, அமைச்சர்கள் கையில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமே?” என்று நக்கல் தொனியில் விஷால் சொல்ல.. இதற்கு ஆளும் கட்சியின் பத்திரிகையில் விஷாலை திட்டித் தீர்த்திருந்தார்கள்.

இதனாலேயே விஷாலை குறி வைத்திருந்த ஆளும் கட்சி கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினையைக் கையில் எடுத்தது. தயாரிப்பாளர் சங்கத்தின் கிளை அலுவலமாக இருந்த தி.நகர் அலுவலகத்தை சில தயாரிப்பாளர்கள் பூட்டிவிட.. பூட்டைத் திறக்க வந்த விஷாலை அனுமதிக்க மறுத்த போலீஸார், அந்த அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சீல் வைத்தார்கள்.

விஷால் நீதிமன்றம் சென்று போராடித்தான் சீலை உடைத்து அலுவலகத்தைத் திறந்தார். ஆனாலும் அவரது சந்தோஷம் நிலைக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைய குளறுபடிகள் இருப்பதாகச் சொல்லி இப்போதைய நிர்வாகத்தையே கலைத்துவிட்டு பதிவாளர் மூலமாக தயாரிப்பாளர் சங்கத்தை அ.தி.மு.க. அரசே கைப்பற்றியது.

இப்படி மோதல் போக்கு தொடர்ந்திருக்கும் சூழலில்தான் விஷால் மறுபடியும் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்கப் போவதை அறிந்து அதைத் தடுக்க வேண்டும் என்று ஆளும் அ.தி.மு.க. அரசு நினைத்துவிட்டது.

அதற்குக் காரணம், விஷாலின் அருகில் இருக்கும் தி.மு.க. உறுப்பினரான பூச்சி முருகன் மற்றும் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனாலும் இப்போதை ஆட்சிக்கு எதிரணியில் இருக்கும் கருணாஸ் ஆகிய இருவரும்தான்.

ஏற்கெனவே ரஜினி, கமல் முதற்கொண்டு யாருமே தங்களை சட்டை கூட செய்யவில்லை என்ற கோபத்தில் இருக்கிறார்கள் தற்போதைய ஆளும் இரட்டையர்களான எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸூம். சூப்பர் ஸ்டார்களே நம்மை கண்டு கொள்ளவில்லை என்பதால் தமிழ்த் திரைப்பட துறையில் தங்களுக்குரிய மரியாதை கிடைக்காமல் இருக்கிறது என்பதை கண்டு உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருக்கிறது ஆளும் அரசு.

இதனை இப்படியேவிட்டுவிட்டால் கடைசியாக தாங்கள்தான் ஆளும் கட்சி என்பதையே சினிமாவுலகத்தினர் மறந்துவிடுவார்கள் என்பதையெல்லாம் யோசித்துதான் இந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினரை தோற்கடிப்பது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறது ஆளும் கட்சி.

இதன் முதல்கட்டமாக நடிகர் சங்கத்தில் குழப்பத்தைக் கொண்டு செய்ய முயற்சித்த ஆளும் கட்சியினர் விரித்த வலையில் முதலில் சிக்கியவர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். எப்போதோ 2, 3 படங்களில் நடித்து, அதனாலேயே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் அட்டையை வாங்கி வைத்திருக்கும் ஐசரி கணேஷ், இப்போது பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

bhagyaraj-team-6

நடிகர் சங்கத்தின் முந்தைய தேர்தலில் விஷாலின் வெற்றிக்கு பெரும் உதவியாய் இருந்த ஐசரி கணேஷ் சில பிரச்சினைகள் காரணமாக சமீப காலமாக அவரிடமிருந்து பெரிதும் விலகியிருந்தார். இந்த விலகலை தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஆளும் ஆரசு ஐசரி கணேஷ் மூலமாகவே விஷால் மீது யாரெல்லாம் கோபத்தில் இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் வலைவீசிப் பிடித்து ‘சுவாமி சங்கரதாஸ் அணி’ என்கிற பெயரில் தனி அணியாக உருவாக்கிவிட்டது.

இரண்டு அணியினரும் போட்டி போட்டுக் கொண்டு ஊர், ஊராகச் சென்று தேர்தலுக்காக வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். இருந்தும், “தற்போதைய நிலவரப்படி தேர்தல் நடந்தால் பாண்டவர் அணிதான் ஜெயிக்கும்” என்ற உளவுத் துறையின் தகவலால், அதிர்ச்சியடைந்த ஆளும் கட்சியின் தலைமை தேர்தலே நடத்தாமல் செய்யும்படி தனது டீமுக்கு உத்தரவிட்டது.

இதன்படிதான் ஜானகி மகளிர் கல்லூரியில் முறைப்படி அனுமதி வாங்கி, பணம் கட்டி வெளிப்படையாக அறிவிப்பும் செய்த 20 நாட்கள் கழித்து காவல்துறையினர் அதற்கு அனுமதி மறுத்தனர். இதை முன்பேயே அவர்கள் சொல்லியிருக்கக் கூடாதா..? என்று கேட்கலாம். ஆனால், அப்போது இதற்கான திரைக்கதை எழுதப்படவில்லை.

paandavar-team-poster-1

அதோடு நேற்றைய வழக்கு விசாரணையின்போது “தேர்தல் நிறுத்தப்படாது. ஜானகி கல்லூரியைத் தவிர வேறு இடத்தைத் தேர்வு செய்யுங்கள்..” என்று நீதிபதியே சொல்லிவிட்டதால், இன்றைய வழக்கு விசாரணையில் தேர்தலுக்கு தடை நீங்கிவிடும் என்கிற நிலைமையும் இருந்ததது.

இதனாலேயே அவசரம், அவசரமாக பதிவாளரை வைத்து தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தும்படி உத்தரவை பிறப்பித்துவிட்டது ஆளும் கட்சி. இவர்கள் இந்த உத்தரவினை பிறப்பிக்கும் நேரத்தில் விஷால் தலைமையில் ஒரு அணி தமிழக கவர்னர் மாளிகையில் கவர்னரை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்துக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில், எஸ்.வி.சேகரின் ஏற்பாட்டில் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை பதிவாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்து தேர்தலை நிறுத்தவும் ஒரு சதிவேலை முன்பேயே நடந்து கொண்டிருந்தது. இதனால்தான் எஸ்.வி.சேகர் நான்கு நாட்களுக்கு முன்பாகவே “நடிகர் சங்கத் தேர்தல் நிச்சயமாக நடக்காது” என்று உறுதிபடச் சொல்லியிருந்தார். அது இன்றைக்கு நடந்தேறிவிட்டது. அவரும் இந்தச் சூழ்ச்சியில் ஒருவராகவே இருக்கிறார்.

இனி என்ன ஆகும்..?

விஷால் அணியினர் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கலாம். பதிவாளரின் முடிவை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டால்..

பதிவாளர் அலுவலகம் என்றைக்கு அந்த மூன்று பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி தனது முடிவைச் சொல்லுமோ, அதுவரையிலும் சங்கம் இப்போது இருப்பது போலவே இருக்கலாம்.

அல்லது

தயாரிப்பாளர் சங்கம் போலவே இந்தச் சங்கத்தையும் ஆளும் அதிமுக அரசே பதிவாளர் அலுவலகத்தை வைத்துக் கைப்பற்றலாம்.

இல்லையெனில்..

நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தேர்தல் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டு புதிதாக தேர்தல் நடத்தப்படலாம்.

எது எப்படியிருந்தாலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் இனிமேல் எப்போது நடந்தாலும்… நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலைவிடவும் பரபரப்பாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.