ராஜன் தேஜேஸ்வர் அறிமுகமாகும் ‘செயல்’ படம் மே 18-ம் தேதி வெளியாகிறது

ராஜன் தேஜேஸ்வர் அறிமுகமாகும் ‘செயல்’ படம் மே 18-ம் தேதி வெளியாகிறது

‘செயல்’ படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜேஸ்வர் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்தாக வேண்டும் என்கிற வெறியோடு களத்தில் குதித்திருக்கிறார். இது இவருக்கு முதல் படம் என்றாலும் அடுத்தடுத்து படங்கள் செய்யவிருக்கும் எதிர்காலத் திட்டத்தோடு இருக்கிறார்.

செயல் படத்தை C.R. கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நிர்மலா ராஜன் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ‘ஆடுகளம்’ ஜெயபாலன், தீனா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகியிருக்கிறார். 

seyal movie stills

ஒளிப்பதிவு – V.இளையராஜா,  இசை – சித்தார்த் விபின், படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில், சண்டை பயிற்சி – கனல் கண்ணன், நடனம் – பாபா பாஸ்கர், ஜானி, கலை – ஜான் பிரிட்டோ, தயாரிப்பு நிர்வாகம் – ஏ.பி.ரவி, தயாரிப்பு – C.R.ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர்.

தன்னுடைய சினிமா பிரவேசம் பற்றி புதுமுக நடிகர் ராஜன் தேஜேஸ்வர் பேசும்போது, “எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியாகவே மாறிவிட்டது. சினிமாவைத் தவிர வேறு எந்தத் துறையையும் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்கிற ஒரே திட்டத்தோடு இருந்தேன்.

அந்த நேரத்தில்தான் இயக்குநர் ரவி அப்புலுவை சந்தித்தேன். எனது லட்சியத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்த அவர் எனக்காகவே உருவாக்கப்பட்டதை போன்ற ஒரு கதையை சொன்னார்.

rajan tejaswar

எனக்கு எந்த மாதிரியான கதையில் நடிக்கனும்னு ஆர்வம் இருந்ததோ, அதற்கு ஏற்ற மாதிரியான கதையாக அது இருந்ததால் எனது முதல் படமாக அதையே தீர்மானித்து  ஓ.கே. சொன்னேன். அதுதான் இந்த ‘செயல்’ திரைப்படம்.

விஜய்யை வைத்து ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி அப்புலு 14 வருடங்களுக்குப் பிறகு அடுத்ததாக இயக்குகிற இந்த இரண்டாவது படத்தில் நான் நடிக்கும் பாக்யம் கிடைத்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

அப்படியும் அந்தக் கதைக்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் என் அப்பாவே ‘செயல்’ படத்தைத் தயாரிக்க முன் வந்தார். அப்படி ஆரம்பித்த ‘செயல்’ படம் மே 18-ம் தேதி வெளியாக உள்ளது.

seyal movie stills

முதல் படத்திலேயே பக்காவான கமர்ஷியல் கதை எனக்குக் கிடைச்சிருக்கு. இந்த படத்தில் எனக்கு ஆக்‌ஷன் இருக்கு. காமெடி இருக்கு. காதலும் இருக்கு. யானை பலம் கொண்ட ஒருவனை சாதாரண சராசரியான ஒருவன் மோதி சாய்ப்பதுதான் கதை. இந்த படம் தரமா வந்திருக்கிறது என்கிற நம்பிக்கை என் அப்பாவும், தயாரிப்பாளருமான C.R.ராஜன் அவர்களுக்கு வந்ததால், உடனே நான் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தையும் தொடங்கிவிட்டார்.

இந்தப் படத்தை சமுத்திரகனியின் உதவியாளர் சாய் சங்கர் இயக்கவிருக்கிறார். படத்திற்கு  ‘குமாரு வேலைக்கு போறான்’ என்று டைட்டில் வைத்திருக்கோம். அதுவும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும்…” என்றார் ராஜன் தேஜேஸ்வர்.
error: Content is protected !!