full screen background image

சீதக்காதி – சினிமா விமர்சனம்

சீதக்காதி – சினிமா விமர்சனம்

Passion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ், அருண் வைத்தியநாதன் ஆகிய நால்வரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்துள்ளார். அர்ச்சனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மெளலி, ராஜ்குமார், பகவதி பெருமாள், அறிமுக நடிகர் சுனில் கே.ஷெட்டி போன்றோர் நடித்துள்ளனர். மேலும், ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி, பழம்பெரும் இயக்குநர் மகேந்திரன் போன்றோரும் கவுரவ வேடங்களில் நடித்துள்ளனர்.

மற்றும் நாடக நடிகர்களான ஊட்டி மணி, கலைப்பித்தன், ஸ்ரீரங்கம் ரங்கமணி, ஐ.ஓ.பி. ராமச்சந்திரன், சந்திரா, மணிமேகலை, ஜெயந்தி, எல்.மோகன், லோகி உதயகுமார், முத்துக்குமார், விடியல் விநாயகம், அப்துல், ஆதிராசன், ராகவன், கோபாலகிருஷ்ணன், சுஹாசினி சஞ்சீவ், ஜெகஜீவன் உள்ளிட்ட பல கலைஞர்கள் இந்தப் படத்தில் பங்கு கொண்டுள்ளனர்.

ஒளிப்பதிவு – வினோத் ராஜ்குமார், இசை – கோவிந்த் வசந்தா, படத் தொகுப்பாளர் – ஆர்.கோவிந்தராஜ், சிங்க் சவுண்ட் – ராகவ் ரமேஷ், ஆடை வடிவமைப்பு – பிரியங்கா, ஒலிப்பதிவாளர் – சுரேன், பப்ளிசிட்டி டிசைன் – கோபி பிரசன்னா, மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாகத் தயாரிப்பாளர் – ஏ.குமார், தயாரிப்பு – ஜெயராம்,  சுதன் சுந்தரம், உமேஷ், அருண் வைத்தியநாதன், தயாரிப்பு நிறுவனம் – Passion Studios, எழுத்து, இயக்கம் – பாலாஜி தரணிதரன்.

இதுவரையிலும் எத்தனையோ பேய்ப் படங்களைப் பார்த்திருக்கிறோம். அந்தப் பேய்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பேயாக தனது திறமையை அடுத்தவர்களுக்குக் கொடுத்து அவர்களை வளர்த்துவிடும் பேய் என்கிற பாணியில் புதிய கதைக் களத்துடன் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

பேய்க்கு ஆன்மா என்று நாகரீகமாக பெயர் சூட்டிவிட்டதாலும், பேயின் தாக்கத்தினால் யாருக்கும், எந்தக் கெடுதலும் இல்லாமல் இருப்பதாலும் இதனை சைவமான பேய்ப் படமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். அதோடு பேய்க்கான காட்சிகளைக் குறைத்துக் கொண்டு அதற்கான காரண, காரியங்களை அலசும் படமாகவும், பேயின் பின் விளைவுகளால் ஏற்படும் பிரச்சினைகளை பற்றி மட்டுமே பேசும் காட்சிகளை முன்னெடுத்திருப்பதால் இதுவொரு வித்தியாசமான கதை சொல்லும் படமாகவும் அமைந்துவிட்டது.

கலைதான் தனது உயிர். நடிப்புதான் தனது மூச்சு. நாடகம்தான் என் உலகம் என்று வாழ்ந்து மறைந்திருக்கும் நாடகக் காவலர் பெரியவர் ஆதிமூலம்தான் கதையின் நாயகன்.

1940-களில் பிறந்த ஆதிமூலம் சின்ன வயதிலேயே லவகுசா நாடகங்களில் நடிக்கத் துவங்கியவர். பின்பு புராண, சமூக, இதிகாச நாடகங்கள் அனைத்திலும் நடித்து, நடித்து தனது வாழ்க்கையையே நாடகத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.

காலங்கள் கடந்து போகப் போக.. மக்கள் சினிமா என்னும் செல்லூலாய்ட் மாயையில் சிக்கி நாடகங்களை மறக்கத் தொடங்க ஆதிமூலத்தின் ராஜ வாழ்க்கையும் சரியத் துவங்குகிறது. அரங்கு நிறைந்த காட்சிகளாக இருந்த காலமெல்லாம் காணாமல் போய் அங்கொன்றும், இங்கொன்றுமாக 10, 15 நபர்களுடன் இன்றைக்கும் நாடகத்தினை விடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார் ஆதிமூலம் ஐயா.

முதல் நாள் மகாபாரதம் என்றால் அடுத்த நாள் ஒரு சமூக நாடகம். அதற்கும் அடுத்த நாள் ஒளரங்கசீப் நாடகம்.. கடைசியாக சுஜாதாவின் ஊஞ்சல் நாடகம் என்று போய்க் கொண்டிருந்தாலும் கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது.

இந்த நேரத்தில் அவரது பேரனுக்கு மூளையில் ஏதோ கட்டியிருப்பதாகவும், அதனை ஆபரேஷன் செய்து சிகிச்சையளிக்க லட்சணக்கணக்கில் பணம் தேவையாய் இருப்பதாகவும் அவருக்குத் தெரிய வருகிறது. எப்படியும் பணத்தைப் புரட்டி பேரனை காப்பாற்றுவேன் என்று தன் மகளுக்கு வாக்களிக்கிறார் ஆதிமூலம் ஐயா.

ஆனால் அடுத்த நாள் நாடக மேடையில் ஊஞ்சல் நாடகத்தின் நடுவேயே நடித்துக் கொண்டிருக்கும்போதே திடீர் மரணமடைந்து சுவர்க்கலோகம் சென்றடைகிறார் ஆதிமூலம் ஐயா.

எல்லாம் முடிந்த பின்பு அவருடைய நாடகக் குழுவினர் அனைவரும் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். திரும்பவும் ஆதிமூலம் ஐயாவின் அடிச்சுவட்டில் நாடங்களை போட முடிவெடுக்கிறார்கள். அதன்படியே ஆதிமூலம் ஐயா இல்லாத அவர்களது நாடகம் அரங்கேறுகிறது.

இந்த நாடகத்தில் திடீரென்று ராஜ்குமார் என்ற நடிகர் மிக தத்ரூபமாக நடிக்கிறார். ஆதிமூலம் ஐயாவின் ஆன்மாதான் ராஜ்குமாரின் உடலுக்குள் புகுந்து அவரை இப்படி அபாரமாக நடிக்க வைத்திருக்கிறது என்கிறார் நாடகக் குழுவின் மேனேஜரான மெளலி. இதனை ஆதிமூலம் ஐயாவின் மனைவியான அர்ச்சனாவும், அவரது மகளும் நம்புகிறார்கள்.

இந்த நாடகத்தைப் பார்க்க வந்த ஒரு புதுமுக இயக்குநர் ராஜ்குமாரை தனது படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார். அவரிடத்தில் ஆதிமூலம் ஐயாவின் ஆன்மா விவகாரத்தைச் சொல்கிறார் மெளலி. அவரும் அதை ஏற்றுக் கொள்ள.. கிடைக்கும் பணத்தில் ஆதிமூலம் ஐயாவின் பேரனின் ஆபரேஷன் செலவை சமாளிக்கலாம் என்கிற திட்டத்தின்படியும் அந்தப் படத்தில் நடிக்கிறார் ராஜ்குமார்.

படம் சூப்பர் ஹிட். தொடர்ந்து ராஜ்குமாருக்காக கதைகளைக் கேட்கிறார் மெளலி. அந்தப் படங்களில் ராஜ்குமார் நடிக்க.. ஆன்மாவுக்கான சம்பளத்தை ஆதிமூலம் ஐயாவின் குடும்பத்தினர் பெற்றுக் கொள்ள.. படங்கள் தொடர்ந்து ஹிட்டாகின்றன.

தமிழகம் முழுவதும் இது பரவுகிறது. கோடம்பாக்கத்தில் ஆதிமூலம் ஐயாவின் ஆன்மாவுக்கு டிமாண்ட் கூடுகிறது. இதன் பயனாய் ராஜ்குமார் அதிகம் தேடப்படும் ஹீரோவாகிறார். திடீரென்று விதியின் விளையாட்டால் ஆதிமூலம் ஐயாவை விமர்சித்தும், மெளலியை அவமானப்படுத்தியும் பேசிவிடுகிறார் ராஜ்குமார்.

அடுத்த நாள் படப்பிடிப்பில் ராஜ்குமாருக்கு நடிப்பே வரவில்லை. என்னென்னவோ செய்தும் அது முடியாமல் போகிறது. அப்போதுதான் ராஜ்குமாருக்கு உறைக்கிறது.. தனக்குள் ஆதிமூலம் ஐயாவின் ஆவி இறங்கவில்லையோ என்று..! உடனேயே மெளலியைத் தேடி ஓடுகிறார். ஆனாலும் ஆன்மா மனம் இறங்கவில்லை.

அந்த நேரத்தில் அடுத்த படமாக அறிமுக நடிகரும், தயாரிப்பாளருமான சுனில் கே.ஷெட்டி வீடு தேடி வருகிறார் ஆதிமூலம் ஐயாவுக்காக கதை கேட்கிறார் மெளலி. இதை ஒகே செய்கிறார் மெளலி. ஆனால் நடிக்கத் துவங்கிய பின்பு தன்னிடம் சொல்லாத விஷயமெல்லாம் படத்தில் இருப்பதை அறிந்து மெளலி சுனிலிடம் சண்டையிடுகிறார்.

சுனில் இந்தச் சமயத்தில் மெளலியை அவமானப்படுத்தியும், ஆன்மாவை கேவலப்படுத்தியும் பேசிவிட.. இங்கேயும் ஆதிமூலம் ஐயாவின் ஆன்மா தரையிறங்க மறுக்கிறது. இதனால் படப்பிடிப்புகள் ரத்தாகின்றன. பிரச்சினைகள் எழுகின்றன. சினிமா சம்பந்தப்பட்ட சங்கங்கள் தீவிர டிஷ்கஷனில் மூழ்குகின்றன.

ஆதிமூலம் ஐயாவின் ஆன்மாவை வரவழைக்க வேண்டும் என்று சொல்லி, ஆதிமூலம் ஐயாவின் குடும்பத்தினரை கோர்ட்டுக்கு வழக்கு போட்டு வரவழைக்கிறார்கள். இதன் பின்பு என்னாகிறது என்பதுதான் இந்தச் சுவையான திரைக்கதை.

முதல் பாராட்டுக்கள் விஜய் சேதுபதிக்கு. அவர் தலையசைப்பு இல்லாமல் இந்தப் படம் உருவாக வாய்ப்பில்லை. இது போன்ற கலையம்சத்துடன் மக்களும் விரும்பும் வகையிலான திரைப்படங்கள் தமிழ்ச் சினிமாவில் அதிகம் கிடைப்பதில்லை. கமர்ஷியல், இல்லாவிட்டால் முழுக்க முழுக்க பேய்க் கதை. குடும்பக் கதை என்று வேறு வேறு பாதைகளில் பயணிக்கும் தமிழ்ச் சினிமாவில் பாலாஜி தரணிதரன் போன்ற இயக்குநர்கள்தான் டிரெண்ட் செட்டர் இயக்குநர்களாக இருக்கிறார்கள்.

படத்தின் துவக்கத்திலிருந்து முதல் 40 நிமிட நேரம் நாடக மேடையை காட்டும் தைரியம் வேறு யாருக்கு வரும்.. அதிலும் விஜய் சேதுபதியே தனி ஆளாக தனி ஆவர்த்தனம் காட்டியிருக்கும் ஒளரங்கசீப் ஓரங்க நாடகம் அபாரம். அதில் விஜய் சேதுபதியின் கனமான நடிப்பு அவருக்கு நிச்சயமாக பெயரை காலாகாலத்திற்கும் சொல்லும்.

‘லவா குசா’வில் துவங்கி, பாரதியாரின் ‘பாஞ்சாலி சபத’த்தை தொட்டு, தொடர்ந்து ‘கண்ணகி’யின் கோபக் கனலைச் சந்தித்து, ‘ஓளரங்கசீப்’பின் கடைசி கால புலம்பலை.. முக்கியமாக தனது சகோதரன் தாராவை தானே கொலை செய்ய வேண்டியிருந்ததே என்பதையும், இந்தியாவையே முஸ்லீம் நாடாக ஆக்க அவன் எடுத்துக் கொண்ட முயற்சியை அவனே விமர்சிப்பது போலவும் எழுதி, கடைசியாக எழுத்துலக வாத்தியார் சுஜாதாவின் ‘ஊஞ்சல்’ கதையின் முடிவு போலவே தன் கதையையும் அந்த மேடையிலேயே முடித்துக் கொள்ளும் திரைக்கதை அபாரம். ஆனால் இந்த மேடை நாடகக் காட்சிகளின் நீளம் மிக, மிக, மிக அதிகம். நிச்சயமாகக் குறைக்கலாம். இதில் பாதியளவு குறைத்தால்கூட அந்தக் காட்சிகள் சிறப்பாகத்தான் இருக்கும்..!

விஜய் சேதுபதியின் நடிப்புத் திறனுக்கேற்றாற்போன்ற காட்சிகளையும், வசனங்களையும் பொருத்தமாக்கி நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அந்த வயதானவருக்கான மேக்கப்புதான் கொஞ்சம் அதீதமாக காட்சியளிக்கிறது. 70 வயது முதியவர் இயல்பாக எப்படி பேசுவாரோ.. எப்படி நடந்து கொள்வாரோ.. அப்படித்தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

மெளலியிடம் ‘தினத்தந்தி’ விளம்பரத்தைப் பார்த்துவிட்டு ‘எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?’ என்று சீரியஸாகவே கேட்பதும், அது கிண்டலாக ஒலிப்பதும் ஏற்கத்தக்கதே..! இதேபோல் வீட்டில் தன் மகளிடம் பேரனின் உயிரைக் காப்பாற்றுவதாக உத்தரவாதம் கொடுப்பதும், பேரனிடம் கொஞ்சுவதுமாக ஒரு ஆதிமூலம் ஐயாவையே கண் முன்னே காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.

இத்திரைப்படம் இவருடைய 25-வது திரைப்படம். மிகப் பொருத்தமானது. அவருடைய கேரியரில் இந்தப் படமும் ‘ஆதிமூலம் ஐயா’ என்கிற கேரக்டரும் மிக, மிக முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.

ராஜ்குமார் நடிகராகவும், பகவதி பெருமாள் இயக்குநராகவும் அக்கப்போர் செய்வதில் லேசான நகைச்சுவையில் கிளம்பிய தீப்பொறி, பின்பு படம் முழுவதும் வியாபித்து கடைசிவரையிலும் படத்தைப் பார்க்க வைக்கிறது.

லேசான ஒரு லுக்கைக்கூட செய்ய முடியாமல் ராஜ்குமார் தவிப்பதும், அதற்காக பகவதி பெருமாள் விதம்விதமாக ஐடியா கொடுத்தும் அது ஒர்க் அவுட்டாகாமல் போவதும் நகைச்சுவையின் இன்னொரு பரிணாமம். இதேபோலத்தான் இடைவேளைக்கு பின்பு சுனில் கே.ஷெட்டியும், இவரை வைத்து இயக்கும் இயக்குநரும் நகைச்சுவை திரைக்கதையை செய்திருக்கிறார்கள்.

ராஜ்குமாருக்கு இந்தப் படத்தில்தான் மிக அருமையான, முக்கியமான கேரக்டர். இத்தனைவிதமாக தன்னால் நடிக்க முடியுமா என்று அவருக்கே நிச்சயமாக ஆச்சரியம் வந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு விதம்விதமான கோணங்களில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

சுனில் கே.ஷெட்டி அறிமுக நடிகர். மிகப் பிரமாதமாக இயல்பாக நடித்திருக்கிறார். சிச்சுவேஷன் காமெடி என்பார்களே அதற்கு முழு உதாரணமாகவும் இருக்கிறது. காமெடிக்காகவே பிறந்திருக்கிறாரோ என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதையும், வசனமும், இயக்கமும் இவருக்குக் கை கொடுத்திருக்கிறது.

ஷூட்டிங்கின்போது இடையில் ஒரே ஒரு முறை ஆதிமூலம் ஐயாவின் ஆன்மா அவருக்குள் இறங்குவதும், அதைத் தொடர்ந்து அந்தக் காட்சியை அவர் மிக அழகாக நடித்துக் காண்பிக்க.. அந்தச் சமயம் கேமிரா ஆன் ஆகாமல் இருப்பதும் பொருத்தமான காமெடி.

தொடர்ந்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டம், நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை என்று தொடர்ச்சியான சம்பவங்கள் படத்திற்கு சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கின்றன.

நாடகக் கலைஞரான மெளலியை வெகு நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் சந்திக்க முடிந்திருக்கிறது. கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றாற் போன்று நடித்திருக்கிறார். அர்ச்சனா இன்னொரு பக்கம் தனது பக்குவமான, மென்மையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

மேடையில் நடிப்பவர்களின் உடம்பில் தனது கணவரின் ஆன்மா இறங்கியிருப்பதை அவர் உணரும் தருணத்தை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் அர்ச்சனா. இவரைப் போலவே மேடை நாடகத்தில் நடித்திருக்கும் மணிமேகலையின் நடிப்பு அபாரம்.. முன்னணி நடிகையாக வேண்டியவர் இப்படி இரண்டாம் கட்ட நடிகையாகவே நடித்துக் கொண்டிருப்பதுதான் கொடுமை..!

இவர்களைத் தவிர நாடகக் கலைஞர்கள் பலரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இல்லாமல் சுனில் கே.ஷெட்டியின் நடிப்புத் திறமையைப் பார்த்து கொஞ்சம், கொஞ்சம் சிரித்து சிரித்து அழகு காட்டும் ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் என்று சிலரும் படத்திற்கு வெயிட் கொடுத்திருக்கிறார்கள்.

கடைசியாக நீதிபதியாக வந்து அமரும் இயக்குநர் மகேந்திரன் இப்படியெல்லாம் நீதிபதிகள் பேசுவார்களா என்கிற சந்தேகத்தைக் கிளப்பும்வகையில் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய கண்டிப்பான பேச்சு, சமரசப் பேச்சுக்களெல்லாம் அந்தக் காட்சிகளை ரசிக்க பெரிதும் உதவியிருக்கின்றன.

வினோத் ராஜ்குமாரின் கண்களை உறுத்தாத ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் காதுகளைத் துளைக்காத இசையும்கூட படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன. பொருத்தமான இடத்தில் ‘அய்யா’ பாடலை மிக்ஸ் செய்திருக்கிறார்கள். சோகத்தை ரசிகர்களிடத்திலும் பகிர்ந்து கொள்கிறது இந்தப் பாடல். இதேபோல் ‘அவன்’ பாடலும் ஒரு முறை கேட்கும் ரகமாகத்தான் அமைந்திருக்கிறது. கோவிந்த் வசந்தா இன்னும் அதிகமாக தமிழ்த் திரையுலகில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம். அதே சமயம், அதிகமான சிச்சுவேஷன் ஒலிகளை சேர்க்காமல் மெளனமாக்கியிருப்பதால் படத்திற்கு கலை வடிவம் கிடைக்கக் காரணமாகவும் அமைந்துவிட்டது.

முன்பே சொன்னதுபோல படத் தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ் முனைப்போடு கொஞ்சம் கத்திரி வேலையைச் செய்திருந்தால் இன்னும் அதிக ஈர்ப்போடு படம் இருந்திருக்கும்.

இயக்குநர் பாலாஜி தரணிதரனின் மிகச் சிறப்பான இயக்கம்தான் படத்தினை இன்றைக்கு இந்தியா முழுவதுக்கும் பேச வைத்திருக்கிறது.

மிக அதிகப் பொருட்செலவில் படம் உருவாகியிருப்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. அதே அளவுக்குத் தரமாகவும் படம் வந்திருக்கிறது.

இறந்தவரின் ஆன்மா இன்னொருவரின் உடலுக்குள் புகுந்து அவரை சிறப்பாக நடிக்க வைக்குமா என்கிற லாஜிக்கான கேள்வியைக் கூட கேட்கத் தோணாமல் கடைசிவரையிலும் படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். இதுவே இவருடைய வெற்றிதானே..?!

நாடகத்தைப் பார்க்க வந்திருக்கும் கூட்டத்தை கடைசியாகக் காட்டும் விதத்திலேயே இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. அரங்கத்தில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பும் ஆதிமூலம் ஐயாவுக்கு இன்றைய நாட்டு நடப்பினை அப்படியே தெரிவிப்பதுபோல செல்போனில் மூழ்கியிருக்கும் இளைஞர், இளைஞிகள்.. போக்குவரத்து நெரிசல்கள்..  சினிமா போஸ்டர்கள்.. கண்கவரும் விளக்குகளின் ஒளியில் மிளிரும் கடைகள்.. கூட்டத்தில் அல்லல்படும் டாஸ்மாக் கடைகள், இருட்டில்கூட செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் தருணம் என்று அவர் பார்க்கும் காட்சிகளே இன்றைய இந்தியாவை எடுத்துக் காட்டிவிட்டது. இனிமேல் நாடகக் கலை என்னாகும் என்று அவர் முகத்திலிருந்தே நமக்கும் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

சிறந்த இயக்கத்தையும் அழுத்தமாகச் செய்திருக்கும் பாலாஜி தரணிதரனுக்கு நமது வாழ்த்துகள். இது போன்ற திரைப்படங்களே புதிதாக சினிமாவிற்குள் வரத் துடிக்கும் இளையவர்களுக்கான வழிகாட்டி.

முன்னமே சொன்னதுபோல முதல் 40 நிமிடங்களை பாதியாகக் குறைத்து வெளியிட்டால், படம் நிச்சயமாக இன்னும் அதிக ரசிகர்களால் விரும்பப்படும் என்பதில் நமக்கு ஐயமில்லை..!

‘செத்தும் கொடுத்தார் சீதக்காதி’ என்பார்கள். அது இந்தப் படத்திலும் உண்மையாகவே நடந்திருக்கிறது. செத்தும் ஆன்மாவாக வந்து நடிப்புக் கலையை வாழ வைக்கிறார் ‘சீதக்காதி’ என்னும் ஆதிமூலம் ஐயா..!

சிறந்த நடிகர்களை, சிறந்த கதையை, சிறந்த திரைக்கதையை, சிறந்த இயக்கத்தை காண இந்தச் ‘சீதக்காதி’யை கண்டிப்பாக அனைவரும் பார்த்தே தீர வேண்டும்..!

 

Our Score