சீமத்துரை – சினிமா விமர்சனம்

சீமத்துரை – சினிமா விமர்சனம்

புவன் மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் இ.சுஜய் கிருஷ்ணா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் கீதன் கதாநாயகனாகவும், வர்ஷா  கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார்.

’நான் மகான் அல்ல’ மகேந்திரன், ’கயல்’ வின்செண்ட் இருவரும் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர்.  ஆதேஷ் பாலா, ‘மதயானை கூட்டம்’ காசி மாயன், மேடை கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின், ஒளிப்பதிவு – D.திருஞான சம்பந்தம், படத் தொகுப்பு – T.வீரசெந்தில்ராஜ், பாடல்கள் – அண்ணாமலை, நடனம் – சந்தோஷ் முருகன்,  தயாரிப்பு புவன் மீடியா வொர்க்ஸ். தயாரிப்பாளர் – E.சுஜய் கிருஷ்ணா, இணை தயாரிப்பு – ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சந்தோஷ் தியாகராஜன்.

காலம் மாறினாலும் பிரச்சினைகள் மட்டும் மாறாது என்பார்கள். அந்த மாதிரி இன்றைக்கும் கிராமங்களில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவானதுதான் இந்த ‘சீமத்துரை’ படம்.

‘சீமத்துரை’ என்னும் பெயரை கேட்டாலே நமக்கு கிராமங்களும் அங்கே வெள்ளந்தியாக திரியும் இளைஞர்களும்தான் நினைவுக்கு வருவார்கள். கிராமங்களில் வாழும் ஒவ்வொரு இளவட்ட வாலிபர்களுமே ‘சீமத்துரை’தான்.

கிராம மக்களுக்கு அரிவாள், கத்தி மட்டும் ஆயுதம் அல்ல. பாசமும் ஒரு ஆயுதம்தான். பாசத்துக்கும், கர்வத்துக்கும் இடையே நடக்கிற ஒரு போராட்டத்தை தங்களால் முடிந்த அளவுக்கு ‘சீமத்துரை’ என்னும் தலைப்புக்கேற்றாற்போல் காதல், கலாட்டா, கலவரம் என்று எல்லாம் கலந்து படமாக்கியிருக்கிறார்கள்.

பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் கிராமம்தான் கதைக் களம். அங்கே கருவாடு விற்கும் விஜியின் ஒரே மகன்தான் நாயகன் கீதன். பட்டுக்கோட்டையில் ஒரு கல்லூரியில் இறுதியாண்டு மாணவர். ஊருக்குள்ளேயே இருக்கும் மகேந்திரன், வின்சென்ட் இருவரும் கீதனின் மிக நெருங்கிய நண்பர்கள்.

அவ்வப்போது ஏதாவது ரகளை செய்து ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டி நியாயம் கேட்க வைப்பது இந்தக் குழுமத்தின் வாடிக்கை. லேட்டஸ்ட்டாக ஊருக்குள் ஒரு காதல் ஜோடியை வழியனுப்பி வைத்து அதற்கும் ஒரு பஞ்சாயத்தை கூட்டி அலப்பறை செய்கிறார்கள்.

அதே ஊரில் இருக்கும் நாயகி வர்ஷா அந்தாண்டுதான் கல்லூரியில் சேர்கிறார். மகளைக் கல்லூரிக்கு அனுப்ப வர்ஷாவின் அப்பாவும், அம்மாவும் மறுக்கிறார்கள். இருந்தும் அப்பாவுக்கு எல்லாவிதத்திலும் ஒத்தாசையாக இருக்கும் தாய் மாமனின் சிபாரிசு என்பதால் கல்லூரிக்குப் போகும் வாய்ப்பு வர்ஷாவுக்குக் கிடைக்கிறது.

வர்ஷாவை பார்த்தவுடன் லவ்வாகிறார் ஹீரோ கீதன். வர்ஷா கீதனைத் தட்டிக் கழித்துப் பார்த்தும் அவள் பின்னாடிலேயே நாய் போல் அலைகிறார் கீதன். இதனைப் பார்த்த வர்ஷாவின் அப்பா அனுப்பி வைத்த அடியாட்கள் நடுரோட்டில் வைத்து கீதனை புரட்டியெடுக்க இதைத் தடுக்க வந்த வர்ஷா வாய் தவறி நான் கீதனைக் காதலிப்பதாகச் சொல்லிவிடுகிறார். இதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு காதல் கனவுகளில் மூழ்குகிறார் கீதன்.

இந்த நேரத்தில் வர்ஷாவின் தாய் மாமன் வர்ஷாவை தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்க.. வர்ஷாவின் அப்பா அவனை செருப்பைக் கழட்டி அடித்துவிடுகிறார். இதனை மனதில் வைத்திருக்கும் தாய் மாமன் இதற்காக பழிக்குப் பழி வாங்க காத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் வர்ஷாவை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறார் கீதன். கீதனின் தீராத காதலைப் பார்த்துவிட்டு தானும் காதலிக்கத் துவங்குகிறார் வர்ஷா. இந்தக் காதலுக்கு குழி தோண்டி புதைத்துவிட்டு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள் வர்ஷாவின் பெற்றோர். கடைசியில் யாருடைய விருப்பம் நிறைவேறியது என்பதுதான் படத்தின் கதை.

சத்தியமாக இந்தப் படத்தின் இயக்குநர் 1990-களுக்குப் பிறகு தமிழ் சினிமாவையே பார்த்ததில்லை போலும். தற்போது தமிழ்ச் சினிமாவின் கதைக்களமும், கதை சொல்லும்விதமும், இயக்குதல் திறனும் வருடத்திற்கு வருடம் மேலோங்கிப் போயிருக்க.. இந்த இயக்குநர் நம்மை 20 ஆண்டுகள் கீழே இறக்குகிறார்.

கதையும், திரைக்கதையும் அரதப் பழசு. அதிலும் நாயகனின் கேரக்டர் ஸ்கெட்ச் மிக குழப்பமானது. எதற்கெடுத்தாலும் சிரித்துக் கொண்டும், தலையை அசைத்துக் கொண்டும் கேணத்தனமாக இருக்கும் ஹீரோவின் செயல்பாடுகள் சகிக்க முடியவில்லை. “என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டாடா..” என்று சொல்லி வாங்கிய அடியிலும் பைத்தியம் போல் சிரிக்கிறார். அடுத்தக் காட்சியில் நல்ல மன நிலையில் இருப்பவராக வந்து சீன் போடுகிறார். எதை நம்புவது என்றே தெரியவில்லை.

காதல் திரைப்படங்களின் வழக்கப்படியே கல்லூரியில் ஆரம்பிக்கும் காதல்.. கல்யாணத்தில் முடிய காத்திருக்கிறது. ஆனால் முடிவு வேறு மாதிரியாகப் போக.. அந்தக் கடைசி நிமிட காட்சிகளும் பைத்தியக்காரத்தனமாகவே இருக்கின்றன.

தாய் மாமன் பழிக்குப் பழி வாங்குகிறார் என்பதெல்லாம் சரிதான். இதுக்குத்தான் இத்தனை பாடா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வைத்திருக்கிறது இயக்குநரின் சாதாரணமான திரைக்கதை.

நடிகர் கீதன் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும் இதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லாத நிலைமைதான். முன்பே சொன்னது போலவே இதிலும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் சுவாரசியமாகவும், ஈர்ப்பாகவும் இல்லாததால் நடிப்பைப் பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை.

நாயகி வர்ஷாவுக்கு இதுவொரு சிறந்த வேடம். ஒரு பக்கம் அப்பா, அம்மா.. இன்னொரு பக்கம் காதலன்.. என்று அந்த வயதையொத்த கதாபாத்திரத்தின் மனவோட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அடிக்கடி கண்களை உருட்டி சிரிக்கும்போது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்.

கீதனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி வழக்கம்போல தனக்குக் கிடைத்த இடங்களிலெல்லாம் கோல் போட்டிருக்கிறார். அவர் இருக்கின்ற பிரேமில் அவரேதான் நடித்திருக்கிறார். ஊர்ப் பஞ்சாயத்தை அவர் கலைத்துவிடும் அழகிலேயே நம்மை பெரிதும் கவர்கிறார்.

வர்ஷாவின் தாய் மாமாவாக காசிராஜன், ஊமையனாக நடித்திருக்கும் நிரஞ்சன், கீதனின் நண்பர்களான மகேந்திரன், வின்செண்ட் ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இதில் ஊமையனாக நடித்த நிரஞ்சன் கொஞ்சம் அதிகமாக ஸ்கோர் செய்திருக்கிறார். பாராட்டுக்கள்.

ஜோஸ் பிராங்ளினின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். திருஞானசம்பந்தத்தின் ஒளிப்பதிவு பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப் புற கிராமங்களின் அழகை அழகாகப் பதிவு செய்திருக்கிறது.

எளிமையான கதைதான். ஊகிக்க முடிந்த திரைக்கதை. அடுத்தது என்ன என்பதை தியேட்டரில் கேண்டீனில் வேலை செய்பவர்கூட சொல்லிவிடும் அளவுக்கான திரைக்கதை அமைத்திருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய பலவீனம்.

இக்காலத்திற்கேற்றவாறு கதையையும், திரைக்கதையும் மாற்றம் செய்திருக்கலாம். இடையில் திரைக்கதையில் தொடர்ச்சி இல்லாமல், விட்டு விட்டு வரும் காட்சிகளும் சலிப்பை உண்டாக்குகின்றன.

ஆண்களின் ஒரு தலைக் காதலால் பெண்களுக்கும், குடும்பத்திற்கும், ஊருக்கும், உறவுகளுக்கும் ஏற்படும் பிரச்சினைகளை இதன் மூலமாக சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர். ஆனால், முழுமையாகச் சொல்லவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
error: Content is protected !!