‘சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் 13.50 கோடியாம்..!

‘சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் 13.50 கோடியாம்..!

24 AM STUDIOS  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி, நேற்று வெளியான ‘சீமராஜா’ திரைப்படம் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளதாக தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.

“சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூலே 13.50 கோடி ரூபாய்” என்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. இது சிவகார்த்திகேயனின் திரைப்பட வரலாற்றிலேயே புதிய சாதனையாகும்.

இது பற்றிப் பேசிய தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, “இந்த வெற்றிக்கு காரணமான  சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஒரு ஜனரஞ்சகமான படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் நிறைத்து ஒரு படத்தை தயாரிப்பது என்பது, அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.

குடும்பமாக படம் பார்க்கும் ரசிகர்களையும், இளைஞர்களையும் கவர வேண்டும் என்பதே எங்களது பிரதான நோக்கம். சிவகார்த்திகேயன் நிறைய  வித்தியாசமான வேடங்களில் நடிக்க  வேண்டும் என்று நிலையை தாண்டி, அவரது ரசிகர்களுக்கு  பிடித்தமான ஒரு கலகலப்பான படம்தான்  இந்த சீமராஜா திரைப்படம்.

திரையிட்ட முதல் நாளே திரை அரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்று திரை அரங்கு உரிமையாளர்கள் கூறும்போது உள்ளம் பூரிப்பு அடைகிறது.

சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல்  சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்பதில் எங்களுக்கு எந்தவித ஐயமும் இல்லை. முதல் நாள் வசூலே 13 கோடியே 50 லட்சம் ரூபாய் கிடைத்திருப்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. ஒரு நாளில் 550 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும். 

ஊடக  நண்பர்களுக்கும், திரை அரங்கு உரிமையாளர்களுக்கும், பொது மக்களுக்கும், இந்த மாபெரும் வெற்றிக்காக என் மனமார்ந்த நன்றிகள்…” என்றார் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா.