“சவாலே சமாளி திட்டமிட்டபடி நாளை வெளியாகும்” – தயாரி்ப்பாளர் அருண்பாண்டியன் உறுதி..!

“சவாலே சமாளி திட்டமிட்டபடி நாளை வெளியாகும்” – தயாரி்ப்பாளர் அருண்பாண்டியன் உறுதி..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ‘பாயும் புலி’ படத்திற்காக நேற்று எடுத்த அதிரடி முடிவினை, நாளை ரிலீஸாகவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களே ஏற்கவில்லை என்று தெரிகிறது.

நேற்று மாலை, வரும் 4-ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸில்லை என்ற தயாரிப்பாளர் கவுன்சிலின் முடிவு வெளியான அரைமணி நேரத்தில் நடிகர் விஷால் டிவிட்டரில் இது குறித்து தனது கருத்தினை வெளியிட்டார்.

vishal-tweets-paayum puli

“ஒரு மாத காலமாக இந்தப் பிரச்சனை குறித்து எந்த முடிவையும் எடுக்காமல், கடைசி நாளில் இப்படி பிரச்சனையை உருவாக்குவது சரியல்ல. ஒரு வினியோகஸ்தருக்காகவும், சில திரையரங்குகளுக்காகவும் படத்தின் வெளியீட்டை ஏன் நிறுத்த வேண்டும்..?” என்று கேட்டார்.

பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து அதே டிவிட்டரில் “பாயும் புலி திட்டமிட்டபடி 4-ம் தேதி கண்டிப்பாக ரிலீஸாகும்...” என்று தெரிவித்தார் விஷால்.

அதேபோல் நாளைய தினம் ரிலீஸாகவிருக்கும் ‘சவாலே சமாளி’ படமும் நிச்சயம் வெளியாகும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் அருண் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

DSC_9188

இது குறித்து இன்று காலை அவசரமாக பத்திரிகையாளர்களை சந்தித்த அருண் பாண்டியன், .”சவாலே சமாளி’ திரைப்படம் திட்டமிட்டபடி நாளை உலகம் முழுவதும் 170 க்கு அதிகமான திரையரங்குகளில் வெளியாகும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

படத்தை திடீரென நிறுத்த முடியாது. ஏனெனில் பல கோடி செலவில் சரியான திட்டமிடலுடன் இந்தப் படம் தயாரிக்கப்பட்டு ரிலீஸ் தேதியும் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு நல்ல விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. நானே நினைத்தாலும்கூட இப்போது அந்தப் படத்தின் ரிலீசை நிறுத்த முடியாது.

காரணம், படம் ரிலீசுக்கான அனைத்து தொழில்நுட்ப ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் படத்தை நிறுத்தினாலும் வெளிநாட்டில் படம் ரிலீஸ் ஆகும். இதனால் கண்டிப்பாக திருட்டு வி.சி.டி உள்ளிட்ட பல கடுமையான பாதிப்புகள் ஏற்படும். இதனால் ஒரு தயாரிப்பாளராக எனக்கு கடுமையாக பிரச்சனைகள் ஏற்படும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த திடீர் முடிவில் எந்த நியாயமும் இல்லை.

இன்னும் சொல்லப் போனால் ‘லிங்கா’ படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ததே நான்தான். அந்த வகையில் நானும் கடுமையாக பாதிக்கப்பட்டேன்.  அதை நான் இதுவரை எந்த மேடையிலும் சொன்னதில்லை. ஆனால் அவர்களாக நஷ்டத்தை ஈடுகட்டுவதாக சொன்னார்கள். ஆனால் அதையும் செய்யவில்லை.

செங்கல்பட்டு என்ற ஒரு குறிப்பிட்ட எரியாவிற்காக ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் படங்களை ரிலீஸ் செய்ய தடை விதித்தது தவறான செயல்...” என்றார்.