‘சலீம்’ நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படம் துவங்கியது

‘சலீம்’ நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படம் துவங்கியது

கல்பதரு பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் P.K.ராம் மோகன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத ‘தயாரிப்பு எண்-3’ படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். சலீம் படத்தை இயக்கிய இயக்கிய இயக்குநரான நிர்மல் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் புதிய படம் பற்றியும், படத்தின் நாயகனாக சசிகுமாரை தேர்வு செய்தது பற்றியும் தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் பேசும்போது, “எல்லா தரப்பிலுமே சசிகுமார் மிகப் பெரிய ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். காரணம் அவருடைய திரைப்படங்கள் எப்போதும் குடும்பம் மற்றும் உறவுகளுக்கு அழகான ஒரு பரிமாணத்தை அளிக்கும். பத்து வருடங்களுக்கும் மேல் நடிகராக பயணித்து வரும் சசிகுமார் தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபத்தை கொடுக்கும் ஒரு நடிகராக உயர்ந்திருக்கிறார்.

எங்களுடைய தயாரிப்பில் உருவாகும் படத்தில் அவர் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் எப்போதும் அவரை எப்படி விரும்பி பார்க்கிறார்களோ, அப்படியே இந்த படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் நிர்மல்குமார் மிகச் சிறந்த கதை சொல்லி. இது ஒன்றும் உயர்த்தி மதிப்பிடப்பட்டதல்ல, அவர் ஏற்கனவே தனது முந்தைய படமான் ‘சலீம்’ படத்தின் மூலம் திறமையை நிரூபித்திருக்கிறார். இந்த படத்தின் கதையை அவர் என்னிடம் விவரிக்கும்போதே அதில் இருந்த தனித்துவத்தை நான் உணர்ந்தேன். அதனால்தான் இத்திரைப்படம் உருவானது..” என்றார்.

இத்திரைப்டத்தின் படப்பிடிப்பு நேற்று காலையில் பிரசாத் லேப் தியேட்டரில் இருக்கும் விநாயகர் கோவிலில் பூஜை நிகழ்வுடன் துவங்கியது. இந்த பூஜை நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் சசிகுமார், இயக்குநர் நிர்மல் குமார், தயாரிப்பாளர் ராம் மோகன், இயக்குநர்கள் பாரதிராஜா, சுரேஷ் கிருஷ்ணா மற்றும் படக் குழுவினர் அனைவருமே கலந்து கொண்டனர்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கிளாப் அடித்து படத்தைத் துவக்கி வைத்தார்.