ஜி.வி.பிரகாஷ்-அபர்ணா பாலமுரளி நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கும் ‘சர்வம் தாள மயம்’ திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ்-அபர்ணா பாலமுரளி நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கும் ‘சர்வம் தாள மயம்’ திரைப்படம்

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு ‘சர்வம் தாள மயம்’ என்று பெயர் வைத்திருக்கிறார் ராஜீவ் மேனன்.

இந்தப் படத்தை Mindscreen Cinemas சார்பில் லதா மேனன் தயாரிக்கிறார். இவர் ராஜீவ் மேனனின் மனைவியாவார்.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். மேலும் நெடுமுடி வேணு, குமரவேல், அதிரா, சாந்தா தனஞ்சேயன், சுமேஷ், வினித் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் தற்போது ‘செம’, ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘நாச்சியார்’, ‘குப்பத்து ராஜா’, ‘100% காதல்’ ஆகிய 7 படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ‘செம’, ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘நாச்சியார்’, ‘குப்பத்து ராஜா’ ஆகிய 5 திரைப்படங்களின் படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடெக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘குப்பத்து ராஜா’, ‘100% காதல்’ ஆகிய 2 படங்களின் படப்பிடிப்புகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் அடுத்தப் படமாக இந்த ‘சர்வம் தாள மயம்’ என்னும் படத்தில் நடிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

இதுமட்டுமில்லாமல் ‘ரெட்டை கொம்பு’, ‘கோபம்’ ஆகிய படங்களிலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ராஜீவ் மேனன், ‘பம்பாய்’, ‘குரு’, ‘கடல்’ ஆகிய மணிரத்னத்தின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். மேலும் ‘மின்சாரக் கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இப்போது 17 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்பு இந்த ‘சர்வம் தாள மயம்’ படத்தின் மூலமாக மீண்டும் இயக்குநர் தொழிலுக்கு திரும்பியிருக்கிறார்.

தயாரிப்பு – லதா, எழுத்து, இயக்கம் – ராஜீவ் மேனன், இசை – ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – ரவி யாதவ், படத் தொகுப்பு – ஆண்டனி, கலை – G.C.ஆனந்தன், இணை இயக்கம் – விஜய் பாலாஜி, இணை ஒளிப்பதிவு – ராம் குணசேகரன், உடைகள் – சரஸ்வதி மேனன், தயாரிப்பு நிர்வாகம் – R.கணேஷ், T.முருகேசன், பாடல்கள் – மதன் கார்க்கி, நா.முத்துகுமார், அருண் ராஜா, மக்கள் தொடர்பு – நிகில்.

இந்த ‘சர்வம் தாள மயம்’ படத்தின் துவக்க விழா இன்று காலை சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெற்றது.

இந்தத் துவக்க விழாவில் படத்தின் தயாரிப்பாளர் லதா மேனன், இயக்குநர் ராஜீவ் மேனன், நாயகன் ஜி.வி.பிரகாஷ், நாயகி அபர்ணா பாலமுரளி, ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், சைந்தவி பிரகாஷ் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.