full screen background image

வந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..!

வந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..!

‘புலி வருது; புலி வருது’ கதையாக ‘இதோ வரப் போகிறேன்; அதோ வரப் போகிறேன்..’ என்று மிரட்டிக் கொண்டிருந்த தமிழகத்தின் தனிப்பெரும் நிறுவனமான ‘சரவணா ஸ்டோர்ஸ்’ நிறுவனத்தின் அதிபரான சரவணன்… ஒரு ஹீரோவாக தமிழ்த் திரையுலகத்திற்குள் கால் பதித்துவிட்டார்.

மிகப் பெரிய தொழிலதிபராக வலம் வந்து கொண்டிருக்கும் சரவணன், முதன்முதலில் தனது ‘சரவணா ஸ்டோர்ஸ்’ நிறுவனத்திற்காக தமன்னா, ஹன்சிகா மோத்வானி, காஜல் அகர்வால் போன்றோருடன் விளம்பரப் படத்தில் நடித்தபோது தமிழகமே ஆச்சரியமாக பார்த்தது.

இதற்கு முன்பாக எந்தவொரு தொழிலதிபரும் தனது தொழிலுக்காக நடிகைகளும் ஆடிப் பாடியதில்லை. முதல் நபராக சரவணன் அந்தப் புண்ணியத்தை அரங்கேற்றி வைத்து ஒரு பரபரப்பினை உண்டாக்கினார்.

இதைத் தொடர்ந்து தான் சினிமாவிலும் நாயகனாக நடிக்கப் போவதாக அறிவித்திருந்தார் சரவணன்.

அதைத் தொடர்ந்து சரவணனுக்கு ஜோடியாக நடிக்க தமிழ்ச் சினிமாவின் உச்ச நடிகைகள் பலரிடமும் கேட்டும் யாரும் முன் வரவில்லை என்கிற செய்தி மட்டுமே அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. கடைசியாக, இப்போது தனக்கான ஜோடி யார் என்பதை அறிவித்துவிட்டார் சரவணன்.

11

கீத்திகா திவாரி என்னும் புதுமுகம் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். மேலும் ஒரு பிரபலமான நடிகையும் படத்தில் உண்டாம். அவருக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் புதிய படத்தை நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், இந்தப் புதிய படத்தில் ‘இளைய திலகம்’ பிரபு மற்றும் ‘சின்னக் கலைவாணர்’ விவேக் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, சீதா, கோவை சரளா, தேவி மகேஷ் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

இசை – ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு – வேல்ராஜ், கலை இயக்கம் – S.S.மூர்த்தி, படத் தொகுப்பு – ரூபன், வசனம் – பட்டுக்கோட்டை  பிரபாகர், பாடல்கள் – கவிஞர் வைரமுத்து, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

இன்னமும் பெயர் வைக்காத இந்தப் படத்தை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் விளம்பரப் படங்கள் அனைத்தையும் இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இருவரும் இணைந்து இயக்கவுள்ளனர்.

இந்தப் புதிய படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு.ஏவி.எம்.சரவணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி படத்தினைத் துவக்கி வைத்தார். மேலும் தமிழ்த் திரையுலகத்தின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான எஸ்.பி.முத்துராமனும் இந்த விழாவில் கலந்து கொண்டு கிளாப் அடித்து படத்தினைத் துவக்கி வைத்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, இமயமலை மற்றும் பல வெளி நாடுகளிலும் நடைபெறவுள்ளது.

“இந்தப் படத்தில் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம்” என்கிறார்கள் இரட்டை இயக்குநர்களான  ஜேடி – ஜெர்ரி இருவரும்.

Our Score