full screen background image

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து முன்னாள் நிர்வாகிகளாக நடிகர்கள் சரத்குமார், ராதாரவி இருவரும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை 6 மணி அளவில் முடிவடைந்தது.

பின்னர் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

siaa union gb meeting

அப்போது செயலாளர் விஷால் பேசும்போது, “இன்றைய பொதுக்குழுவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நடிகர்கள் விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிலர் வராதது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

நடிகர் சங்க பொதுக்குழுவில் முன்னாள் நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.

அவர்களை நிரந்தரமாக சங்கத்தில் இருந்து நீக்குவதற்கு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தில் முந்தைய நிர்வாகத்தால் பல்வேறு தவறுகள் நடந்துள்ளன. எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் வற்புறுத்தப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இனிமேல் பொறுப்புக்கு வருபவர்களுக்கு இது ஒரு பயத்தை ஏற்படுத்தும்.

நடிகர் சங்க அறக்கட்டளையில் சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரும் நிரந்தர உறுப்பினர்களாக நீடிக்க அவர்கள் பொறுப்பில் இருந்தபோது அறக்கட்டளை விதிமுறையில் மாற்றம் செய்துள்ளனர். 5 பேர்தான் அறங்காவலர்களாக இருக்க முடியும் என்று விதியை திருத்தி உள்ளனர். ஆனால் இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டபோதே 9 பேர் இதில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்த்து. சில காலம் அப்படித்தான் இருந்தது. ஆனால் அந்த விதிமுறையை சரத்குமாரும், ராதாரவியும் தங்களுடைய வசதிக்காக திருத்தி 5 பேர் மட்டுமே என்று சட்டத்திற்கு புறம்பாக மாற்றியுள்ளனர். அந்த விதிமுறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதற்கும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட வரவு–செலவு கணக்குகளுக்கும் ஒப்புதல் பெறப்பட்டது. பொதுக் குழுவை லயோலா கல்லூரியில் இருந்து நடிகர் சங்க வளாகத்துக்கு மாற்றியதற்கும் ஒப்புதல் பெறப்பட்டது. அனைத்து துறைகளில் இருந்தும் அனுமதி சான்றிதழ் பெற்று சட்டப்படியே இந்த பொதுக்குழு நடந்துள்ளது. எனவே இந்த பொதுக்குழு கூட்டம் செல்லும்.

சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சிலர் பொதுக்குழு கூட்டம் நடந்த பகுதியில் தகராறில் ஈடுபட்டனர். அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்தனர். தடுத்தவர்களை தாக்கி காயப்படுத்தி உள்ளனர். கருணாசின் காரை உடைத்துள்ளனர். அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்.

நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துவிட்டு 67 பேர் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் முகவரிக்கு கடிதம் அனுப்பினாலும் திரும்பி வந்துவிடுகிறது. எனவே அந்த 67 பேரையும் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

நடிகர் சங்க கட்டிடத்துக்கு புதிய கட்டிடம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கட்டுமான பணிகள் தொடங்கும்.  நாங்கள் பதவியில் இருக்கும் 3 வருட காலத்துக்குள் கட்டிடத்தை கட்டி முடிப்போம்.  தற்போது நடிகர் சங்கத்தில் ரூ.8.5 கோடி இருப்பில் உள்ளது…” என்று கூறினார்.

Our Score