கான்ஸ் பட விழாவில் ‘சங்கமித்ரா’ அறிமுகம் – சந்தோஷத்தில் ஸ்ருதிஹாசன்

கான்ஸ் பட விழாவில் ‘சங்கமித்ரா’ அறிமுகம் – சந்தோஷத்தில் ஸ்ருதிஹாசன்

சர்வதேச அளவில் புகழ் பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் இயக்குநர் சுந்தர்.சி.யின் இயக்கத்தில் உருவாகும் வரலாற்று திரைப்படமான சங்கமித்ரா திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து படத்தின் நாயகியான நடிகை ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரசிகர்களை கவரும் கதைக்களம் கொண்ட  ‘சங்கமித்ரா’ படம் கான்ஸ் பட விழாவில்  அறிமுகம்  செய்யப்படுவது  குறித்தும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி  தனது அடுத்த படமான  சங்கமித்ராவை பிரம்மாண்டமான முறையில் உருவாக்குகிறார்.

8-ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையை விவரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா  இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தில் வீரமும், தீரமும் நிறைந்த வீர மங்கையாக நாயகி ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். 

இந்தப் படத்தில்  வாள் வீச்சில் வல்லமை  கொண்ட  வீர மங்கை  கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை ஸ்ருதிஹாசன்  லண்டனில் தங்கியிருந்து விஷேச பயிற்சிகளை  மேற்கொண்டு வருகிறார். 

தேனாண்டாள் ஸ்டூடியோஸ்  தயாரிக்கும் இந்த படம் அதன் வரலாற்று கதைக் களத்திற்காக  ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், வரும் மே 18-ம் தேதி நடைபெறும் சர்வதேச அளவில் புகழ் பெற்ற 70- வது  கான்ஸ்  திரைப்பட விழாவின் துவக்க நாளில், ‘சங்கமித்ரா’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சுந்தர்.சி, நாயகர்கள் ஜெயம் ரவி, ஆர்யா, நாயகி ஸ்ருதிஹாசன், தயாரிப்பாளர்கள் நாரயணன்  ராமசாமி, ஹேமா ருக்மணி புரொடெக்‌ஷன் டிசைனர் சாபு சிரில் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

“கான்ஸ் திரைப்பட விழா மூலம்  ‘சங்கமித்ரா’  படத்தை சர்வதேச ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்வது தனக்கு பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்தின் கதை தேசிய மற்றும் சர்வதேச ரசிகர்களை ஈர்க்க கூடியது என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி இந்த அறிவிப்பின் மூலமாக படத்தின் துவக்கத்திலேயே சர்வதேச ரசிகர்களின் பங்கேற்பை பெறுவது எனக்கு பெரிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது..” என்றும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.




error: Content is protected !!