‘சாஹூ’ படத்தில் பிரபாசின் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார்

‘சாஹூ’ படத்தில் பிரபாசின் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார்

‘பாகுபலி’யின்  இமாலய வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் ‘சாஹூ’.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது.

இத்திரைப்படத்திற்காக மிகப் பெரிய செட்டுகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

கதாநாயகி தேர்வு சம்பந்தமாக பல்வேறு ஊகங்கள் உலவி வந்த நிலையில், அதன் தயாரிப்பாளர்கள் வம்சி மற்றும் பிரமோத், இப்படத்தின் கதாநாயகியை அறிவித்திருக்கிறார்கள். படத்தின் நாயகி ஸ்ரத்தா கபூர்.  ‘ஹசீனா பார்க்கர்’ பட நாயகியே ‘சாஹூ’வில் பிரபாசுடன் திரையைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

‘ஆஷிக்-2’ படத்தின் மூலம் புகழின் உச்சத்தைத் தொட்ட ஸ்ரத்தா கபூர், இயக்குனர் S.S.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்புகளான ‘பாகுபலி’ திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத, நிறைவான இடத்தைப் பிடித்த பிரபாஸின் காதல் நாயகியாக இதில் நடிக்கிறார்.

1 - Prabhas (3)

“ஸ்ரத்தா கபூர் கதைக்கு மிகவும் பொருத்தமான தேர்வு எனவும், அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி. இது பிரபாஸ் நடிக்கும் முதல் ஹிந்திப் படம் என்பதால் மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது. பரபரப்பான விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளுக்கு இந்தப் படத்தில் குறைவிருக்காது…” என்கின்றனர் படத்தின் தயாரிப்பாளர்கள். 

சாஹூ குடும்பத்தில் ஸ்ரத்தா கபூரை பரவசத்துடன் வரவேற்கும் தயாரிப்பாளர்கள், பிரபாஸ்-ஸ்ரத்தா ஜோடி வெள்ளித்திரையில் ஏற்படுத்தவிருக்கும் சுவராஸ்யத்தை வெகுவாக எதிர்நோக்கி காத்திருப்பதாகக் கூறுகின்றனர். 

‘பாகுபலி-2’   வெளியீட்டுடன் இரசிகர்களின் பார்வைக்காக வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸர், வெகுவான வரவேற்பைப் பெற்றதுடன், ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் கிளப்பி இருக்கறது.

திரைப்படத் துறையின் மிகச் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களான சாபு சிரில் கலை இயக்குநர் பணியைச் செய்ய, ஒளிப்பதிவை மதி மேற்கொள்ள, திரைப்பட தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமிதாப் பட்டாச்சார்யா பாடல்கள் எழுத, சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கிறார். 

நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடிக்க, சுஜீத் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படம், அடுத்த ஆண்டு திரைக்கு வரவிருக்கிறது.

இத்திரைப்படத்தை UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்கின்றனர்.