“சாஹூ’ எங்களை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும்” – நாயகன் பிரபாஸ் பெருமிதம்..!

“சாஹூ’ எங்களை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும்” – நாயகன் பிரபாஸ் பெருமிதம்..!

1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த ‘பாகுபலி-2’ படத்திற்கு பிறகு  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில், நாயகன் பிரபாஸின் நடிப்பில் ‘சாஹூ’ என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது.

UV கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் வம்சி, பிரமோத், விக்ரம் மூவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பிரபாஸின் நாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்க ஜாக்கி ஷிராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்சிரெக்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பல அனுபவமிக்க நடிகர்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மதி, தயாரிப்பு வடிவமைப்பு – சாபு சிரில், படத் தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத், பாடல்கள் – அமிதாப் பட்டாச்சார்யா, இசை – சங்கர்-எஹ்சான்-லாய் எழுத்து, இயக்கம் – சுஜீத்.

இந்தப் படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் நாயகன் பிரபாஸ், நாயகி ஷ்ரத்தா கபூர், நடிகர் அருண் விஜய், இயக்குநர் சுஜீத், தயாரிப்பாளர்கள் மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நாயகன் பிரபாஸ் பேசும்போது, “இந்தப் படத்தின் தலைப்பான ‘சாஹோ’ என்பது ‘ஜெய் ஹோ’ மாதிரியான ஒரு வார்த்தை. அது படமாக பார்க்கும்போது உங்களுக்கு இன்னும் புரியும் என நினைக்கிறேன்.

actor prabhas

‘சாஹோ’ படத்துக்காக 2  வருடங்கள் கொடுக்க வேண்டும் என நான் முதலில் நினைக்கவில்லை. ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு நல்ல படங்கள் பண்ணனும் என நினைத்தேன். சுஜித் சொன்ன கதை அப்படியிருந்தது, தயாரிப்பாளரும் நிறைய முதலீடு பண்ணிவிட்டார்கள். ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சிக்கும் நிறைய முன் தயாரிப்புகள் இருந்தன.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹாலிவுட் என பல இடங்களைச் சேர்ந்த சண்டைக் காட்சி இயக்குநர்கள் இதில் பணிபுரிந்துள்ளனர். அதற்காக நேரம் கொடுக்க வேண்டும். அபுதாபி, இத்தாலி, இந்தியா மற்றும் பல்வேறு ஐரோப்பா நாடுகளிலும் படப்பிடிப்புகளை நடத்தினோம்.

நான் தமிழ்நாட்டில்தான் பிறந்தேன். ஆகையால் நேரடியான தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளது. கூடிய சீக்கிரம் அது நடக்கும்…” என்றார்.

arun vijay

நடிகர் அருண் விஜய் பேசும்போது, “இந்தப் படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷம். பெருமைப்படக் கூடிய படைப்பில் நானும் இருக்கிறேன். சுஜித் சார் என்னிடம் கதை சொல்லும்போதே ‘இந்தக் கேரக்டர் நீங்க பண்ணீங்கன்னா நல்லாயிருக்கும் என்று பிரபாஸ் அண்ணா சொன்னார்’ எனக் கூறினார். அப்போதே இந்தப் படத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என முடிவு பண்ணினேன்.

‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு, சுஜித் மீது பெரிய நம்பிக்கை வைத்து பிரபாஸ் சார் இந்தப் படத்தைக் கொடுத்ததிற்கு நன்றி.

‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், சரியான வாய்ப்புக்காக காத்திருந்தேன். முதல் முறையாக இந்தியில் பேசி நடித்துள்ளேன்.

சுஜித் சார் பார்க்க ரொம்ப சிம்பிளாக இருப்பார். ஆனால், நிறைய நடிகர்கள், படப்பிடிப்பு தளங்களைக் கையாளக் கூடிய விதம் சிறப்பாக இருக்கும். அதற்கு நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. 

இரண்டாண்டுகள் கழித்து வரக் கூடிய படம் என்பதால் படம் எப்படியிருக்க வேண்டும் என்பதில் பிரபாஸ் ரொம்ப தெளிவாக இருந்தார். ‘பாகுபலி’க்கு பிறகு நிறைய பெரிய இயக்குநர்களுடன் படம் பண்ணியிருக்கலாம். அடுத்தக் கட்டம் எப்படி என்பதில் ரொம்ப தெளிவாக இருந்திருக்கிறார். பிரபாஸ் உடன் பணிபுரிந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி. ரொம்ப எளிமையான மனிதர். 

இந்தப் படத்தின் லுக்கை வைத்துக் கொண்டே ‘செக்கச் சிவந்த வானம்’ மற்றும் ‘தடம்’ படங்களில் நடித்தேன். ஏனென்றால் இதில் ஒப்பந்தமாகிவிட்டதால் என்னால் லுக்கை மாற்ற இயலவில்லை. இத்திரைப்படம் அனைவருமே பெருமைப்படக் கூடிய படமாக இருக்கும்…” என்றார்.

shraddha kapoor

நாயகி ஷ்ரத்தா கபூர் பேசும்போது, “இதுதான் எனது முதல் மும்மொழி திரைப்படம். நான் இதற்கு முன் ‘ஓகே கண்மணி’ ரீமேக்கில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் ‘அருவி’ என்ற படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. எப்போதும் ஷூட்டிங்கிலேயே இருப்பதால் நிறைய படங்களை பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.

இந்தப் படத்துக்காக இயக்குநர் என்னை தேர்வு செய்தது என்னுடைய அதிர்ஷ்டம். கதையை கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. அதிலும் பிரபாஸ் நடிக்கிறார் என்றும் இதுவொரு மும்மொழி திரைப்படம் என்று கூறியதும் உடனடியாக ஒப்புக் கொண்டேன்.

இந்தப் படம் ஒரு ஆக்‌ஷன், த்ரில்லர் என்பதால் நிறைய ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. முதன்முதலாக துப்பாக்கி பிடித்து நடித்தது கடினமாக இருந்தது. என் கைகள் சிறியதாக இருப்பதால் துப்பாக்கியை பிடிக்கும்போது அவை மிகவும் நடுங்கும்.

படத்தில்தான் நம்மால் கெட்டவர்களை அடிக்க முடியும். அதை நினைத்து நடித்ததால் எனது நடிப்பு படத்தில் சிறப்பாக வந்திருப்பதாக நினைக்கிறேன்..” என்றார்.




error: Content is protected !!