தனுஷுடன் நடிக்க மறுத்த எஸ்.ஏ.சந்திரசேகரன்..!

தனுஷுடன் நடிக்க மறுத்த எஸ்.ஏ.சந்திரசேகரன்..!

இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்திருக்கும் 'கொடி' படத்தில் நடிகர் தனுஷுக்கு வில்லனாக அரசியல்வாதி கேரக்டரில் பழம்பெரும் இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார்.

ஆனால் முதலில் கதையைக் கேட்டுவிட்டு 'உன் இயக்கத்துல நடிக்க எனக்கு ஆசை. ஆனால் இதுல நடிக்க முடியாது' என்று மறுத்துவிட்டாராம் எஸ்.ஏ.சி.

kodi-audio-launch-photos-7

இது பற்றி விழா மேடையில் இயக்குநர் துரை செந்தில்குமார் பேசும்போது, "நான் எப்போது கதை எழுதினாலும் என்னுடைய மனதில் தனுஷ் சார்தான் முதலில் வருவார். அவர் தயாரித்த இரண்டு திரைப்படங்களை நான் இயக்கிவிட்டேன். இந்தப் படத்தை அவரை வைத்தே இயக்கியுள்ளேன். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தப் படத்தில் பல அரசியல் திரைப்படங்களை இயக்கிய தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகரன் ஸார் ஒரு மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரிடம் நான் முதலில் கதை சொல்லும்போது, கதையைக் கேட்டுவிட்டு ‘நடிக்க மாட்டேன்’ என்று சொன்னார்.  சிறிது நேரம் கழித்து எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு ‘நான் இப்படத்தில் நடிக்கிறேன்…’ என்றார்.

முதலில் ‘என்னுடைய இயக்கத்தில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று கூறியவர். வீட்டிற்கு சென்று இப்படத்தை பற்றி கூறியதும், ஷோபா மேடம் அவரிடம், ‘தனுஷ் படத்தில் நடிப்பது மிகப் பெரிய வாய்ப்பு அதில் நீங்கள் எப்படி நடிக்க மறுக்கலாம்..? நாங்கள் அனைவரும் தனுஷின் ரசிகர்கள்.. நீங்கள் கண்டிப்பாக ‘கொடி’ படத்தில் நடிக்க வேண்டும்’ என்று கூறியதாக கூறினார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு சிறந்த இசையை கொடுத்துள்ளார். அவருடைய வீட்டிற்கு சென்றாலே ஓர் நல்ல மனநிலை வரும். இந்த இடத்தில் நமக்கு நல்ல இசை கிடைக்கும் என்று தோன்றும். அதே போல்தான் அவருடைய ஸ்டுடியோவும்.. எனக்கு நல்ல சூழலையும், கூடவே நல்ல இசையையும் தந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி.." என்றார்.