ரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..!

ரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..!

பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் நாயகனாக ரியோ ராஜ் நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கவிருக்கிறார்.

மேலும் முனீஷ்காந்த், ரோபோ சங்கர், பால சரவணன், விஜி சந்திரசேகர், ‘ஆடுகளம்’ நரேன், ரேகா, சந்தானபாரதி, லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – பி.ராஜசேகர், படத் தொகுப்பு – சாம் ஆர்.டி.எக்ஸ், கதை – ஏ.சி.கருணாமூர்த்தி, வசனம் – ஆர்.கே., சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், கலை இயக்கம் – சரவணன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா-ரேகா, டி.ஒன்., எழுத்து, இயக்கம் – பத்ரி வெங்கடேஷ்.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ஏற்கெனவே ‘பாணா காத்தாடி’, ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்களை இயக்கியவர். இது இவர் இயக்கும் மூன்றாவது திரைப்படமாகும்.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ராஜேஷ் குமார் பேசும்போது, “பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ்’ என்ற எங்கள் நிறுவனம் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தர வேண்டும் என்ற குறிக்கோளுடன் துவக்கப்பட்டதாகும்.

எங்களுடைய நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஏ.சி.கருணாமூர்த்தி எழுதிய கதையும், அதற்கு பத்ரி வெங்கடேஷ் கொடுத்திருக்கும் திரைவடிவமும் அமைந்துவிட்டது.

மேலும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் அறிமுகமானபோதே அனைத்து தரப்பு ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்ற நாயகன் ரியோ ராஜ், இந்தப் படத்தில் இருப்பது இன்னும் சிறப்பானது.

இப்படம் முழுக்க, முழுக்க பொழுது போக்குப் படம். துவக்கம் முதல் இறுதிவரை  ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போட்டு அமர வைக்கும் அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது..” என்றார்.

தயாரிப்பாளர் எல்.சிந்தன் பேசும்போது, “வரும் அக்டோபர் 17-ம் தேதியிலிருந்து இந்தப் படத்தின் படப்படிப்பை துவக்கி முழுவேகத்தில் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்தப் படத்தின் கதாநாயகி வேடம் மிகவும் வலுவானது என்பதால், பல நடிகைகளைப் பரிசீலித்தோம். இறுதியில் ரம்யா நம்பீசன்தான் அந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பதுடன், அந்தப் பாத்திரப் படைப்பை நியாயப்படுத்தும்விதத்தில் நடிப்பார் என்ற முடிவுக்கு வந்தோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக யுவன் சங்கர் ராஜா எங்கள் படத்துக்கு இசையமைப்பது, படத்தை அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்தி விட்டது…” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று சென்னையில் துவங்கியது. “இது போன்ற மழை நாளில் படப்பிடிப்பு துவங்கியதை இயற்கையின் ஆசிர்வாதமாக நினைக்கிறேன். மேலும் பல முனைகளிலிருந்தும் வரும் நேர்மறையான ஆதரவு படத்தின் வெற்றிக்கு அடிகோலுமென நம்புகிறேன்” என்றார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.

சென்னை மட்டுமின்றி கேரளா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கிளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.




error: Content is protected !!