காதலனும் ரவுடி; காதலியும் ரவுடி – ‘ரங்க ராட்டினம்’ சொல்லும் காதல் கதை..!

காதலனும் ரவுடி; காதலியும் ரவுடி – ‘ரங்க ராட்டினம்’ சொல்லும் காதல் கதை..!

காயத்திரி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜி.ராமசாமி தயாரித்திருக்கும் படம் ‘ரங்க ராட்டினம்’.

இதில் மகேந்திரன் நாயகனாகவும், ஷில்பா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இசை – செல்வநம்பி, ஒளிப்பதிவு – ராசாமதி, படத் தொகுப்பு – விஷால் V.S., பாடல்கள் – நா.முத்துக்குமார், யுகபாரதி, ஏகாதசி, நடனம் – தினேஷ், நிர்வாகத் தயாரிப்பு – பெருமாள் காசி, தயாரிப்பு: G.ராமசாமி B.A. B.L., எழுத்து, இயக்கம் – சுந்தரன். இவர் ஏற்கெனவே ‘திட்டக்குடி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். 

இப்படம் குறித்து இயக்குநர் சுந்தரன் பேசுகையில், “ராட்டினம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் சந்தோஷப்படுத்தும் ஒரு விளையாட்டு சாதனம். ரங்க ராட்டினம் அதிகப்படியான சந்தோஷத்தை கொடுக்கும்.

முழுக்க, முழுக்க யதார்த்தமான கதையாக ‘ரங்கராட்டினம்’ படத்தை உருவாக்கியிருக்கிறோம். ஒரு சேட்டைக்கார பையன், பயங்கர குறும்புக்காரன். அவன் அடக்கமும், அமைதியும் கொண்ட ஒரு பெண்ணைப் பார்த்து ஒருதலையாக காதலிக்க ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த பெண் இவனைவிட பயங்கர சேட்டை மற்றும் குறும்புக்காரப் பெண் என்று தெரிந்தவுடன் அவளை விட்டு விலக நினைக்கிறான். ஆனால், அவளோ அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா..? இல்லையா.. என்பதைத்தான் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம்.

‘நான் கடவுள்’ ராஜேந்திரன் காமெடி வேடத்தில் மட்டுமில்லாமல், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 67 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படத்தில் நான்கு பாடல்கள். இதில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார்.  படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல், படம் பார்ப்பவர்களுக்கு அதிக சந்தோஷத்தை இந்தப் படம் கொடுக்கும்..” என்றார் நம்பிக்கையாக.