“மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்…” – ‘தர்மதுரை’ படத்திற்கு ராமதாஸ், திருமாவளவன் பாராட்டு..!

“மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்…” – ‘தர்மதுரை’ படத்திற்கு ராமதாஸ், திருமாவளவன் பாராட்டு..!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் ஆகியோரின் பாராட்டுக்களோடு இன்றைக்கு திரைக்கு வந்திருக்கிறது ‘தர்மதுரை’ திரைப்படம்.

ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுரேஷின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். சீனு ராமசாமி இயக்கியிருக்கிறார்.

seenu ramasamy-ramadoss

இந்தப் படம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான ராமதாஸ் அவர்களுக்கு பிரத்யேகமாக காண்பிக்கப்பட்டது. தனது குடும்பத்துடன் வந்திருந்து படம் பார்த்த ராமதாஸ் படத்தை பெரிதும் பாராட்டினார். படக் குழுவினர் நன்கு சிரத்தையெடுத்து படத்தை உருவாக்கியிருப்பதாக பாராட்டினார்.  

“நல்ல கதை, நன்றாக இயக்கப்பட்டுள்ள படம். தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ‘தர்மதுரை’..” என்று மருத்துவர் ராமதாஸ் ‘தர்மதுரை’ படத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

“நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்தை ‘தர்மதுரை’ தந்திருக்கிறது..” என்று கூறியுள்ளார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

seenu ramasamy-thirumavelan-1

இதேபோல், ‘தர்மதுரை’ படத்தினை பிரத்கேய காட்சியில் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன், “ஒரு குடும்பத்தின் உணர்ச்சி மோதல்களை மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். படத்தில் சமூக நல்லிணக்கம், திருநங்கை மறுவாழ்வு, காதல் ஆகியவற்றை அழகாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்..” என்றார் திருமாவளவன்.

‘தர்மதுரை’ மருத்துவர்கள் வாழ்க்கையை பேசும் படம், என்பதால் டாக்டர் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் ஆகியோரின் பாராட்டை முக்கியத்தும் வாய்ந்த நிகழ்வாக பார்க்கிறது ‘தர்மதுரை’ படக் குழு.