“சூப்பர் ஸ்டார் ரஜினி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகணும்..” – இயக்குநர் அமீரின் ஆசை..!

“சூப்பர் ஸ்டார் ரஜினி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகணும்..” – இயக்குநர் அமீரின் ஆசை..!

இயக்குநர் அமீர் எப்போதும், எங்கே பேசினாலும் தனது பேச்சின் துவக்கத்தில் 'உலகத்திற்கு சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்' என்று சொல்லித்தான் ஆரம்பிப்பார்.

இன்று சத்யம் தியேட்டரில் நடைபெற்ற 'லிங்கா' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் இப்படித்தான் ஆரம்பித்தார். ஆனால் அவர் பேசிய பேச்சோ அதுவரையிலும் அரங்கத்தில் இருந்த 'சாந்தி'யையும் சமாதானத்தையும் காலி செய்துவிட்டது..!

துவக்கத்தில், "லிங்கா' என்ற தலைப்பு நானும் தனுஷும் இணைந்து நடிப்பதற்காக பதிவு செய்து வைத்திருந்தோம். கே.எஸ்.ரவிக்குமார் கேட்டவுடன் கொடுத்துவிட்டேன்.." என்று  அமைதியாகத்தான் ஆரம்பித்தார் அமீர்.

'லிங்கா' போஸ்டரின் பல டிஸைன்கள் ஸ்கிரீனில் ஒளிபரப்பப்பட்டு வந்தன. அதில் ரஜினி தன் இரு கைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு நடந்து வருவது போல ஒரு போஸ்டர் இருந்த்து. அதைப் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டினார் அமீர்.

"அந்த போஸ்டரை பார்த்தவுடனேயே எனக்கு ஒண்ணு தோணுச்சு. 'எவனும் என் பின்னாடிகூட வராதீங்கடா'.. 'பக்கத்துலேயே நிக்காதீங்கடா'ன்னு சொல்ற மாதிரியிருந்தது.. அற்புதமான ஸ்டில் அது..!

தமிழ்நாட்டுல நாலைஞ்சு வருஷமா பல பத்திரிகைகள்ல ஒரு விஷயத்தைத் தொட்ர்ந்து எழுதிக்கிட்டேயிருக்காங்க. அது 'அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு'ன்னு..? யாரையாச்சும் சொல்ல முடியுமா..? அன்னிக்கும், இன்னைக்கும், என்னைக்கும் சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி ஸார் மட்டும்தான்.

‘பைரவி’ படத்தை எங்க அப்பாவோட பார்த்த காலத்துல இருந்து அவரை பார்த்துக்கிட்டேதான் வர்றேன்.. 40 வருஷமா சூப்பர் ஸ்டார்ன்ற பட்டத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காம ஒருத்தர் இருக்காருன்னா அவரோட பவர் என்னன்னு அவருக்கே தெரியலை.. தெலுங்கு சூப்பர் ஸ்டார், கன்னட சூப்பர் ஸ்டார், இந்தி சூப்பர் ஸ்டார், மலையாள சூப்பர் ஸ்டாருன்னுல்லாம் இங்க யாரும் இல்ல.. இந்தியால ஒரேயொரு சூப்பர் ஸ்டார்ன்னா அது நம்ம ரஜினி ஸார்தான்.

நான் ஆரம்பத்துல கமல்ஹாசனின் ரசிகன். அதுக்கப்புறம்தான் நிறைய ரஜினி படங்களை பார்த்து, பார்த்து இவர்கிட்டேயும் ஏதோ ஒண்ணு இருக்குன்னு நினைச்சு இவருக்கும் ரசிகனானேன். நான் சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ள நுழைஞ்சு பல வருஷமானாலும் இன்னிவரைக்கும் ரஜினி ஸார்கூட தனியா போட்டோ எடுத்துக்கிட்டதில்லை.. இப்போ எடுத்துக்கப் போறேன்..!” என்று சொல்லி ரஜினியின் அருகில் வர, ரஜனி எழுந்து வந்து அமீரைக் கட்டிப் பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இத்தோட போயிருந்தால் பிரச்சினையில்லை. சனியன் சடையை விரித்தாடியதுபோல கூடியிருந்த ரஜினி ரசிகர்களை அளவுக்கதிமாக உசுப்பிவிட்டார் அமீர்.

இவருக்கு முன்பாக அதே மேடையில் பேசிய சேரனும், விஜயகுமாரும் ரஜினியை இன்னொருவிதமாக பார்க்க ஆசைப்படுவதாக சொல்லியிருந்தார்கள்.

சேரன் தான் பேசும்போது ஏதோ இயல்பாக பேசுவதை போல "ரஜினி அவ்வளவு சீக்கிரம் நம்மைவிட்டு போக மாட்டார்.. இன்னும் அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் சூப்பர் ஸ்டாராக வாழ்ந்துவிட்டுத்தான் போவார்..." என்றெல்லாம் பேசியதை மேடையில் இருந்தவர்களே விரும்பவில்லை. ஆனாலும் நிலைமை புரியாமல் அதையே தொடர்ந்து பேசினார் சேரன். கூடவே, "காந்தி, காமராஜருக்கு பிறகு நீங்கள்தான் மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும். ரசிகர்கள் ரஜினியிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதனை சூப்பர் ஸ்டார் பூர்த்தி செய்வாரென்று நம்புகிறேன்.." என்றார் சேரன்.

விஜயகுமார் வழக்கம்போல ரஜினியை கையைப் பிடித்திழுத்து முச்சந்தியில் நிறுத்துவதுபோல "ரஜினி தயக்கம் காட்டக் கூடாது.. இறங்கி வர வேண்டும்.. களத்தில் அவரைக் காக்க லட்சோபலட்சம் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். நீங்கள் பெரிய பதவிக்கு வருவீங்க என்று மக்கள் எதிர்பார்க்குறாங்க. அந்த மாபெரும் நாள் விரைவில் வரும்.." என்றெல்லாம் ஏற்றிவிட்டார்.

இதனை தன் பேச்சில் குறிப்பிட்டு துவக்கிய அமீர், “முப்பதாண்டுகளாக உங்க மேல மட்டும்தான் தமிழக மக்கள் இப்படியொரு நம்பிக்கையை வச்சிருக்காங்க. அதுக்கான காலமும் இப்போது கனிந்து வந்திருப்பதாக கடவுள் மேலருந்து சொல்றார்.

நீங்க அரசியலுக்கு வரணும்னு இந்த நாடே ஆசைப்படுது. முதல்ல ஒரு அறிவிப்பை வெளியிடுங்க.. அரசியலுக்கு வரணும்ங்கிற ஆசையுடன் நீங்க ஒரேயொரு மேடை ஏறினா போதும். இந்த மொத்த நாடும் உங்க பின்னால் வரும். முதலில் களத்தில் இறங்கி மக்களைச் சந்திப்போம். அப்புறம் தானாக பதவி நாற்காலி உங்களைத் தேடி வரும்.

'படத்தில் வரும் வசனங்களையெல்லாம் நான் பேசவில்லை, இயக்குநர்கள் எழுதுகிறார்கள்.. நான் பேசுகிறேன்'னு சொல்றீங்க.. எங்க, உங்க மனசு தொட்டு சொல்லுங்க. உங்க மனதில் இருப்பதைத்தானே ஒவ்வொரு இயக்குநரும் எழுதுறாங்க. அதைத்தான நீங்களும் சொல்றீங்க.. 'லிங்கா' படத்தின் ட்ரைலரில் ஒப்பனிங் காட்சில 'இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணும்'னு ஒரு டயலாக் இருக்கு. நாங்களும் அதைத்தான் கேட்கிறோம். அதான் இங்க இருக்கிற எல்லாரோட ஆசையும்.

நான் ரொம்ப லக்கி பண்ணியிருக்கேன். யாருக்குமே கிடைக்காத ஒரு பெருமையை ரஜினி ஸார் எனக்குக் கொடுத்திருக்காரு. அவர்கிட்ட பல மணி நேரம் பேசுற வாய்ப்பை எனக்குக் கிடைச்சிருக்கு. அப்போ அவர் என்கிட்டசொன்னார்.. ‘நான் மெண்டல் அமீர்..’ன்னார். நீங்க அரசியலுக்கு வர்றதை பத்தி ஆயிரம் பேர் ஆயிரம்விதமா பேசலாம். நீங்க பார்க்காத விமர்சனமா..? அதையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு, இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்க ஏதாவது நல்லது செய்யணும்னு நினைச்சிங்கன்னா, களத்துல இறங்கி நடங்க.. நாங்க எல்லாரும் அப்படியே உங்க பின்னாடி வந்திடறோம்.

இங்கே எனக்கு முன்னாடி பேசின எஸ்.பி.முத்துராமன், சேரன், விஜயகுமார் எல்லாரும் நீங்க அரசியலுக்கு வரணும்னு பூடகமாகச் சொன்னாங்க. நான் ஓப்பனா சொல்றேன்.. அது வேற ஒண்ணுமில்ல.. நீங்க தமிழ்நாட்டோட சி.எம். ஆகணும்..” என்று சொல்லி நிறுத்த.. ரசிகர்களின் கத்தலில் அரங்கமே ஆட்டம் கண்டுவிட்டது. ஆனால் ரஜினியோ நாற்காலியின் கைப்பிடியில் கையை வைத்து கன்னத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு அமீரையே பார்த்துக் கொண்டிருந்தார். அமீரும் மைக் அருகே ரஜினியை பார்த்தபடியே நின்றிருந்தார். செம ஆக்சனை காட்டினாங்க ரெண்டு பேரும்..! இரண்டு நிமிடங்கள் கழித்துதான் அரங்கம் சகஜ நிலைமைக்கு வந்தது.

மீண்டும் தொடர்ந்த அமீர், “இதுதான் ஸார் எல்லோருடைய ஆசையும். இந்த நம்பிக்கை பொய்யா இருக்குமா..? இங்கே நீங்க பார்க்கிற சில ஆயிரம் பேர் மட்டும் இப்படி கேட்கலை.. வெளியில், இந்த தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பேரும் இப்படித்தான் சார் ஆசைப்படுறாங்க. இதை உங்ககிட்ட மட்டும்தான் கேட்க முடியும், வேற யார்கிட்ட சார் கேட்க முடியும்..?

இப்போதுதான் ஒரு தீபாவளி போச்சு. 2015, டிசம்பர்-12-ல் அடுத்த தீபாவளி வருகிறது. நான் உங்களிடம் ஒன்று மட்டும் கேட்கிறேன். இந்த டிசம்பர் 12-க்கு 'லிங்கா', அடுத்த டிசம்பர் 12-க்கு என்ன என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்.

இந்த விஷயத்தை இங்க நேரடியா உங்ககிட்ட சொல்ல பலர் தயங்கறாங்க. எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என் வாழ்நாளில் தலைவர்னு யார் பெயரையும் நான் உச்சரித்ததில்லை. இன்னிக்கு முதல் முறையா சொல்றேன்.. அரசியலுக்கு வரத் தகுதியான இடத்தில், இந்த மக்களை வழி நடத்தக் கூடிய ஒரே தலைவர் நீங்கதான்..!” என்று பொங்கித் தீர்த்துவிட்டு சீட்டுக்கு திரும்பிய அமீரை ரஜினி அழைத்து கை குலுக்கினார்.

இவருக்கடுத்து பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “ரஜினியின் உண்மையான செல்வம் வங்கிக் கணக்கல்ல.. வாங்கிப் போட்டிருக்கும் நிலங்கள் அல்ல.. பங்குச் சந்தையில் போட்டிருக்கும் பணமல்ல.. இதோ இந்த ரசிகப் பெருமக்கள்தான்..

ஒரு குறிப்பிட்ட எல்லைவரை பழகுவதுதான் நட்புக்கு அழகு. நான் பல ஆண்டு காலம் ரஜினியுடன் நெருங்கிப் பழகியவன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.. ரஜினியின் மனதை என்னாலேயே முழுதாக புரிந்து கொள்ள முடியவில்லை.. அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிய முடியவில்லை. ரஜினியின் மன ஆழத்தைக் கண்டறியும் கருவி இன்னமும் கண்டறிய முடியவில்லை.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று விவாதம் செய்தே பத்திரிகைகள் கடந்த கால் நூற்றாண்டை கடந்துவிட்டன. ஆனாலும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். யார் ஒருவரின் மன விருப்பத்துக்கு எதிரான ஒரு செயலை செய்யும்படி நாம் வற்புறுத்தக் கூடாது. அது அநாகரிகமான செயல். ஆனால் ஒன்று.. எந்த முடிவையும் ரஜினி மேல் யாரும் திணிக்க முடியாது.. அதே சமயத்தில் ரஜினி ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் தடுக்கவும் முடியாது.." என்றார்.

இவருக்கு பின்பு பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதை மறைமுகமாக பேசினார். ரஜினியின் பின்னால் எப்போதும் தான் இருக்கப் போவதாகவும் கூறினார் ரவிக்குமார்.

இது எல்லாவற்றிற்குமான பதிலை ரஜினி தன் பேச்சின் இறுதியில் குறிப்பிட்டார்.

"என் மனதில் இருப்பது யாருக்கும் தெரியாது’ என்று வைரமுத்து சொன்னார். என்னை பற்றியே எனக்கு தெரியாது. நான் ஒரு சூழ்நிலையின் பொருள். சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அப்படி இருக்கிறேன். நாளைக்கு சூழ்நிலை என்னை எங்கே கொண்டு போய் வைக்கப் போகிறதோ எனக்கே தெரியாது..

அரசியலை பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும். அது எவ்வளவு ஆழமானது ஆபத்தானது என்றும் தெரியும். யார்...யார் தோள் மீதெல்லாம் நடந்து, யாரையெல்லாம்  மிதித்து அங்கே போக வேண்டும் என்று தெரியும். அப்படி மிதித்து போனால் கூட நாம் நினைத்ததை செய்ய முடியுமா? என்ற சந்தேகம் இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு நிலை மாதிரி. ஒரு அலை மாதிரி அது நிகழ வேண்டும்.

இங்கே அரசியல் பற்றி அமீர், விஜயகுமார், வைரமுத்துன்னு பலரும் பேசினாங்க. நான் அரசியலுக்கு வரணும்னு சொன்னாங்க. இதுக்கெல்லாம் நான் பதில் சொல்லாமல் போனால் திமிர் பிடித்தவன். தலைக்கனம் என்றெல்லாம் என்னைப் பற்றி நினைத்து விடுவார்கள். அரசியல் பற்றி இந்த மேடையில நான் பேசாம, மேல கையைக் காட்டி ஆண்டவன் மேல பழியைப் போட்டா, ‘அடப் போய்யா, உனக்கு வேற வேலை இல்ல, எப்ப பார்த்தாலும் ஆண்டவன் மேல பழியைப் போடுற’ன்னு சொல்வாங்க…

இப்பவும் சொல்றேன்… எனக்கு எது தர வேண்டும் என்று கடவுள் தீர்மானிப்பார். அப்போது கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்வேன். அது என்ன என்று எனக்குத் தெரியாது. அதற்காகத்தான் என் மனதில் இருப்பதை சொன்னேன். இருந்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது. அதை நிச்சயம் செய்வேன்…” என்று எப்போதும்போல இப்போதும் குழப்பத்துடனேயே தன் பேச்சை முடித்தார் ரஜினி.

எல்லாஞ்சரி.. கட்சி ஆரம்பிச்சா ரஜினிகிட்ட எதிர்க்கேள்வி கேக்காம இவங்க கட்சில தொண்டர்களாகி கட்சியை வளர்க்கப் பாடுபடுவாங்களாக்கும்..?

இதே அமீர் சில ஆண்டுகளுக்கு முன்பாக காவிரி பிரச்சினையில் ரஜினி கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவாக நீக்குப் போக்குடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி குமுதம் ரிப்போர்ட்டரில் பேட்டி கொடுத்ததெல்லாம் மறந்து போச்சு போலிருக்கு..

சென்ற வருடம் அதே சத்யம் தியேட்டர் மேடையில் நடந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் டிஜிட்டல் பிரதி வெளியீட்டு விழாவில் பேசிய அமீர், “என் இள வயதில் கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தையே நடத்தியவன் நான். ‘காக்கிச்சட்டை’ படம் வந்தபோது பெட்டி வந்த ரயில் மீதேறி வரவேற்றவன் நான். சினிமா துறைக்குள்ள வந்து இத்தனை வருஷமாகியும் இப்போவரைக்கும் கமல்கூட ஒரு போட்டோ எடுத்ததில்லை..” என்று மைக்கில் சொல்லி பின்பு சீட்டுக்குத் திரும்பும்போது கமல்ஹாசனே அழைத்து தன்னுடன் புகைப்படம் எடுத்ததை புல்லரிப்போடு அனுபவித்து சிரித்ததும் இதே அமீர்தான்..!

என்னமோ, ஏதோவொரு ஐடியாவோட அமீரண்ணன் பேசியிருக்காப்புல போலிருக்கு. அடுத்த வாரம் சீமான் அண்ணாச்சி, எங்கிட்டாச்சும் பேட்டி கொடுக்கும்போது முழுசும் தெரிஞ்சிரப் போவுது..!

எப்படியும் தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி பிரபலங்கள் பேசிய இந்தப் பேச்சுக்கள் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகாது என்பதை நினைத்து, இப்போதைக்கு ரஜினி பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்..!