“தமிழர்களை மலையாளிகள் கேவலப்படுத்துவது மன்னர் காலத்தில் இருந்து தொடர்கிறது..” – ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன் வருத்தம்..!

“தமிழர்களை மலையாளிகள் கேவலப்படுத்துவது மன்னர் காலத்தில் இருந்து தொடர்கிறது..” – ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன் வருத்தம்..!

‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்பட விழாவில் பேசிய தமிழக வேளாண்மைத் துறை செயலாளர் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்., தமிழர்களை மலையாளிகள் கேவலப்படுத்துகிறார்கள் என்று பெரிதும் வருத்தப்பட்டார்.

IMG_4391

அவர் படக் குழுவினரை வாழ்த்திப் பேசும்போது, “பொன்னியின் செல்வன்’ கதை முதல் அத்தியாயம் ஆடி மாதத்தில்தான் ஆடி.18-ல்தான்  தொடங்கும். பின்னர்தான் ஆடி மாதம் பீடை மாதம் என்றானது. ஜேஸ்டா மாதம் என்றானது. 8-ஆம் நூற்றாண்டு வரை ஆடி மாதம்  மங்கள மாதமாகவே கருதப்பட்டது. 9-ம் , 10-ம் நூற்றாண்டில் பீடை மாதம் என்று மாற்றப்பட்து. ஜேஸ்டா தேவி என்று வணங்கப்பட்ட வழிபாட்டுத் தெய்வம் வெளியேற்றப்பட்டு. இளையவளான லட்சுமி வழிபடப்பட்டாள்.

இந்த ‘பொன்னியின் செல்வன்’ கதையில் வரும் ஆழ்வார்க்கடியான் இட்டுள்ள நாமம் வடகலையா? தென்கலையா என மதன் கேள்வி எழுப்பினார். என்னைக் கேட்டால் தென்கலையே போடலாம் என்பேன். எவ்வாறு என்றால் ஆழ்வார்க்கடியனின் குருவான அனிருத்த பிரம்மராயர் அன்பிலைச் சேர்ந்தவர். அவரது தாயார் தங்கத் தட்டில் வைக்கும் உணவைத்தான் பெருமாள் சாப்பிடுவாராம். அனிருத்த பிரம்மராயர் தென்கலை. எனவே அவரது சீடன் ஆழ்வார்க்கடியானும் தென்கலையாகவே இருக்க முடியும் என்று கூறலாம்.

இங்கே இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் வந்துள்ளார் இதுவும் பொருத்தமே. ஏனென்றால் ராஜராஜனின் 15 பெயர்களில் ஜனநாதனும் ஒன்று. மதுரை சோழவந்தான் அருகே ஜனகை மாரியம்மன் கோவில் உள்ளது.  ஜனகை என்பது என்னவென்றால் ஜனநாதமங்கலம்தானாம்.

சோழர் சாம்ராஜ்யம் பிரமாண்டமானது. 846 முதல் 1279 வரை 433 ஆண்டுகள்  ஆண்ட வம்சம் உலகத்திலேயே சோழ வம்சம் மட்டும்தான். உலகில் தமிழ்நாட்டை காட்சிப்படுத்த சோழர் கால பெருமையை காட்டலாம். பழமை, நிர்வாகம், கலை, வீரம் ஆட்சி, கட்டடக் கலை, இலக்கியம் எல்லாமும் நிறைந்தது.

ராஜராஜன் சிறந்த நிர்வாகி. ராஜராஜன் வரலாற்று அறிவு நிறைந்தவன். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியபோது ‘இது நான் எழுப்பிய கோவில்’ என்றான் ராஜராஜன். ராஜராஜனால் கட்டப்பட்டது என்று  பல இடங்களில் எழுதப்பட்டு இருக்கிறது.  எல்லாவற்றையும் சரியாகப் பதிவு செய்து இருக்கிறான் ராஜராஜன்.

இது தொடர்பாக ஏராளமான செப்பேடுகள் உள்ளன. ஆனைமங்கலம் செப்பேடுகள், ராஜேந்திர சோழன் காலத்து கரந்தை செப்பேடுகள் 56, ,திருவாலங்காடு செப்பேடுகள், திருச்செங்கோடு செப்பேடுகள் 8 என பலவும் உள்ளன. அவற்றை வைத்து அமரர் கல்கி இந்தக் கதையை அழகாக வர்ணித்திருக்கிறார்.

குமுளி எல்லையில் உள்ள கண்ணகி கோயிலும் ராஜராஜன் கட்டியதுதான். கேரள எல்லை என்பதால் ஏதோ பாகிஸ்தான் எல்லைபோல தமிழர்கள் பதற்றத்துடன் போய் வழிபட வேண்டியிருக்கிறது. தண்ணீர் பாட்டில்களைக்கூட கொண்டு போக முடியாதபடி கெடுபிடி செய்கிறார்கள் மலையாளிகள்.

நம் தமிழ்நாட்டிலிருந்து அவர்களுக்காக கேரளா போகிற 300 லோடு காய்கறிகளையும் வழி மறித்து தடுத்து பூச்சி மருந்து சோதனை செய்கிறார்கள்.

தோற்றவர்களைக் கேவலப்படுத்துவது அன்றைய கேரள மன்னன் பரசுராமனின்  பழக்கம். அன்றைய பரசுராமன் முதல் இன்றைய மலையாளிகள்வரை நம்மை கேவலப்படுத்துவது  தொடர்கிறது...” என்றார். 




error: Content is protected !!