தயாரிப்பாளரான ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா

தயாரிப்பாளரான ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா

"தட்டான் தட்டான் தண்ணிக்குள்ள, தவள ரெண்டும் பொந்துக்குள்ள, சூ சூ மாரி!" என்ற 'பூ' திரைப்பட பாடலை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது.  பாடல் மட்டுமின்றி அந்த திரைப்படத்தின் அழகிய  காட்சிகளுக்கும்  சொந்தக்காரரான ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா தற்போது ‘ராஜா மந்திரி’ திரைப்படம் மூலம் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

p.g.muthiah

தனது தயாரிப்பாளர் என்கிற வளர்ச்சியைப் பற்றி பேசிய பி.ஜி.முத்தையா, "எனது வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் எனது பெற்றோரும், என் மனைவியும் எனக்குப் பக்க பலமாக உள்ளனர். என் அப்பா ஒரு சாதாரண பள்ளிக்கூட வாத்தியார்;  நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும், எனது விருப்பத்திற்கு குறுக்கே எனது பெற்றோர் ஒருபோதும் நின்றதில்லை.  அவர்களின் துணையில்லையென்றால் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்கிற என் கனவு வெறும் பகல்  கனவாகவே மறைந்திருக்கும்!" என்று நெஞ்சம் நெகிழ்கிறார் ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா.

எஸ்.ஆர்.எம்,   பல்கலைக் கழகத்தில் தனது விஸ்காம் படிப்பை முடித்த இவர், ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளர் ராஜரத்தினம், ரவிவர்மன், மற்றும் SR கதிர் ஆகியோரிடம் உதவியாளராக பணி புரிந்தது குறிப்பிடத்தக்கது.

தன் ஐந்து வருட  கடின உழைப்பின் பலனாய் கிடைத்த ஒரு நற்கனிதான் 'பூ' திரைப்படம். தன்னுடைய தனித்துவமான  ஒளிப்பதிவால் அந்தப் படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்ற முத்தையா, அதனை தொடர்ந்து ‘கண்டேன் காதலை’,  ‘அவள் பெயர் தமிழரசி’, ‘சகுனி’, ‘சேட்டை’ மற்றும் ‘சண்டி வீரன்’  போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது பெண் இயக்குநரான உஷா கிருஷ்ணன் இயக்கும்  ‘ராஜா மந்திரி’   திரைப்படம்  மூலம் தயாரிப்பாளராக  உருவெடுத்துள்ளார்.

PMV_0279

"எனது கல்லூரி நாட்களில் இருந்தே எனக்கும், எனது நண்பர்களுக்கும் ஒரு படம் தயாரிக்கும் கனவு இருந்தது. அதற்காக அப்போது நாங்கள் எடுத்த முயற்சி தோல்வியை தழுவியது. அதன் பிறகு நான் முழுக்க முழுக்க  ஒளிப்பதிவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். இப்போது மீண்டும் ஓர் புதிய முத்தையாவாக தயாரிப்பில் அடியெடுத்து வைத்ததற்கு மிக முக்கியக் காரணம் இயக்குனர் உஷா கிருஷ்ணன் எனக்கு அளித்த   நம்பிக்கைதான்.

இந்த ‘ராஜா மந்திரி’ கண்டிப்பாக அனைவரையும் கவரக் கூடிய ஓர் திரைப்படமாக அமையும். ஏனென்றால் மற்ற கிராமத்து கதைகளில் இருந்து 'ராஜா மந்திரி' முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தை   கொண்டது.  திரைப்படத்தை காண வரும் ஒவ்வொருவரும் தங்களின் கதாப்பாதிரங்களை திரையில் உணர்வார்கள்.." என்றார் P.G.முத்தையா.