ராதிகா சரத்குமார் தயாரிப்பில் நடிக்கும் நடிகர் விஜய் ஆண்டனி

ராதிகா சரத்குமார் தயாரிப்பில் நடிக்கும் நடிகர் விஜய் ஆண்டனி

வர்த்தக ரீதியாக மட்டுமின்றி விமர்சகர்கள்கூட  பாராட்டும்படி தொடர்ந்து வெற்றி படங்கள் வழங்கும் விஜய் ஆண்டனி, தற்போது தயாரிப்பில்  உள்ள ‘எமன்’ படத்தை தொடர்ந்து தந்து அடுத்த படமாக ‘I Pictures’  என்னும் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் ஒரு பிரம்மாண்டமான படத்தில் நடிக்க உள்ளார்.

புதிய இயக்குநரான  சீனுவாசன் இயக்கத்தில் உருவாக உள்ள பெயரிடப்படாத இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு  ஆகிய இரண்டு  மொழிகளில் தயாராவது குறிப்பிடத்தக்கது.

‘பிச்சைக்காரன்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து  சமீபத்தில் வெளியான ‘சைத்தான்’ திரைப்படமும் பெரிய வெற்றியை அடைந்திருப்பதால், பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களும்  விஜய்  ஆண்டனியுடன்  இணைந்து பணியாற்ற முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால் விஜய் ஆண்டனியோ யாரும் எதிர்பாராதவண்ணம் ராதிகா சரத்குமார் தம்பதியினருக்கு படம் செய்ய சம்மதித்திருப்பது  பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு வர்த்தக ரீதியான காரணங்களை தாண்டி உணர்வுப்பூர்வமான காரணம் இருப்பதே உச்சக் கட்டம்.

இது பற்றிப் பேசிய நடிகர் விஜய் ஆண்ட்டனி, “நான் இப்போது என் தாய் வீட்டுக்கு வந்துள்ள மன நிலையில் உள்ளேன். என் திரைப் பயணத்தை நான் ஒரு இசையமைப்பாளனாக துவங்கிய ஆரம்ப கால கட்டத்தில் எனக்கு வாய்ப்பளித்தவர் ராதிகா மேடம். விடா முயற்சியும், ஆசிகளும், ஆதரவும் என்னை இன்று ஒரு ஸ்தானத்தில் அமர்த்தியிருக்கிறது.

தொழில் முறை நடிகனாக எனக்கு  இன்றைய தலையாய தேவை திரைத் தொழிலை நேசிக்கும் தயாரிப்பாளர்களே. அந்த முறையில் உயிர் மூச்சாக சினிமாவை நேசிக்கும் சரத் சாரும், ராதிகா மேடமும்  மிக சிறந்த தயாரிப்பாளர்களாக இருப்பார்கள் என நம்புகிறேன்.

ஒரு படம் முடிந்தவுடன் அடுத்தப் படத்துக்கு ஒப்பந்தம் போடுவதில் நான் என்றுமே அவசரப்பட்டதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. வர்த்தகத்தை தாண்டி மனித உணர்வுகளும் நான் செய்யும் தொழிலில்  இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதன் அடிப்படையில்தான் எனக்கு இசை அமைப்பாளர் வாய்ப்பளித்த இந்த நட்சத்திர தம்பதியினருக்கு படம் செய்து கொடுக்க ஒப்புக் கொண்டேன்.

அறிமுக இயக்குநரான சீனுவாசன் கதையை  சொன்ன மாத்திரத்திலே  இவர்கள்தான் தயாரிப்பாளர்கள் என நான் முடிவு செய்து விட்டேன்.

ஒரே நேரத்தில் திட்டமிட்டபடி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் படத்தை தயாரித்து வெளியிடுவதற்கு அசாத்திய திறமை வேண்டும். மேலாண்மையும் வேண்டும். இரண்டு மொழி ரசிகர்களையும் ஏமாற்றாமல் அவர்கள்  கேட்டதை  வழங்கும் மாபெரும் பொறுப்பு என்னிடம் இருப்பதால், நான் அதில் எந்த விதமான சமரசமும் செய்து  கொள்ளாமல் இருக்க இப்படி எனக்கு ஒரு தயாரிப்பு நிறுவனம் தேவை.

பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது, ஆயினும் வழக்கம் போலவே  இந்தப் படத்தின் தலைப்பும் வித்தியாசமாகவே இருக்கும். என்ன என்பதை இப்போதைக்கு சொல்வதாக இல்லை.. அது தற்போதைக்கு  சஸ்பென்ஸ்…” என்றார்.
error: Content is protected !!