‘ராவண கோட்டம்’ படத்தில் சாந்தனுவுடன் ஜோடி சேரும் நடிகை ஆனந்தி..!

‘ராவண கோட்டம்’ படத்தில் சாந்தனுவுடன் ஜோடி சேரும் நடிகை ஆனந்தி..!

கதிர், ஓவியா நடிப்பில் இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தயாரித்த அந்தப் படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 15 கோடி ரூபாயை வசூல் செய்து வெற்றிப்பட பட்டியலில் இணைந்தது.

இந்தப் படத்தின் இயக்குநரான விக்ரம் சுகுமாறன் ஆறு ஆண்டுகள் கழித்து தனது அடுத்தப் படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு ‘ராவண கோட்டம்’ என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை கண்ணன் ரவி குரூப் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் நாயகனாக இயக்குநர் கே.பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு நடிக்கவுள்ளார். நாயகியாக ஆனந்தி நடிக்கவுள்ளார்.

மேலும் படத்தில் பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், அருள்தாஸ், பி.எல்.தேனப்பன், முருகன் (லூசிபர் புகழ்) மற்றும் தீபா ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

actress anandhi

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை ஆனந்தி பேசுகையில், “நான் தமிழ்த் திரையுலகத்தில் நுழைந்தது முதலே எனக்குப் பொருத்தமான, பெருமையளிக்கும் வேடங்கள் கொண்ட ஸ்கிரிப்ட்டைத்தான் தேர்வு செய்து நடித்து வருகிறேன். என்னை போன்றவர்கள் இந்தத் திரையுலகத்தில் நீடித்து நிலைத்து நிற்க இது மட்டும்தான் உதவும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த  சிறப்பான படங்கள் எனது திரையுலக வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே கிடைத்தது என் அதிர்ஷ்டம்தான். குறிப்பாக, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்களில் நடித்த பிறகு, நல்ல கதைகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு உருவாகியிருக்கிறது.

actress anandhi

‘ராவண கோட்டம்’ அந்த மாதிரியான ஒரு திரைப்படம்தான். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் ரசிகர்களை கவரும் மிகச் சிறப்பான ஒரு கதையுடன் வந்துள்ளார். ‘மதயானை கூட்டம்’ படத்துக்கு பிறகு மிகவும் பொறுமையுடன் இந்த ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளார்.

எந்தவொரு இயக்குனரும் புகழ் வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு படம் முடிந்த உடனே அடுத்த படத்தை துவங்க நினைப்பார்கள். ஆனால் இயக்குநர் விக்ரம் சுகுமாறன், அதிலிருந்து விலகி நிற்பவர். அவரது கடின உழைப்புக்கு இந்த ‘ராவண கோட்டம்’ பரிசாக இருக்கும் என நம்புகிறேன்.

சாந்தனு பாக்யராஜின் தோற்றம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கும். படப்பிடிப்பு தளத்தில் நான் அவரை முதன்முறையாக பார்த்தபோது என்ன உணர்ந்தேனோ, அதை திரையில் பார்க்கும்போது நீங்களும் உணர்வீர்கள்.

அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் நடன கலைஞராகவும் இருக்கிறார்.  ‘ஃபைட் சாங்’ என்ற கான்செப்டை அடிப்படையாக கொண்ட, ஒரு பொழுதுபோக்கு பாடலில்தான் முதலில் நடித்தேன். சாந்தனு ஒரு திறமையான நடனக் கலைஞராக இருந்தாலும்கூட, அவருடன் நடனம் ஆடியது ஒரு சிறந்த அனுபவம்..” என்றார் நடிகை ஆனந்தி.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது, ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

 




error: Content is protected !!