full screen background image

ராட்சசி – சினிமா விமர்சனம்

ராட்சசி – சினிமா விமர்சனம்

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தில் ஜோதிகா நாயகியாக நடித்துள்ளனர். மேலும் பூர்ணிமா பாக்யராஜ், ஹரீஷ் பெரடி, சத்யன், நாகி நீடு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கோகுல் பெனாய், இசை – சீன் ரோல்டன், பாடல்கள் – யுகபாரதி, தனிக்கொடி, முத்தமிழ், சீன் ரோல்டன், கெளதம்ராஜ், வசனம் – கெளதம்ராஜ், பாரதி தம்பி, படத் தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்கம் – குமார் கெங்கப்பன், சண்டை பயிற்சி – சுதீஷ், பாண்டியன், நடன இயக்கம் – சாண்டி, புகைப்படங்கள் – லட்சுமண், கிராபிக்ஸ் – கினாக் ஸ்டூடியோஸ், உடை வடிவமைப்பு – செல்வம், பூர்ணிமா ராமசாமி, ஒப்பனை – முருகன், ஒலி கலப்பு – உதயகுமார், தயாரிப்பு நிர்வாகம் – சிராஜூதின், ராஜாராம், இணை தயாரிப்பு – அரவிந்த்ராஜ் பாஸ்கரன், எழுத்து, இயக்கம் – சை.கெளதம்ராஜ்.

“அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். தனியார் பள்ளிக்கு சமமாக தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கத்தையும், நன்னடத்தையையும் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது கடமையை வெறும் கடமையாக நினைத்து செய்யாமல் கல்வி சேவையாக நினைத்து செயலாற்ற வேண்டும்..”

இதெல்லாம் சமீபகாலமாக தமிழகத்தின் மூலை, முடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் முழுக்கங்கள். இதனை திரையில் சொல்ல வந்திருக்கும் படம்தான் இந்த ‘ராட்சசி’ திரைப்படம்.

‘கீதாராணி’ என்ற எம்.எஸ்ஸி., எம்.எட். முடித்திருக்கும் ஜோதிகா ஆர்.புதூர் என்னும் தமிழகத்தில் உள் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்க வருகிறார்.

அந்தப் பள்ளிக்கூடம் சீரழிந்து கிடக்கிறது. சுற்றுச் சுவர்கள் உடைந்து கிடக்கின்றன. வாசலில் இருக்கும் பெட்டிக் கடையில் பள்ளி மாணவர்களுக்கு சிகரெட்டுகளும், பாக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன. பள்ளி முழுவதும் குப்பையும், கூளமுமாக இருக்கிறது.

பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்கு என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் பள்ளிக்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு தான் நடத்தும் கடையைப் பார்க்கப் போய் விடுகிறார்.  துணை தலைமை ஆசிரியர் எந்த வேலையும் செய்யாமல் ஆசிரியையைகளையே சைட் அடிக்கும் வேலையை மட்டும் செய்து வருகிறார். மாணவர்களை சேர்ப்பதற்குக்கூட லஞ்சம் வாங்குகிறார்.

இப்படிப்பட்ட பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்கும் ஜோதிகா மாணவர்களை ஒழுங்குபடுத்தி.. ஆசிரியர்களை சீராக்கி.. பள்ளியையும் மாற்றியமைத்து, புதிய பில்டிங்குகள் கட்டி.. ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைக்க நினைக்கிறார். இதையெல்லாம் அவரால் செய்ய முடிந்ததா..? இல்லையா..? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை.

சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்ட ‘சாட்டை’ படத்தின் நாயகி வெர்ஷன் படமாகத்தான் இது இருக்கிறது. அதில் தம்பி ராமையா வில்லன் என்றால் இதில் கவிதா பாரதி. அதிலும் மாணவர்களின் படிப்புத் திறனை மேம்படுத்த அல்லல்படும் ஆசிரியராக சமுத்திரக்கனி உயிரைக் கொடுத்து போராடுவார். இதில் அதையே ஜோதிகா செய்கிறார். அவ்வளவுதான் வித்தியாசம்.

தனக்கு முக்கியத்துவம் கொடுப்பது மாதிரியான கதைகளிலேயே தொடர்ந்து நடித்து வரும் ஜோதிகாவுக்கு அவரது குடும்ப உறவுகளே தயாரிப்பாளர்களாக அமைந்திருப்பதால் இது மாதிரியான படங்களில் நடிப்பது சுலபமாகிவிட்டது. அந்த வரிசையில் இந்தப் படமும் அக்மார்க் ஜோதிகா மயம்தான்..!

காட்சிக்குக் காட்சி ஜோதிகாவே காட்சியளிக்கிறார். அவர்தான் அதிகமான வசனங்களையும் பேசியிருக்கிறார். கேமிராவிலும் தென்பட்டிருக்கிறார். காலர் வைத்த ஜாக்கெட், இடுப்புகூட தெரியாத அளவுக்கு டீசண்ட்டான சேலை அணிவிப்பு.. பருத்தி சேலை என்று அவருடைய மிடுக்கைக் காட்டும்விதமாகத்தான் கடைசிவரையிலும் அவருக்கு உடையலங்காரத்தைச் செய்திருக்கிறார்கள். நன்று.

ஆசிரியர்களை அடக்கி, ஒடுக்கி, மாணவர்களிடத்தில் பணிவாகப் பேசி அவர்களை நல்வழிக்குக் கொண்டு வந்து திருத்தி.. உள்ளூர் கட்சிப் பிரமுகரை தெனாவெட்டாய் பேசி அனுப்பி.. அவருடைய மகனை நைச்சியமாய் திசை திருப்பி தன் பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க வைத்து.. 9-ம் வகுப்பில் பெயிலான 82 மாணவர்களை திரும்பவும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து அவர்களை 10-ம் வகுப்பில் பாஸாகவும் வைத்து.. இப்படி ஜோதிகாவும் நற்செயல்களை சொல்லிக் கொண்டே போகலாம். இத்தனையிலும் அவருடைய நடிப்பு கொஞ்சம், கொஞ்சம் செயற்கைத்தனம் இருந்தாலும் ரசிக்க முடிகிறது.

ஆனால் படம் நெடுகிலும் முறைத்துக் கொண்டேயும், ஏதோ விறைப்பாக இருந்து கொண்டும், மிரட்டிய பார்வையோடு பேசிக் கொண்டிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. சிற்சில இடங்களில் இது ஓவர் ஆக்ட்டிங்காகவும் போய்விட்டதென்னவோ உண்மைதான்.

துணை தலைமை ஆசிரியராக கவிதா பாரதி… சைட் அடிப்பதிலும், லுக்கு விடுவதிலும் தேர்ந்தவராக இருக்கிறார். அந்த நடிப்பு ஓகே என்றாலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்பு அதற்கு மேல் எப்படி தப்பிப்பது என்பது தெரியாதவராக காட்டியது நன்றாக இல்லை. உண்மையில் மெயின் வில்லனாக இவரையே காட்டியிருக்கலாம்.

தனியார் பள்ளி நிர்வாகியான ஹரீஸ் பெரடி எதையும் கழட்டவில்லை. அவ்வப்போது சீன் போட்டு்க் கொண்டே இருக்கிறார். ஆனால் அனைத்தம் சொதப்பலாகிறது. வெடிகுண்டு வைத்திருப்பாரோ என்ற சந்தேகத்திற்கு தான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று சொல்லி தனியார் பள்ளி நிர்வாகிகளையும் கொஞ்சம் சமன் செய்திருக்கிறார் இயக்குநர்.

பூர்ணிமா பாக்யராஜ் விரல் விட்டு எண்ணக்கூடிய காட்சிகளில் மட்டுமே இருக்கிறார். அவருடைய இருப்பு எதற்கு என்பதை இடைவேளைக்குப் பின்னால் வரும் ஒரு சஸ்பென்ஸ் காட்சியில் உடையும்போது சுவாரஸ்யமாக இருக்கிறது. அவருடைய கண்ணீர்க் கதை உருக்கத்தைக் கொடுக்கிறது.

உள்ளூர் எதிர்க்கட்சி பிரமுகர், ஆளும் கட்சிப் பிரமுகர், மாவட்ட கலெக்டர் என்று அனைவரையுமே தெறிக்கவிட்டிருக்கிறார் ஜோதிகா. இதில் கலெக்டர் மட்டும் நடந்ததை புரிந்து கொள்ளும் நல்ல மனிதராக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி. ஆட்டோ ஓட்டுநரான மூர்த்தி அரசுப் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிப் பேசும் பேச்செல்லாம் சரவெடிதான்..!

கோகுல் பெனாயின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஒரு பலமாக அமைந்திருக்கிறது. பள்ளி, வகுப்பறைகள், கிராமம் என்று இயற்கை அழகைக் காட்டும் இடங்களிலேயே கேமிரா பயணித்திருப்பதால் குறையொன்றுமில்லை.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமென்றாலும் பாடல் வரிகளை இன்னும் எளிமையாக கொடுத்திருக்கலாம். பின்னணி இசையில் அதிகம் அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டமைக்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

ஜோதிகா சண்டையிடும் காட்சியில் மட்டும் படத் தொகுப்பாளர் மிகப் பிரயத்தனப்பட்டு கத்திரிக்கோல் வேலையைச் செய்திருக்கிறார் போலத் தெரிகிறது. இதேபோல விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டி இரண்டின் முடிவுகளையும் சரியான விகிதத்தில் கத்தரித்துக் காட்டி அந்த டென்ஷனையும், சந்தோஷத்தையும் ஒரு சேர அனுபவிக்க வைத்திருக்கிறார் படத் தொகுப்பாளர்.

கதையும், திரைக்கதையும் நல்லதை மட்டுமே சொல்ல வருகிறது என்றாலும் படத்தில் அநியாயத்திற்கு லாஜிக் மிஸ்டேக்குகளை அள்ளி வீசியிருக்கிறார்கள்.

ஒரு பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் ஒத்துக் கொள்ளலாம். ஆனால், அனைவருமே அப்படித்தான் என்பதாக இந்தப் படத்தின் கதை திரிக்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

ஜோதிகா ஒருவரைத் தவிர மற்றவர்களெல்லாம் பள்ளியின் மீதும், மாணவர்கள் மீதும் அக்கறையில்லாதவர்களைப் போல காட்சியமைத்திருப்பது சற்று ஓவர்தான்.

ஜோதிகாவின் உருட்டல், புரட்டலெல்லாம் கிராமத்துப் பள்ளிகளில் நடக்கவே முடியாத விஷயம். அதுவும் இப்போதைய மீடியாக்களின் அசுர வளர்ச்சிக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில்  98 சதவிகிதம் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறன்றன. ஆனால் அவைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை போதிய அளவுக்கு இல்லாமை.. இவைகள்தான் ஒரே குறைகளாகச் சொல்லப்படுகின்றன.

ஜோதிகா செய்வதைப் போல ஆசிரியர்களுக்கு மெமோ கொடுத்து மிரட்டுவதெல்லாம் தட்டிக் கொடுத்து வேலை வாங்கத் தெரியாத தலைமை ஆசிரியரால் மட்டுமே செய்ய முடியும்.

இதேபோல் ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொதுப்பணித்துறையின் பொறியாளரை மிரட்டியெல்லாம் பள்ளிக்கு பில்டிங் கட்டிவிட முடியாது. லாஜிக் ரொம்பவே இடிக்குது இயக்குநரே..!

என்னதான் ராணுவத்தில் மேஜர் என்றாலும் தன்னைக் கொலை செய்ய வருபவர்களை ஒத்த பொம்பளையாக அடித்து வீழ்த்தி விரட்டுவதெல்லாம் ரொம்பவே டூ மச்சான திரைக்கதை. இது அவர் மீதான கேலிக்கு வழி வகுத்துவிட்டது. இதை அவர் மிரட்டியே அனுப்பி வைப்பது போல மாற்றியமைத்திருக்கலாம்.

மாவட்ட கலெக்டரை அவமரியாதை செய்வது போல் நடந்து கொள்வதும், “நீங்க போய் சுத்திப் பாருங்க.. எனக்கு வேலையிருக்கு..” என்று ஜோதிகா சொல்வதெல்லாம் சுத்தமான ஹம்பக். எந்தப் பள்ளியிலும் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பள்ளி துவங்கி 2 மாதங்கள் கழித்து 82 மாணவிகளை பள்ளியில் சேர்த்துவிட்டு அது பற்றி யாருக்கும் தெரியாமலேயே வைத்திருப்பதெல்லாம் மாயாஜால கதைகளில் மட்டுமே உண்டு. தேர்வில் வெற்றி, தோல்வி கணக்கையெல்லாம் மாவட்ட கல்வி அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கவே முடியாது.

அதேபோல் அந்த தேர்ச்சி அறிக்கையில் திருத்தம் இருந்தாலும் அதையும் கல்வி அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் தலைமை ஆசிரியர் ஒருவரே அதில் கை வைக்க முடியாது. இதையெல்லாம் தெரிந்து கொண்டு திரைக்கதை எழுதியிருக்கலாமே இயக்குநரே..!

கிளைமாக்ஸில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஜோதிகாவை கோர்ட்டுக்கு கொண்டு போக முடியாமல் தவிப்பதைப் போல காட்சிப்படுத்தியிருப்பது காமெடியாக இருக்கிறது.

இதிலும் ஒரு காமெடியாக பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதில் அந்த 82 மாணவர்களில் 76 பேர் தேர்ச்சி பெற்றதை அறிந்தவுடன் நீதிபதியே ஜோதிகா மீதான வழக்கை ரத்து செய்வதாக வரும் அறிவிப்பெல்லாம் ஏதோ கமர்ஷியல் கம்மர்கட் படத்தில் வருவதுபோல இருக்கிறது.

இதையாவது முறைப்படி செய்திருக்கலாமே..? நீதிமன்றத்தில் ஜோதிகாவை ஆஜர்படுத்தியவுடன், இதையெல்லாம் ஜோதிகா நீதிமன்றத்தில் எடுத்து வைத்து அங்கேயே அந்த ரிசல்ட்டை காண்பித்து தான் செய்தது தவறில்லை என்று நீதிபதியிடம் எடுத்துச் சொல்லி விடுதலையாகியிருக்கலாம். இதுதான் சிறந்த கிளைமாக்ஸாக இருந்திருக்கும். இப்படி அவசரத்தனமாக ‘டகால்டி’ வேலையைக் காட்டியிருக்க வேண்டாம்.

கடைசியாக ஒரு குறையைச் சுட்டிக் காட்டியே ஆக வேண்டும். சின்னக் குழந்தைகள் அப்பாவியாக கேட்கும் சில விஷயங்களை அந்த அப்பாவித்தனத்தோடு அப்படியே விட்டுவிடுவதுதான் அவர்களுக்கும் நல்லது. நமக்கும் நல்லது. “எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு டீச்சர். நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா..?” என்று ஒன்றாம் வகுப்புப் பையன் வந்து டீச்சரிடம் கேட்பதையெல்லாம் காட்சியாகப் பதிவு செய்வது தேவையில்லாத ஒன்று. 

ஏற்கெனவே ஒரு திரைப்படத்தில் இந்தக் காட்சியை முன் வைத்து ஒரு கதையை எழுதியிருந்தார்கள். இந்தப் படத்தில் இன்னும் ஒரு படி மேலாகப் போய் பொண்ணு பார்க்க வரட்டுமா என்றெல்லாம் அந்தப் பையன் கேட்பதைப் போல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இது இந்தச் சமூகத்துக்கு நல்லதல்ல என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம். 

வீட்டுக்குள் நகைச்சுவையாக நாம் பேசுவதையெல்லாம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் அதே நகைச்சுவையோடு எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. இது, வளர்ந்து கொண்டிருக்கும் பிஞ்சுகளுக்கு ஆபத்தான ஒரு பொறியாக அவர்களது மனதில் பதியும். 

இருந்தாலும் சில நல்ல விஷயங்களாக.. பள்ளிக்கு அருகில் இருக்கும் பெட்டிக் கடையை அகற்றும் காட்சி.. மாணவர்களிடையே இருக்கும் ஜாதிப் பிரிவினையைச் சமாளிக்கும் காட்சி.. கவிதாபாரதி மீதான புகாரில் பள்ளிக்குக் கெட்ட பெயர் வராமல் தடுக்கும் வண்ணம் சஸ்பெண்ட் செய்வது.. தன் மீது சதி வேலை செய்த ஆசிரியரையே போட்டிகளுக்காக மாணவர்களை அழைத்துப் போக வைத்து, ஆசிரியர்களின் பெருமையை உணர வைப்பது.. அநியாயத்தைக் கண்டு அந்த மாணவர்களையே குரல் எழுப்ப வைப்பது.. சென்சிட்டிவ்வான ஜாதி பிரச்சினையை எழுப்பும் ஜாதி வெறியர்களிடத்தில் மூன்று கேள்விகள் என்று கேட்டு பிரச்சினையை டைவர்ட் செய்து புத்திசாலித்தனமாக தப்பிப்பது.. தனியார் பள்ளி ஆசிரியர்களின் எடுபடி, அடிமைத்தனமான வேலையை அவர்களுக்கே உணர்த்துவது.. என்று சின்ன சின்ன விஷயங்களில் திரைக்கதை ரசிக்க வைத்திருக்கிறது.

இதேபோல் ஜோதிகா எதற்காக இந்த ஊருக்கு வந்து அரசுப் பள்ளியில் சேர வேண்டும் என்பதற்கான பிளாஷ்பேக் கதையில் இருக்கும் உண்மைத்தனமும் அந்த இடத்தில் உருக்கமாக இருக்கிறது.

படத்தில் நடிப்புக்கு பிறகு பிரதானமான இடத்தைப் பிடித்திருப்பது வசனங்கள்தான். தீயான வசனங்களை எளிதில் புரிந்து கொள்ளும்வகையில் நக்கலாகவும், தெளிவாகவும் எடுத்து வைத்திருக்கிறார்கள் வசனகர்த்தாக்களான இயக்குநர் கெளதம்ராஜூம், பாரதி தம்பியும்..!

‘மூணு கேள்வி கேட்கலாமா?!’.
“பிள்ளைகளை படிக்கறதுக்காக பெற்றோர்கள் ஸ்கூலுக்கு அனுப்பறதில்ல. ச்சும்மா  கௌரவத்துக்கு அனுப்பறதுனாலதான் இந்த நிலைமை…”

“குருவுக்கு அப்பறம்தான் தெய்வம்… கோவிலைவிட சுத்தமா இருக்க வேண்டியது முதல்ல பள்ளிக்கூடம்தான்..”

“டீச்சர்ஸ் கொஞ்சம் அதிகமா வேலை செஞ்சா போலீசுக்கு வேலை குறைஞ்சிடும்..”

“நீங்க எடுக்குற மார்க்கை வெச்சு இந்த உலகம் உங்களுக்கு மார்க் போட தயாராகியிருச்சு”

“ஸ்டேட் கவர்ன்மெண்ட்டுக்குத் தண்ணி காட்டும்போதே நினைச்சேன் சென்ட்ரலாத்தான் இருக்கும்னு..”

இப்படி பல இடங்களில் வசனங்கள் பட்டாசாக வெடித்து திரைக்கதைக்கு சுவாரஸ்யத்தைக் கொடுத்திருக்கின்றன.

கடந்த பத்து வருடங்களில் உருவான அடுத்த தலைமுறையினரில் இன்றைக்கு பெரும் நிறுவனங்களில் பணியாற்றும் அளவுக்கான திறமைசாலிகள் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களாகவே இருக்கிறார்கள்.

இப்போது நீட் தேர்வு வந்த பின்பு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. அந்த அளவுக்கு மாணவர்களின் கல்வித் தரம் அரசுப் பள்ளிகளில் அரசுகள் எதிர்பார்க்கும் அளவைவிட குறைவாகவே இருக்கிறது.

இந்த வித்தியாசத்தைக் குறைப்பதுதான் அரசுகளின் கடமையாக இருக்க வேண்டும். கல்வியை முதலில் இலவசமாக்க வேண்டும். எதிலும் கட்டணம் இருக்கக் கூடாது என்ற நிலைமையில் தனியார் பள்ளிகள் அளவுக்கு அரசுப் பள்ளிகளின் தரமும் உயர்த்தப்படுதல் வேண்டும்.

“தீமை நடப்பதை வேடிக்கை பார்ப்பவர்களும் அதன் ஒரு பகுதியாகிறார்கள். எதிர்த்து நிற்பவர்களே வரலாறாகிறார்கள்..” என்பதை படத்தின் இறுதியில் ஸ்லைடாக போட்டுக் காண்பிக்கிறார்கள்.

இந்தப் படம் சொல்லும் நோக்கத்துடன் இப்போதும் எத்தனையோ அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நாயகி கீதா ராணியைப் போலவே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெயர் தெரியாத நாயகிகளுக்கும், நாயகர்களுக்கும் நமது சல்யூட்..!

 

Our Score