“இந்தப் படம் தோற்றால் அடுத்தப் படம் நடித்துக் கொடுக்கிறேன்” – நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த வாக்குறுதி..!

“இந்தப் படம் தோற்றால் அடுத்தப் படம் நடித்துக் கொடுக்கிறேன்” – நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த வாக்குறுதி..!

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ராட்சசன்’.

விஷ்ணு விஷால், அமலா பால் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை ‘முண்டாசுப்பட்டி’ வெற்றிப் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார்.

வரும் அக்டோபர் 5-ம் தேதி டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை உலகமெங்கும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியிடவுள்ளது.

இதையொட்டி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வந்திருந்த படக் குழுவினர் அனைவரும் படம் பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

DCIM (54) 

ஸ்கைலார்க் நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்ரீதர் பேசுகையில், “ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்கும் முடிவில்தான் நாங்கள் இருந்தோம். ‘ராட்சசன்’ படத்தின் கதையை கேட்டு,  ‘இந்த படத்தில் நாங்களும் உங்களோடு சேர்ந்து கொள்ளலாமா?’ என்று கேட்டோம். டில்லி பாபு சார் அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார்.

நாங்கள் பண விஷயத்தில் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் அதையும் பொறுத்துக் கொண்டார் டில்லி பாபு சார். நான் படம் பார்த்தேன். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இயக்குநர் ராம்குமார் எங்களிடம் என்ன கதை சொன்னாரோ, அதைவிட மிகச் சிறப்பாக படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார். கதை தெரியாத எனது நண்பர் ஒருவர் படம் பார்த்து விட்டு மிகப் பிரமாதமாக இருப்பதாக சொன்னார், அதுவே படத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன்…” என்றார்.

gibran

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், “பொதுவாக படங்களின் ரிலீஸ் தேதி நெருங்க, நெருங்க எனக்கு பதட்டம் அதிகமாகி கொண்டே இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் மீதான நம்பிக்கையால் பயம் இல்லாமல் இருக்கிறேன். கதையை கேட்டவுடனே எனக்கு ரொம்பவே பிடித்தது. படத்தில் நடிகர்களின் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது, அதுதான் பின்னணி இசையமைப்பில் எனக்கு உதவியாக இருந்தது…” என்றார்.

amala paul

நாயகி அமலா பால் பேசுகையில், “இந்தப் படத்தில் நடிக்கும்பொழுதே, படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்ற ஆர்வம்தான் எனக்கு அதிகமாக இருந்தது. இயக்குநர் ராம்குமார் என்னிடம் கதையைச் சரியாக சொல்லவில்லை. அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர் என்பதால் விஷ்ணுதான் என்னிடம் கதையைச் சொல்லி விளக்கினார். கதை எனக்கு ரொம்பவே பிடித்தது. ராம்குமார் ரொம்பவே கடின உழைப்பாளி, நேரம் எடுத்து மிகவும் விரிவாக, தெளிவாக படத்தை எடுப்பார்.

சினிமாவில் எனக்கு அவ்வளவாக நண்பர்கள் கிடையாது, விஷ்ணு இந்தப் படத்துக்கு பிறகு எனக்கு நல்ல நண்பராகி விட்டார். நடிக்க வருபவர்களுக்கு விஷ்ணு ஒரு இன்ஸ்பிரேஷன். படத்துக்காக அவருடைய உழைப்பு அபரிமிதமானது. ஒட்டு மொத்த படக் குழுவும் படம் சிறப்பாக வருவதற்கு தங்கள் பங்களிப்பை கொடுத்திருக்கிறது.

திரில்லர் படம் என்றாலே ஹாலிவுட்டுடன் ஒப்பிடுவார்கள், ஆனால் இது நம்ம ஊரு திரில்லர் படம் என்று சொல்லும் அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கும். திரில்லர் படங்களில் இது ஒரு பெஞ்ச் மார்க்காக இருக்கும்…” என்றார்.

dilli babu

தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு பேசுகையில், “நல்ல கதையுள்ள படங்களை எடுக்கும் நோக்கத்தில்தான் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி இயங்கி வருகிறது. பொதுவாகவே திரில்லர், ஹாரர் படங்களின் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.

‘மரகத நாணயம்’ படத்தின் இயக்குநர் மூலம்தான் இந்தக் கதையை நான் கேட்க நேர்ந்தது. விஷ்ணு, அமலாவிடம் கதை சொல்லும்போது கொஞ்சம் பதட்டமாக இருந்த ராம், என்னிடம் கதையை மிகத் தெளிவாகவே சொன்னார். மிகச் சிறப்பான கதை.

இரண்டரை மணி நேரம் மிகவும் சீரியஸான, திரில்லர் படத்தை கொடுத்து ரசிகர்களை சீட்டில் உட்கார வைக்க முடியும் என்பதை ராம்குமார் நிரூபித்திருக்கிறார். படத்தின் ரிசல்ட்டை இப்போதே என்னால் உணர முடிகிறது.

காசு இருந்தால் யார் வேண்டுமானாலும் படத்தை எடுத்துவிடலாம். ஆனால் அதை கொண்டு சேர்ப்பதுதான் கஷ்டம். அதிர்ஷ்டவசமாக எங்கள் படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சார் ரிலீஸ் செய்கிறார். ஆக்சஸ் தொடர்ந்து நல்ல படங்களை எடுப்பதால் உங்களின் அடுத்தடுத்த படங்களையும் நானே ரிலீஸ் செய்கிறேன் என உறுதி அளித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் டீசர், டிரைலர் வந்தவுடன் பல்வேறு பிரபலங்கள் எங்களை பாராட்டினார்கள். அந்த அளவுக்கு படமும் நல்ல தரமாக இருக்கும்…” என்றார்.

DCIM (119)

நாயகன் விஷ்ணு விஷால் பேசும்போது “முண்டாசுப்பட்டி’ படத்தின்போதே, இயக்குநர் ராமிடம் ‘நாம சேர்ந்து இன்னொரு படம் பண்ணலாமே…?’ என்று கேட்டேன். ‘அவர் கதை எழுதிட்டு இருக்கேன்.  கொஞ்ச நாளாகும்..’ என்றார். பின்னர், ‘அந்தக் கதை உங்களுக்கு செட் ஆகாது’ என்றார். எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

பின்னர் ரொம்ப நாள் கழித்து ஒரு நாள் என்னை அழைத்து இந்தக் கதையை சொன்னார். கதையில் ஆக்‌ஷன் அதிகமாகவே இருந்தது. எனக்கு  அவ்வளவு ஆக்‌ஷன் செட் ஆகாது என்று கூறினேன். பல தடைகளுக்கு பிறகும் இந்த கதை என்னையே தேடி வந்தபோதுதான் எனக்குத்தான் இந்த கதை போல என்ற உணர்வு எழுந்தது.

கதை ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நடக்கும். அதில் அமலா பால் கதாபாத்திரமும் ஒன்று. அவர் 25 நாட்களுக்கும் மேல் நைட் ஷூட்டிங்கில் நடித்துக் கொடுத்தார்.

படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் ரிலீஸ் நேர பயம் எனக்கு இல்லை. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், அப்படி படம் ஓடலைன்னா தயாரிப்பாளருக்கு அடுத்த படம் நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று இந்த மேடையில் சொல்லிக் கொள்கிறேன்…” என்று வாக்குறுதி அளித்தார்.

ramkumar

இயக்குநர் ராம்குமார் பேசுகையில், “முண்டாசுப்பட்டி’ படத்துக்கு பிறகு இந்தக் கதையை கிட்டத்தட்ட 20 தயாரிப்பாளர்கள் மற்றும் 17 ஹீரோக்களிடம் சொல்லி விட்டேன். சீரியஸ் படம் என்றவுடன் உடனே அவர்கள் ‘யோசித்து சொல்கிறேன்’ என சொல்லி விட்டார்கள்.

ஆனால், டில்லி பாபு சார்தான் என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார். விஷ்ணு என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.

ராதாரவி, நிழல்கள் ரவி சார் ஆகியோரின் குரலுக்காகவே இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். அமலா பால் ரீ-டேக் வாங்கவே மாட்டார். அவருக்கு காட்சிகள் குறைவு என்றார். ஆனால் அழுத்தமான கதாபத்திரமாக இருக்கும். காளி வெங்கட், ராமதாஸ் இருவருமே நன்கு நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கும் பாதி பங்கு உண்டு, பின்னணி இசை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்து போனாலும் எனக்கு சிறந்த பங்களிப்பையே செய்தார் எடிட்டர் ஷான் லோகேஷ். பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்.

இந்தப் படத்தின் டீசர், டிரைலரை பார்த்துவிட்டு எல்லோரும் சொன்ன கமெண்ட்ஸை கேட்டவுடன் படத்தின் மீதான எனது நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. படத்தைப் பார்க்கும்போது இந்த குழுவின் உழைப்பை நீங்கள் உணர்வீர்கள். ரசிகர்களை இந்தப் படம் நிச்சயமாக ஏமாற்றாது…” என்றார் இயக்குநர் ராம்குமார்.

இந்த விழாவில் நடிகர் காளி வெங்கட், படத் தொகுப்பாளர் ஷான் லோகேஷ், கலை இயக்குநர் கோபி ஆனந்த், ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

 
error: Content is protected !!