மனிதனுக்கும், மிருகத்துக்குமான குண முரண்பாடுகளை பேச வரும் ‘ராஜ பீமா’ திரைப்படம்

மனிதனுக்கும், மிருகத்துக்குமான குண முரண்பாடுகளை பேச வரும் ‘ராஜ பீமா’ திரைப்படம்

சுரபி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.மோகன் தயாரித்துள்ள திரைப்படம் ‘ராஜ பீமா.’ 

இந்தப் படத்தில் ஆரவ் நாயகனாகவும், ஆஷிமா நர்வால் நாயகியாகவும் நடித்துள்ளனர். சைமன் கே.கிங் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் நரேஷ் சம்பத் எழுதி, இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ‘தின்க் மியூஸிக்’ நிறுவனம் வாங்கியுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு உரிமை விற்பனை செய்யப்பட்டது குறித்து தயாரிப்பாளர் எஸ்.மோகன் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறும்போது, “ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், சாதாரண ஒரு இசை ரசிகனாக இசைக்கு பொருத்தமான காட்சிகளை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அனுபவம்.

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் மிகச் சிறந்த திறமைசாலி. உலகளாவிய இசை ரசிகர்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கக் கூடிய திறமை அவருக்கு உண்டு என்று கூறுவேன்.

அவரது சமீபத்திய படைப்புகளைத் தொடர்ந்து, ‘ராஜ பீமா’விற்கு எப்படிப்பட்ட இசையை அளிப்பார் என ஒரு யூகத்தில் இருந்தேன். ஆனால் அவரது முந்தைய படைப்புகளில் இருந்து வேறுபட்ட மற்றும் புதிய பாணியுடன் என் எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்டார். படத்தின் சில காட்சிகளை அவரது பின்னணி இசையுடன் பார்த்தேன். மிக அற்புதமாக வந்திருக்கிறது. படத்தில் அவரது சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ‘ராஜ பீமா’ திரைப்படத்தின் ஆடியோ உரிமைகளை ‘தின்க் மியூசிக்’ நிறுவனம் பெற்றுள்ளது ஒரு தயாரிப்பாளராக எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

‘தின்க் மியூசிக்’ நிறுவனம் திரைப்படப் பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்துதல் துறையில் மிகவும் புகழ் பெற்றது. அந்த வகையில் நான் தயாரித்திருக்கும் இந்த ‘ராஜ பீமா’ திரைப்படம் சரியான ஆட்களிடம் சென்று சேர்ந்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்…” என்றார்.

மனிதனுக்கும், மிருகத்திற்கும் இடையிலான குண முரண்பாடுகளை பற்றிப் பேசும் இந்த ‘ராஜ பீமா’ திரைப்படம், பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் தாய்லாந்து ஆகிய அழகான இடங்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இசை, ட்ரைலர் மற்றும் பட வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.