full screen background image

கெட்ட அரசியல்வாதிகளை எதிர்த்து போராடும் கதைதான் ‘புயலா கிளம்பி வரோம்’ திரைப்படம்

கெட்ட அரசியல்வாதிகளை எதிர்த்து போராடும் கதைதான் ‘புயலா கிளம்பி வரோம்’ திரைப்படம்

ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.ஹரிஹரன் தயாரித்துள்ள  புதிய திரைப்படம்  ‘புயலா கிளம்பி வர்றோம்’.

இதில் ‘சேதுபூமி’,  ‘தொட்டால் தொடரும்’,  ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘ஆச்சர்யம்’, ‘சும்மா நச்சுனு இருக்கு’ போன்ற படங்களில் நடித்த தமன் நாயகனாக நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக மதுஸ்ரீ நடிக்கிறார். மேலும் இதில் சிங்கம் புலி, கும்கி அஸ்வின், ஆர்.என்.ஆர். மனோகர், திருமுருகன், ‘பசங்க’ சிவகுமார், ஆழகன் தமிழ்மணி, ரிஷா, ஜெரால்டு, சர்மிளா, சாமு ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வி.விஜய், படத் தொகுப்பு – சதீஷ்குமார், இசை – சார்லஸ் தனா, பாடல்கள் – சாரதி, கருப்பையா, குரு அய்யாதுரை, சண்டை பயிற்சி – ஆக்ஷன் பிரகாஷ், நடனம் – பாலாஜி, தினா, ராதிகா, கலை – முத்துவேல், வசனம் – நந்தகுமார், தயாரிப்பு – வி.ஹரிஹரன், எழுத்து, இயக்கம் – ஜி.ஆறுமுகம்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஜி. ஆறுமுகம், உலக அதிசயமாக மொத்தக் கதையையுமே வெளிப்படையாக பேசிவிட்டார்.

“கதைக்களமான அந்த ஊரில் மிகப் பெரிய கட்சியில் உள்ள அரசியல்வாதி போடும் அராஜக ஆட்டம் பேயாட்டமாக இருக்கிறது. இந்த நிலையில் கதாநாயகன் தமன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அந்த ஊரில் கேபிள் டி.வி. நடத்துகிறார்.

தமனின் வேலைத் திறமையும், அவனது நண்பர்களின் உழைப்பும் சேர்ந்து அவனுக்கு பணத்தையும், புகழையும் குவிக்கிறது. இதை பார்த்த அந்த அரசியல்வாதி நாயகன் தமன் மீதும் அவனது நண்பர்கள் மீதும் தமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாடாய் படுத்துகிறான்.

இதனால் மிகவும் பாதிப்படையும் தமனின் நண்பர்கள் அந்த அரசியல்வாதியை பழி வாங்கத் துடிக்கின்றனர். ஆனால் தமன் அதெல்லாம் வேண்டாம் என்று தடுக்கிறார்.

இதே நேரம் அரசியல்வாதியின் தொழில் பார்ட்னர்களாக உடனிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஏதாவது ஒரு வழியில் பாதிப்புக்குள்ளாகி அரசியல்வாதியிடமிருந்து பிரிந்து செல்கின்றனர். இப்போது அந்த அரசியல்வாதிக்கு சந்தேகம் வருகிறது. ஏன் தம்முடைய கூட்டாளிகள் ஒவ்வொருத்தராக பிரிகிறார்கள். யாருடைய சதி வேலை இது என்று என்று கண்டறிய முற்படுகிறார்.

இந்த நிலையில் அந்த அரசியல்வாதியை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்குகிறார் தமன். மிரண்டுபோன அரசியல்வாதி தமனிடம் உயிர் பிச்சை கேட்டு கெஞ்சினாலும் தமன் அந்த அரசியல்வாதிக்குக் கொடுக்கும் தண்டனை அவரது நண்பர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.. அது என்ன..? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

மதுரை, பாண்டிச்சேரி, சென்னை, கொடைக்கானல் பகுதிகளில் இந்தப் படம் வளர்ந்துள்ளது. மிக விரைவில் பாடல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது..” என்றார்.

Our Score