full screen background image

‘பப்பி’ காமெடி கலந்த அடல்ட் திரைப்படமாம்..!

‘பப்பி’ காமெடி கலந்த அடல்ட் திரைப்படமாம்..!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி வேலன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘பப்பி’.

இந்தப் படத்தில் வருண் முதல்முறையாக கதையின் நாயகனாக வேடமேற்றிருக்கிறார். ‘கோமாளி’ புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

‘மொரட்டு சிங்கிள்’ நட்டு தேவ்  இயக்கியிருக்கும் இப்படத்திற்கு  தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் படத் தொகுப்பு செய்துள்ளார்.

இன்றைய இளைஞர்களின் உறவுச் சிக்கல்களை அடல்ட் காமெடியாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்பது படத்தின் முன்னோட்டத்திலேயே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

‘பப்பி’ திரைப்படம் வரும் வாரம் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று முன்தினம் மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

isari k.ganesh

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் பேசும்போது, “வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. கடந்த இரண்டு படங்களை போல இந்தப் படமும் பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்.

காலேஜ் செல்லும் இளைஞர்களுக்காகவே எடுத்திருக்கும் படம். அவர்கள் ரசிக்கும்படி இருக்கும். தரணின் இசையில் பாடல்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. பாடல்கள் அனைத்தையும் திரையுலகப் பிரபலங்கள் பாடியுள்ளார்கள்.

இந்த ‘பப்பி’ படத்தில்  வருண் நாயகனாக காலேஜ் செல்லும் மாணவர்களுக்குப் பிடித்த மாதிரி நடித்துள்ளார். படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறோம்.

எங்களது வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் நல்ல படங்களை தொடர்ந்து தருவதுதான் எங்களது நோக்கம். இந்தப் படத்தை அடுத்து ஜீவாவின் நடிப்பில் ‘சீர்’ படம்  வர இருக்கிறது…” என்றார்.

richard

படத் தொகுப்பாளரான ரிச்சர்ட் பேசும்போது, “கடந்த 2008-ம் ஆண்டில் இருந்தே   இயக்குநரை எனக்குத் தெரியும். இந்தப் படம்  பெரிய படமாக உருவாகும்போது என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்தற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படம் ஒரு மொரட்டு சிங்கிளின் வாழ்வை சொல்லும். அதே நேரம் ஒரு பெண்ணின் பார்வையையும், காதலையும் சொல்லும் படமாகவும் இருக்கும். கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும்…” என்றார்.

Tharun Kumar

இசையமைப்பாளர் தருண் பேசும்போது, “இந்தப் படம் எனக்கு  ஒரு ஃபேமிலி புராஜக்ட் மாதிரி இருந்தது. அஸ்வின், வருணையெல்லாம் சிறு வயதில் இருந்தே எனக்குத் தெரியும். நான் பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது இவர்களது வீட்டில்தான் கிரிக்கெட் விளையாடுவேன். 

இந்தப் படத்தில் வருண் மிக எனர்ஜியுடன் இருந்தார். ஒரு புதுமுகமாக அட்டகாசமான நடிப்பை தந்துள்ளார்.  இயக்குநர் மிகவும் திறமையானவர் அவருடன் வேலை செய்தது நல்ல அனுபவம். ஹிரோயின் நேரில் பயங்கர கலகலப்பானவர். ஆனால் படத்தில் ரொம்பவும் அடக்கமான ரோலில் நடித்துள்ளார். படம் நன்றாக வந்திருக்கிறது. கௌதம் சார் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அனிருத், ஆர்.ஜே.பாலாஜி, யுவன் சங்கர் ராஜா ஆகிய அனைவரும் பாடல்களைப் பாடியுள்ளார்கள். என்னை மதித்து பாடல் பாடியதற்காக அவர்களுக்கு எனது  நன்றி…” என்றார்.

samyuktha hedgdea

நாயகி சம்யுக்தா ஹெக்டே பேசும்போது, “கோமாளி படத்திற்கு முன்பே இந்தப் படத்தில் நடிக்க கமிட்டானேன். என்னை தேர்ந்தெடுத்தற்கு தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் நன்றி. இந்தப் படம் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. வருண்  மிக நல்ல நண்பராக மாறிவிட்டார். படத்தில் எங்கள் காட்சிகளில்  நீங்கள் அதைப் பார்க்கலாம். பாடல்கள் இந்தப் படத்தில் மிக முக்கிய பங்கை வகித்துள்ளது. படம் விரைவில் வெளியாகிறது. உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.

varun

நாயகன் வருண் பேசும்போது, “என்னை சின்ன, சின்ன கேரக்டரில் பார்த்திருப்பீங்க, இந்த பப்பி படத்தின் கதையைக் கேட்டபோதே  நாம் நாயகனாக நடிக்க இதுவே சரியான கதை என்று தோன்றியது. இது என் வாழக்கையை, இளைஞர்களை பிரதிபலிக்கும் கதையாக இருந்தது. டிரெய்லரில் அடல்ட் மூவி மாதிரி இருக்கும். ஆனால், இது குடும்பத்துடன் பார்க்கும் க்யூட் லவ் மூவியாக இருக்கும். இதில் காமெடி, செண்டிமெண்ட் என எல்லாமே இருக்கிறது.

இந்தப் படத்தில் ரசித்து, ரசித்து வேலை பார்த்துள்ளேன். இயக்குநர் மிகவும் திறமையானவர். அவர் செய்வதில் பாதியை செய்தாலே போதும். இந்தப் படத்தில் 6 நிமிடக் காட்சி ஒன்று உள்ளது அது கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன்.

சம்யுக்தா வேறு ஒரு படத்திற்காகத்தான் முதலில் வந்தார். இப்போது மிக நெருங்கிய நண்பராக மாறிவிட்டார். அவருடன் காதல் காட்சிகளில் நெருக்கமாக  நடிப்பது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. இயக்குநர் அதை உடைத்து நன்றாக எடுத்திருக்கிறார்.

யோகிபாபுவுடன் முதல் இரண்டு நாட்கள் நடிக்க தயக்கமாக இருந்தது. அதன் பிறகு மிகவும் நெருக்கமாகி விட்டார். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்புகிறேன்.

இளைஞர்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இது இருக்கும். இந்தப் படத்தில் வேலை செய்த எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி. கனவிலேயே வாழும் அனைத்து மொரட்டு சிங்கிள்களுக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்…”  என்றார்.

murattu single

இயக்குநர் மொரட்டு சிங்கிள் பேசும்போது, “இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமான மேடை. 7 வருடங்களுக்கு முன்னர் கீழே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போது மேடையேறி இருக்கிறேன். என் அப்பா, அம்மா எனக்கு அனைத்தையும் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

இது ‘A’ படம் கிடையாது; ‘U’ படம்தான். தயரிப்பாளர் ஐசரி கணேஷ் ஸார், ஒரு தந்தையை போல்தான் என்னுடன் பழகினார். அவரது கனவை நான் நிறைவேற்றி இருக்கிறேன்.

‘காக்கா முட்டை’ மணிகண்டன் சாரிடம் நான் வேலை பார்த்தபோது படத்தின் திரைக்கதையை பிரிண்ட் எடுக்க எங்களிடம் காசு இல்லை. அவர் உண்டியலை உடைத்துதான் பிரிண்ட் எடுத்தோம். தான் செய்வது சரியாக இருக்க வேண்டும் என நினைப்பவர் அவர்.  அந்தப் படம் இன்று இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது. அவரது பெயரைக் கெடுப்பது போல் இந்தப் படம் இருக்காது.

யோகிபாபுவை  ‘காக்கா முட்டை’ படத்திலிருந்தே தெரியும். இன்று அவர் இருக்கும் உயரம் அவருக்கு தகுதியான இடம். அவர் எனக்காக இந்தப் படத்தில் நடித்துள்ளார். வருண் இந்தப் படத்தில் தன் முழுத் திறமையையும் தந்துள்ளார். சம்யுக்தாவை இந்தப் படத்தில்  எல்லோருக்கும் பிடிக்கும். படம் கண்டிப்பாக வெற்றி பெறும்…” என்றார்.

Our Score