“டிவிக்களில் ஸ்லாட் டைம் வாங்கி புரோகிராம் செய்யுங்கள்..” – பிலிம் சேம்பர் பொருளாளரின் அறிவுரை..!

“டிவிக்களில் ஸ்லாட் டைம் வாங்கி புரோகிராம் செய்யுங்கள்..” – பிலிம் சேம்பர் பொருளாளரின் அறிவுரை..!

தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பொருளாளர் கட்டரகட்ட பிரசாத் பேசும்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கு சில ஆலோசனைகளை கூறினார்.

“தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெலுங்கின் முன்னணி டிவி சேனல்களில் தினத்திற்கு அரை மணி நேரம் என்று ஒரு ஸ்லாட் டைம் எடுத்திருக்கிறது.

அந்த ஸ்லாட் டைமில் அந்தந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் பற்றிய செய்திகள், படங்கள், டிரெயிலர்கள், பேட்டிகள் அனைத்தையும் தயாரிப்பாளர் சங்கமே தயாரித்து வெளியிடுகிறது.

இந்த ஸ்லாட் டைம் மற்ற நிறுவனங்களுக்குக் கொடுப்பதைவிட மிகவும் குறைவான தொகைதான். ஏனெனில் சினிமாவை வைத்துத்தான் அந்தந்த சேனல்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதால் தயாரிப்பாளர் சங்கத்திற்காக குறைந்த விலைக்கு நேரத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளன.

இதற்கு ஒத்துழைக்காத டிவி நிறுவனங்களுக்கு தெலுங்கு திரைப்பட உலகமும் ஒத்துழைக்காது என்று சொல்லி சில டிவி  நிறுவனங்களுக்கு தடை போட்டார்கள். அந்த டிவி நிறுவனங்களும் மூன்று மாதங்கள் சமாளித்துப் பார்த்து பின்பு வழிக்கு வந்து தயாரிப்பாளர்களுக்கு ஸ்லாட் டைம் கொடுத்தார்கள்.

சன் நெட்வொர்க்கின் ஜெமினி, ஜீ தெலுகு போன்ற முன்னணி டிவி நிறுவனங்களே இதற்கு ஒத்துக் கொண்டு தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து தெலுங்கு படங்களை பிரமோட் செய்து வருகின்றன.

இதையேன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களும் பின்பற்றக் கூடாது..? நமக்கு வேண்டுமெனில் நாம்தான் போய் கேட்க வேண்டும்.  அவர்களே தேடி வந்து தருவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது..” என்று அட்வைஸ் செய்தார்.

இங்கேயும் கேட்கலாம். ஆனால் தர மாட்டோம் என்று சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி ஆகியவை சொல்லிவிட்டால் இவைகளுக்கு தடையெல்லாம் போட முடியாது.  ஏன் தடை போடுவோம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மிரட்டல்கூட விடுக்க முடியாது. ஏனெனில் இங்கேயிருக்கும் அரசியல் சூழல் அப்படி..!

அரசியல்வாதிகளை பகைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் ஒரு சின்னதாக டீக்கடை கூட நடத்த முடியாது என்பது இந்த ரெட்டிகாருக்கு தெரியலை போலிருக்கு..!
error: Content is protected !!