திரெளபதி அம்மன் சிலையை சுமந்த உதயநிதி ஸ்டாலின்..!

திரெளபதி அம்மன் சிலையை சுமந்த உதயநிதி ஸ்டாலின்..!

தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படம் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’.

இந்தப் படத்தில் வித்தியாச இயக்குநரான ஆர்.பார்த்திபன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். ‘டைகர் பாண்டி’ என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்திருக்கிறார். நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் மயில்சாமி, ‘நமோ’ நாராயணன், சுந்தர், ரமா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியெம், இசை – டி.இமான், பாடல்கள் – யுகபாரதி, கலை – வி.செல்வக்குமார், படத் தொகுப்பு – தினேஷ் பொன்ராஜ், சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, நடனம் – பிருந்தா, தினேஷ், ஷோபி, தயாரிப்பு நிறுவனம் – தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட்,  தயாரிப்பாளர் – என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, எழுத்து, இயக்கம் – தளபதி பிரபு.

அறிமுக இயக்குநரான தளபதி பிரபு, இயக்குநர்கள் விக்ரமன், பொன்ராம் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இன்றைய இளைய தலைமுறையினர் வசதியான வாழ்க்கை வேண்டி கிராமத்திலிருந்து, நகரங்களுக்கு படையெடுப்பதைவிட்டுவிட்டு இருக்கும் இடத்திலேயே அந்த வசதிகளை உருவாக்க வேண்டும் என்ற கதைக் கருவை வைத்து, நகைச்சுவை கலந்து, முற்றிலும் கமர்ஷியல் படைப்பாக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில் மற்றும் அதனுடைய சம்பிரதாயங்கள் அனைத்தும் எக்காலத்திற்கும் மக்களுக்கு பயன்படும்வகையில்தான் உள்ளது என்பதை உணர்த்தும்வகையில் திரைக்கதை இருக்கிறதாம்.

இதற்காக மிகப் பிரம்மாண்டமான செலவில் கோவில் திருவிழா செட் அமைத்து, இரண்டாயிரம் துணை நடிகர், நடிகைகளுடன் மதுரை, தேனியில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இந்தக் காட்சிக்காக காலில் செருப்பு அணியாமல் அதிக எடை கொண்ட திரெளபதி அம்மன் சிலையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கோவிலை சுற்றி வந்து நடித்துள்ளார் ஹீரோவான உதயநிதி ஸ்டாலின்.

மிக விரைவில் படத்தின் படப்பிடிப்பு முடியவிருக்கிறது..!
error: Content is protected !!