ஹிந்திக்கு போகவிருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம்

ஹிந்திக்கு போகவிருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம்

ஒரே வார்த்தைக்கு மூன்று வெவ்வேறு மொழிகளில் அர்த்தம் கற்பிக்கும் தலைப்பு கொண்ட ஒரு படம், மொழிகளையும் தாண்டி செல்வது இயற்கைதானே..!

அந்த வரிசையில் தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் தென்னிந்திய மொழிகளையும் தாண்டி ஹிந்தியில் அடியெடுத்து வைக்க இருக்கிறது.

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், கே புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ராஜராஜனும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும், ரைசா வில்சன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – ராஜா பட்டாச்சார்யா, படத் தொகுப்பு – மணிக்குமரன் சங்கரா, இசை – யுவன் சங்கர் ராஜா, கலை இயக்கம் – தியாகராஜன், எழுத்து, இயக்கம் – இலன்.

பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள இந்தப் படத்தின் மாற்று மொழி  உரிமையை வாங்க பெரும் போட்டா போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரபலமான ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் ஹிந்தி உரிமைக்காக முனைப்பாக போராடி வருகின்றன.  

இது பற்றிப் பேசிய இயக்குநர் இலன், “காதலுக்கு மொழி அவசியமில்லை.  காதலை பற்றிய படங்களுக்கும்  மொழி அவசியமில்லை. இத்திரைப்படமும் காதலைச் சொல்லும் படம்தான். படத்தில் இடம் பிடித்திருக்கும் ‘High on Love’ என்று துவங்கும் ஒரு பாடல், ஏற்கனவே வெளிவந்து சமூக வலைத்தளங்களில் பெரும் ஹிட் அடித்திருக்கிறது.

இதுவே மாற்று மொழிக்காரர்களையும் எங்களது படத்தினை நோக்கி திருப்பியிருக்கிறது. தற்போது படம் இறுதி கட்டத்தில் இருப்பதால், ஹிந்தி ஆக்கத்தை பற்றிய விவரங்கள் தெரிவிப்பதற்கு இன்னமும் அவகாசம் தேவை..” என்கிறார் இயக்குநர் இலன்.