full screen background image

உடுமலைப்பேட்டையில் திருட்டு டிவிடிக்களை விற்ற கடைகளுக்கு சீல் வைப்பு..!

உடுமலைப்பேட்டையில் திருட்டு டிவிடிக்களை விற்ற கடைகளுக்கு சீல் வைப்பு..!

திருட்டு டிவிடிக்கெதிராக திடீரென்று அரசுத் தரப்பு முனைப்பு காட்டுவது ஆச்சரியத்தைத் தருகிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ரிலீஸாகும் திரைப்படங்கள் தியேட்டரை விட்டு அன்றைக்கே தூக்கப்பட்டாலும் அந்தப் படங்களின் திருட்டு டிவிடிக்கள் மட்டும் உடனுக்குடன் வெளியாக சுடச்சுட விற்பனையாகி வருகின்றன.

இதற்கு காவல்துறையினரின் முழு ஒத்துழைப்பும் திருட்டு டிவிடி தயாரிப்பாளர்களுக்கு உண்டு. வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கொடுக்க வேண்டிய ஒத்துழைப்பை அவர்களுக்குக் கொடுத்து அரசுக்கு காட்ட வேண்டிய கணக்குக்காக சில வழக்குகளை மட்டும் பதிவு செய்து போக்குக் காட்டி வருகின்றனர்.

இந்த நிலைமையில் கடந்த சில நாட்களாக நடிகர் சங்கத்தின் செயலாளர் நடிகர் விஷால் இந்த்த் திருட்டு டிவிடி பிரச்சனையில் ஈடுபட்டு முனைப்பு காட்டி வரும் நிலையில் சில இடங்களில் திருட்டு டிவிடிகளை கைப்பற்றும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமையன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறிவுறுத்தலின்படி சினிமா ரசிகர்கள் நடத்திய திருட்டு டிவிடி வேட்டையில் ‘மருது’, ‘பென்சில்’, ‘மனிதன்’, ‘24’ ஆகிய புதிய திரைப்படங்களின் திருட்டு டிவிடிக்கள்  பிடிக்கப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த வாரம் ரிலிஸ் ஆன ‘மருது’ பட டிவிடி மட்டும் 15,000 பிடிபட்டுள்ளது. திருட்டு டிவிடிகளை விற்பனை செய்த ‘முருகன் கேசட் சென்டர்’, ‘சீடி உலகம்’, டைம் பாஸ்’ ஆகிய கடைகள் காவல் துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையின் உரிமையாளர்கள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் . 

நடிகர் சங்கத்தின் அறிவுறுத்தலின்படி ரசிகர் மன்றங்களும் முடுக்கி விடப்பட்டு ஆங்காங்கே திருட்டு டிவிடி வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தது. நடிகர்களுக்கிடையேயும் திரைப்பட துறையினரிடையேயும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score