“சமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி என்கிறார்கள்..” – பாரதிராஜாவின் வேதனைப் பேச்சு!

“சமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி என்கிறார்கள்..” – பாரதிராஜாவின் வேதனைப் பேச்சு!

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் ‘பெட்டிக்கடை.’

இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘சமுத்திர பாண்டி’ என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட ஆசிரியராக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார்

கதாநாயகியாக சாந்தினி நடித்துள்ளார். இன்னொரு ஜோடியாக சுந்தர், அஸ்மிதா இருவரும் நடித்திருக்கிறார்கள்.

மற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திரநாத், ஐஸ்வர்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – அருள், சீனிவாஸ், இசை – மரியா மனோகர், பாடல்கள் – சினேகன், நா.முத்துக்குமார், இசக்கி கார்வண்ணன், மறத்தமிழ் வேந்தன், நடன இயக்கம் -வின்செண்ட், விமல், சண்டை இயக்கம் – மிராக்கிள் மைக்கேல், படத் தொகுப்பு -சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – முருகன், தயாரிப்பு மேற்பார்வை – செல்வம், எழுத்து, தயாரிப்பு, இயக்கம் – இசக்கி கார்வண்ணன்.

petti kadai movie stills

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். மேலும் நடிகர்கள் சமுத்திரக்கனி, வீரா, இயக்குநர் இசக்கி கார்வண்ணன், இசையமைப்பாளர் மரியா மனோகர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாடலாசிரியர் மறத்தமிழ் வேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன், “இது எனக்கு முதல் படம். முதல் படத்தில் அழுத்தமான ஒரு பதிவை பதிக்க வேண்டும் என்பதற்காக இந்த கதையைத் தொட்டிருக்கிறேன். ‘பெட்டிக் கடை’ என்கிற பாரம்பர்யத்தை உறவு சங்கிலியை உணவு பாரம்பர்யத்தை, சூப்பர் மார்க்கெட் என்கிற மாயை எப்படி காலியாக்கி இருக்கிறது  என்கிற கருத்தை இதில் பதிய வைத்திருக்கிறேன்..” என்றார்.

IMG_1008

இசையமைப்பாளர் மரியா மனோகர் பேசும்போது, “எனது இசையை பாரதிராஜா வெளியிடுவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். இயக்குநர் இசக்கி கார்வண்ணன் ஒரு நல்ல கருத்துள்ள கதைக்கு என்னை  இசையமைப்பாளராக வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி..” என்றார்.

பாடலாசிரியர் மறத்தமிழ் வேந்தன் பேசும்போது, “விடுதலைப்புலி அமைப்பின் தலைவரான பிரபாகரனுக்கு அதிக பாடல்களை எழுதியவன் நான் என்கிற பெருமையோடு  சமூக சிந்தனையுள்ள சமுத்திரக்கனி சாருக்கும் பாட்டெழுதுகிறேன் என்கிற பெருமை எனக்கு..” என்றார்.

நடிகர் வீரா பேசும்போது, “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ‘மொசக்குட்டி’ படத்தில் நாயகனாக நடித்திருந்தேன் .அதுவும் கிராமத்து கதை. இதுவும் கிராமத்து கதை. எனக்கு தமிழக மக்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள் என்று நம்பிக்கை எனக்குண்டு..” என்றார்.

IMG_8721

தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “பெட்டிக்கடை’ புரட்சியைப் பற்றிப் பேசவிருக்கும் படம். இசக்கி கார்வண்ணன் தனது முதல் படத்திலேயே முத்திரை பதிக்கப் போகிறார்…”  என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “இதுவொரு நல்ல தருணம். நாம் கடந்து வந்த விஷயம். நாம் வேணாம்னு விட்டுட்டு வந்த விஷயத்தை இதில் எடுத்து இருக்காங்க. அடுத்த தலைமுறையை எப்படி பாதிக்கும். அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டுட்டு போறோம்னு இதில் சொல்லி இருக்கார்.

இந்த டைரக்டர் இசக்கி கார்வண்ணனைப் பற்றி சொல்லனும்னா இளம் கன்று பயமறியாதுன்னு சொல்வோமே அது மாதிரிதான் இவரும். திடீரென்று ஒரு நாள் வந்து ‘சர்கார்’ படம் ரிலீஸ் அன்றைக்கே நம்ம படத்தையும் ரிலீஸ் செய்வோம்’ன்னார். நான்தான், ‘அப்படியெல்லாம் வேணாம். நமக்குன்னு ஒரு தேதி வரும். அப்ப ரிலீஸ் செய்வோம்’ என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தேன். அந்தளவுக்கு அவருக்கு தன் படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது..” என்றார்.

இசையை வெளியிட்டுப் பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, ”பெட்டிக்கடை என்பது நம் பண்பாட்டின் அடையாளம். நமது ஊர்களில் கடைகளை பெட்டிக்கடை என்றுதான் அழைப்பார்கள். பழமையைப் பேசினால் எங்கு நாம் பின்னோக்கிப் போகிறோமோ என்று தோன்றும்.

IMG_0005

ஆனால் அப்படியல்ல. நம் பண்பாட்டை நாம் பேண வேண்டும்; பேச வேண்டும். அப்படியான பண்பாட்டை காக்க நாம் போராடினால், இந்தச் சமூகத்திற்காகப் போராடினால் நம்மை ‘சமூக விரோதி’ என்கிறார்கள். நமது மண் வாசனையை நாம் என்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

ஏதாவது நல்ல விஷயத்துக்காக பேசினாலே சமூக விரோதியாக்கப்பட்டு விடுகிறார்கள். இந்த இயக்குநர் படத்தின் தலைப்பை ‘பெட்டிக்கடை- No GST’ என்று வைத்திருக்கிறார். இவருக்கும் ஏதாவது பிரச்சனை வரலாம். வந்தாலும் போராடித்தான் ஆக வேண்டும்.  இல்லையென்றால் நாம் நம் பாரம்பர்யத்தை இழந்து விடுவோம். தழிழை இழந்து விடுவோம். நம் மண்ணை இழந்து விடுவோம்..  ஏன், இந்த பூமியையே இழந்து விடுவோம்.

இந்தப் படம் மிகவும் சிறப்பாக வந்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தின் பாடல்களை பார்க்கும்போது என்னை நானே கண்ணாடியில் பார்த்துக் கொண்டது மாதிரி இருக்கு.

இந்தப் படம் இசக்கி கார்வண்ணன், சமுத்திரகனி, வீரா, மரியா மனோகர், மறத்தமிழ் வேந்தன் என எல்லோருக்குமே நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தரும்…” என்றார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
error: Content is protected !!