பேரறிவாளனின் கதை படமாகிறதாம்..! வெளிவர முடியுமா..?

பேரறிவாளனின் கதை படமாகிறதாம்..! வெளிவர முடியுமா..?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை பெற்று பின்பு உச்சநீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இப்போது சிறையில் இருக்கும் பேரறிவாளனின் வாழ்க்கைக் கதை படமாகிறதாம்..! இதனை ‘வாய்மை’ என்ற தலைப்பில் படமாக்க முனைந்திருக்கிறார் புதுமுக இயக்குநர் செந்தில்குமார்.

ஏற்கெனவே இயக்குநர் ராம், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் கதையை படமாக்க இருப்பதாகச் சொல்லியிருந்தாலும், இப்போது இயக்குநர் செந்தில்குமார் மிக வேகமாக இந்தப் படத்தைத் துவக்கியிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. இந்தக் கதையைப் படமாக்க அற்புதம் அம்மாளிடம் அனுமதியையும் பெற்றுவிட்டாராம் செந்தில்குமார்.

அதோடு இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் முருகன் வேடத்திலும், சாந்தன் வேடத்தில் பாண்டியராஜ் மகன் பிரித்வியும், பேரறிவாளன் வேடத்தில் பாக்கியராஜ் மகன் சாந்தனுவும் நடிக்கின்றனராம். இதுவே தமிழ்த் திரையுலகத்தினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.  மேலும் இன்னுமொரு அதிர்ச்சியாக அற்புதம் அம்மாள் வேடத்தில் பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா பாக்கியராஜ் நடிக்க உள்ளாராம்.

இதற்கெல்லாம் மேலாக இதே திரைப்படத்தில் ‘பென்னி குக்’ என்கிற ஒரு வித்தியாசமான வேடத்தில் நகைச்சுவை அரசர் கவுண்டமணியும் நடிக்கவிருக்கிறாராம். அரசியல் என்றாலே காதை பொத்திக் கொள்ளும் கவுண்டர் இதற்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்று கோடம்பாக்கத்தில் பலரும் இப்போது கிசுகிசுத்து வருகிறார்கள்.

“இது ராஜீவ்காந்தி கொலையைப் பற்றிய படமல்ல.. மரண தண்டனைக்கு எதிரான படம் மட்டுமே. இதில் எள்ள்ளவும் அரசியல் இருக்காது..” என்கிறார் இயக்குநர் செந்தில்குமார். மரண தண்டனையை எதிர்ப்பது என்பதே இதனை வழங்கிவரும் அரசுகளை எதிர்ப்பது போலத்தானே..? இதில் அரசியல் இல்லாமல் எப்படியிருக்க முடியும்..? அற்புதம் அம்மாள் யாரை எதிர்த்து பேட்டியளிப்பார்..? இயக்குநர் யாரை குற்றம், குறை சொல்லப் போகிறார்..? ஒண்ணும் புரியலை..!

ஏற்கெனவே இலங்கை, ஈழப் போராட்டம் என்றாலே கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு கண்காணிக்கும் சென்சார் போர்டு இத்திரைப்படத்தை சும்மா விட்டுவிடுமா..? பல முறை யோசித்துப் பார்த்து திரைப்படத்தை தயாரிக்க முனைந்தால் நல்லது. இல்லையேல்.. ஆர்.கே.செல்வமணியின் ‘குற்றப்பத்திரிகை’ படத்திற்குக் கிடைத்த பரிசுதான் இதற்கும் கிடைக்கும்..!
error: Content is protected !!