ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேரன்பு’ திரையிடப்படுகிறது..!

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேரன்பு’ திரையிடப்படுகிறது..!

ஸ்ரீராஜலக்ஷ்மி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பேரன்பு’.

‘தரமணி’ படத்திற்கு பிறகு இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் அடுத்தப் படம் இது.

இந்தப் படத்தில் ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்க மீன்கள்’ சாதனா, திருநங்கை அஞ்சலி,  இயக்குநர் அமீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்,  இசை – யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – சூர்ய பிரதமன், கலை இயக்கம் – குமார் கங்கப்பன், எழுத்து, இயக்கம் – ராம்.

47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேரன்பு’ திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேக காட்சி (World Premiere) கடந்த ஜனவரி மாதம் திரையிடப்பட்டது.

187 உலக திரைப்படங்கள் போட்டியிட்ட பார்வையாளர்கள் விருதிற்கான பிரிவில் ‘பேரன்பு’ (ஆங்கிலத்தில் Resurrection) முதல் 20 திரைப்படங்களில் இடம் பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சிறப்பை பெற்றது. மேலும் சிறந்த ஆசிய படத்திற்கு கொடுக்கும் NETPAC விருதிற்கு போட்டிப் பிரிவிலும் தேர்வாகியது.

தற்போது ‘பேரன்பு’ திரைப்படம் ஜூன் 16 முதல் 25-ம் தேதிவரை நடைபெறவுள்ள 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. ஆக, சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாக (Asian Premiere) ‘பேரன்பு’ திரையிடப்பட இருக்கிறது.

இத்திரையிடலுக்குப் பிறகு ‘பேரன்பு’ படம் வெளியாகவிருக்கிறது. அதற்கு முன்னதாக ‘பேரன்பு’ திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான பி.எல்.தேனப்பன் தெரிவித்துள்ளார்.