‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..!

‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..!

விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா ஜோடியாக நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘பெல்லி சூப்லு.’ இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி. மற்றும் ஹவிஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பானஸ இப்படத்தை தயாரிப்பாளர் கொன்ரு சத்தியநாராயணா தயாரிக்கிறார். எஸ்.பி.சினிமாஸ் நிர்வாகத் தயாரிப்பை கவனிக்கிறது.

மிகத் தகுதியான பிரம்மச்சாரி என்ற அடைமொழிக்கு மிகப் பொருத்தமான ஹரீஷ் கல்யாண், திருமண விளையாட்டில் தள்ளப்படும் பொறியியல் பட்டதாரி வேடத்தில் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முக்கிய பங்கு வகிக்கும், வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் வைபவத்தை கதைக் களமாகக் கொண்ட இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த், இசை – விஷால் சந்திரசேகர், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – கோடலி முரளிகிருஷ்ணா, படத் தொகுப்பு – கிருபா, வசனம் – தீபக் சுந்தர்ராஜன், கலை இயக்கம் – கே.சதீஷ், ஆடை வடிவமைப்பு – அனுஷா மீனாட்சி, புகைப்படங்கள் – சூர்யா, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா.

இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் பல திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் சுந்தர், இப்படத்தை இயக்குவதின் மூலம் இயக்குநராக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் கார்த்திக் சுந்தர் பேசும்போது, “இப்போது என் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்து போன்ற பரவசத்தையும், பரபரப்பையும் ஒரு சேரப் பெற்றது போலிருக்கிறது.

‘பெல்லி சூப்லு’ படத்தை முதன் முதலாக பார்த்தபோது, எவ்வளவு எளிமையான மற்றும ஆழமான படம் இது என்று நான் பிரமித்துப் போனேன். குழந்தைப் பருவம் முதலே எனக்கு மிக நெருக்கமான நண்பனான ஹரீஸ் கல்யாணுக்கு உடனே போன் செய்து “இ்ந்த ‘பெல்லி சூப்லு’ படத்தை தமிழில் எடுத்தால் அதற்கு மிகவும் மிகப் பொருத்தமான நடிகன் நீதான்’ என்று சொன்னேன்.

இப்படி நான் சொன்னது உலகத்தின் காதுகளில் கேட்டுவிட்டதோ அல்லது வேறு என்ன வேடிக்கையோ தெரியவில்லை, இப்போது நாங்கள் இருவருமே இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம்.

பிரியா பவானி சங்கரின் நடிப்பை பல படங்களில் பார்த்து ரசித்த எனக்கு, அவர் எந்த அளவுக்கு பரிபூரண நடிகை என்பது தெரியும். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அவருடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்.

இத்திரைப்படம் முழுக்க, முழுக்க கதை மற்றும் கதாபாத்திரங்களால் இயக்கப்படும் படம் என்பதால் மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கும். மண்ணின் கதை என்று என்று குறிப்பிடுவதால், நம் தமிழ் மண்ணின் மரபுக்கேற்ப திரைக்கதையில் சில மாற்றங்களையும் செய்திருக்கிறோம்.

இயக்குநராக என் பயணத்தைத் தொடரக் காரணமாக இருந்த ஹரீஸ் கல்யாண் மற்றும் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் கொன்ரு சத்தியநாராயணாவுக்கும் தயாரிப்பில் உறுதுணையாக நிற்கும் எஸ்.பி.சினிமாஸ் நிறுவனத்துக்கும் நன்றி…” என்றார் இயக்குநர் கார்த்திக் சுந்தர் .

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது. இந்த பூஜை நிகழ்வில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுடபக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொணடனர்.

நடிகர் நாசர் கிளாப் அடித்து வைத்து படப்பிடிப்பை துவங்கி வைக்க, நாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் நாயகி ப்ரியா பவானி ஷங்கர் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்தப் படம் ரசிகர்களுக்கு கோடை விருந்தாக 2020 கோடை காலத்தில் திரைக்கு வரவிருக்கிறது.




error: Content is protected !!