பீப் பாடல் – “தூக்குல போடணும்…” – நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் கோபம்..!

பீப் பாடல் – “தூக்குல போடணும்…” – நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் கோபம்..!

தமிழகத்தில் தற்போது பரபரப்பாகியிருக்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து நடிகர் சிம்பு எழுதி, பாடிய பீப் பாடல் குறித்து சில திரையுலக பிரபலங்கள் தங்களுடைய கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

கவிஞர் வைரமுத்து கருத்து – “சுய தணிக்கை கலைஞர்களுக்கு அவசியம்..”

vairamuthu

“நான் அந்த பாடலை இன்னும் கேட்கவில்லை. கேட்காமல் கருத்து சொல்வது அவ்வளவு பொருத்தம் இல்லை.

பாடல்கள் இரண்டு வகை. ஒன்று, கொள்கை பாடல்கள். இன்னொன்று, கொண்டாட்ட பாடல்கள். கொள்கை பாடல்கள் குறைந்து, கொண்டாட்ட பாடல்கள் அதிகமாகி வரும் சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இந்த நேரத்தில், தமக்கு தாமே எல்லை கட்டிக் கொள்ளும் கலாசார பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்கிறது.

படைக்கும்போதே இசையமைப்பாளர்களும், பாடல் ஆசிரியர்களும், பாடகர்களும் சுயதணிக்கை செய்து கொள்வது நல்லது. இதைத்தான் ஒரு நாகரிக சமூகம் விரும்புகிறது.’’

கவிஞர் பா.விஜய் கருத்து – “பாடல்களுக்கும் தணிக்கை வேண்டும்..”

paa vijay

“இந்த மாதிரி பாடல்களை வேண்டுமென்றே ‘வைரல்’ஆக வேண்டும் என்பதற்காக இப்படி சம்பந்தப்பட்டவர்களே கசிய விடுகிறார்கள். இதன் மூலம் 10 லட்சம் பேர் கேட்க வேண்டிய பாடலை 10 கோடி பேர்வரை கேட்கிறார்கள். இந்த பாடலை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் இன்று மட்டுமே குரல் கொடுப்பார்கள். அப்படியிருக்கக் கூடாது. தொடர்ந்து இந்த பாடலை எதிர்க்க வேண்டும். இனி யாரும் இது போன்ற பாடல்களை வெளியிட அஞ்ச வேண்டும். மேலும் படங்களுக்கு தணிக்கை இருப்பதுபோல் பாடல்களுக்கும் தணிக்கை கொண்டு வர வேண்டும். அந்த நிலை வந்தால், இது போன்ற பாடல்கள் வெளியாவது கட்டுக்குள் கொண்டு வரப்படும்.’’

இசையமைப்பாளர் கங்கை அமரன் – “கோழைத்தனமாக ஏன் மறுக்கணும்..?”

gangaiamaran

“இந்த பாடலை யார் உருவாக்கியிருந்தாலும் தப்பு தப்புதான். ஆபாசப் பாடலை படைத்து விட்டு, ஏன் கோழைத்தனமாக மறுக்க வேண்டும்..? இது போன்ற ஆபாச வார்த்தைகளை கொண்ட பாடல்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆபாசம் மற்றும் கொச்சையான வார்த்தைகளை கொண்ட பாடல்கள், ஒரு சில வேளைகளில் அனுமதிக்கப்பட்டு வெளிவந்து விடுகிறது. இதனால் வருங்காலங்களில் வெளிவரும் பாடல்களிலும் இதைவிட கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்த வாய்ப்பாகிறது. எனவே ஆபாச பாடல்களை தொடக்கத்திலேயே அனுமதிக்கக் கூடாது.’’

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா கருத்து  - “தூக்குல போடணும்..!”

Y.GEE.MAHENDRA

"மற்றுமொரு சர்ச்சைக்குரிய தமிழ்ப் பாடல். பீப் பாடல். அனிருத் எனக்கும் அந்தப் பாடலுக்கு சம்மந்தம் இல்லை எனத் தெளிவாகக் கூறிவிட்டார். 

இந்தப் பாடல் கடும் கண்டனத்துக்குரியது. இந்தப் பாடலுக்கு பொறுப்பாளி யார் என்பதைக் கண்டறியவேண்டும். இந்த அசிங்கமான பாடலில் எந்தவொரு உணர்வும், எந்தவொரு மெலொடியும் இல்லை. குழந்தைகளை அந்த பீப் சத்தத்தில் மறைந்திருக்கும் வார்த்தை என்ன எனக் கேட்கச் செய்து, பெரியவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் பாடல்தான் இது.

இந்தப் பாடல் அவசியமான ஒன்றா. லீக்கானதோ, ஆகாததோ..? எதுவாக இருந்தாலும் மூளை பாதிக்கப்பட்ட மனிதனால் மட்டுமே இப்படியொரு பாடலை உருவாக்க இயலும்.

கண்ணதாசன் தனது கல்லறையில் கண்டிப்பாக நிம்மதியின்றியே இருப்பார். ஆனாலும் யார் மீதேனும் தவறான பழிகள் வந்து சேரும் முன், உண்மையான நபரைக் கண்டறிந்து அவரைத் தூக்கிலிட வேண்டும்."