பட்டாஸ் – சினிமா விமர்சனம்

பட்டாஸ் – சினிமா விமர்சனம்

பிரபல தயாரிப்பாளர் T.G.தியாகராஜனின் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இது இவர்களது  34-வது தயாரிப்பாகும்.

இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கிறார். ‘தொடரி’ படத்திற்கு பிறகு 2-வது முறையாக தனுஷ், சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனப் படத்தில் இணைந்துள்ளார். 

தனுஷ் இந்தப் படத்தில் இரட்டை வேடமேற்றுள்ளார். தனுஷுக்கு ஜோடிகளாக நடிகைகள் சினேகாவும், மெஹ்ரின் பிரசாதாவும் நடித்துள்ளனர்.

நடிகை சினேகா 2006-ம் ஆண்டு வெளிவந்த ‘புதுப்பேட்டை’ படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது 13 ஆண்டுகள் கழித்து தனுஷுடன் இரண்டாவது முறையாக இப்படத்தில் நடிக்கிறார்.

மேலும் நாசர், முனீஸ்காந்த், கே.பி.ஒய்.சதீஷ், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், தயாரிப்பு நிறுவனம் – சத்யஜோதி பிலிம்ஸ், தயாரிப்பாளர்கள் – செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன், இசை – விவேக், மெர்வின், ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ், போஸ்டர் டிசைன்ஸ் – ரமேஷ் ஆச்சார்யா, படத் தொகுப்பு – பிரகாஷ் மாபு, கலை இயக்கம் – துரைராஜ், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், நடன இயக்கம் – ஜானி, பாடல்கள் – விவேக், விவேக்-மெர்வின், இணை தயாரிப்பு – ஜி.சரவணன், சாய் சித்தார்த், உடைகள் வடிவமைப்பு – அனு வர்த்தன், தாட்ஷா ஏ.பிள்ளை, புகைப்படங்கள் – எஸ்.பி.சுரேஷ், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது, சுரேஷ் சந்திரா, ரேகா, விளம்பர வடிவமைப்பு – Tuney John, 24AM, ஒலி வடிவமைப்பு – உதய் குமார், கிராபிக்ஸ் – ஹரிஹரசுதன். நேரம் : 2 மணி 22 நிமிடங்கள்.

‘அனேகன்’, ‘மாரி’, ‘மாரி-2’  படங்களுக்கு பிறகு 4-வது முறையாக தனுஷுடன் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார்.

‘வடகறி’, ‘டோரா’, ‘குலேபகாவலி’ படங்களுக்கு இசையமைத்து, ‘ஒரசாத’ பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை உரசிச் சென்ற விவேக்-மெர்வின்  இரட்டையர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள்.

‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் R.S.துரை செந்தில்குமார்  இப்படத்தை இயக்கியிருக்கிறார். ‘கொடி’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைந்திருக்கிறார் துரை செந்தில்குமார்.

சின்னச் சின்னத் திருட்டுக்களில் ஈடுபடும் முனீஸ்காந்தின் வளர்ப்பு மகன் ‘பட்டாஸ்’ என்னும் ‘சக்தி’ என்னும் தனுஷ். வில்லன் நவீன் சந்திரா ஒரு குத்துச் சண்டை போட்டி பயிற்சியாளர். அவரது மகன்தான் இந்தியாவின் குத்துச் சண்டை சாம்பியன். இவர்களது சென்னை பயிற்சி மையத்திற்குள் ஒரு நாள் நுழையும் தனுஷும், அவரது நண்பருமான சதீஷூம்… அங்கே இருக்கின்ற ஷீல்டுகளையெல்லாம் திருடிச் செல்கிறார்கள்.

அந்த பயிற்சி மையத்தில் பொறுப்பாளராக இருக்கிறார் நாயகி மெஹ்ரீன் பிரசாதா. இந்தத் திருட்டினால் அவருக்கும் வேலை பறி போகிறது. இந்தத் திருட்டினை செய்தது யார் என்று மெஹ்ரீனும் தேடுகிறார். இவருடைய தேடுதலில் தனுஷும், சதீஷும் சிக்குகிறார்கள். ஆனாலும் அந்த அர்த்தராத்திரியில் மெஹ்ரீன் பயிற்சி மையத்தில் போட்ட கெட்ட ஆட்டம் தனுஷின் செல்போனில் இருப்பதால் உண்மையைச் சொல்ல முடியாமல் தவிக்கிறார் மெஹ்ரீன்.

திருடப்பட்டவைகள் திரும்பக் கிடைத்தால்தான் மெஹ்ரீனின் சான்றிதழ்களை திருப்பித் தரவேன் என்கிறார் வில்லன். இதனால் கோபமடையும் மெஹ்ரீன், தனுஷிடம் வந்து தனது சான்றிதழ்களை திருடி வரும்படி சொல்கிறார்.

தனுஷ் அங்கே இதற்காகச் செல்லும்போது சில நாட்களுக்கு முன்பாக திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்து விடுதலையான ‘கன்னியாகுமரி’ என்னும் சினேகாவும் அந்தப் பயிற்சி மையத்திற்கு வருகிறார். வில்லன் நவீன் சந்திராவை கொலை செய்ய முயல்கிறார் சினேகா. குறி தப்ப.. வில்லன் உயிர் தப்புகிறார்.

ஆனால் சினேகாவை சிசிடிவியில் பார்த்துவிடும் வில்லன் அவரைக் கொலை செய்ய ஆட்களை அனுப்புகிறார். அதே நேரம் அந்த இடத்தில் தனுஷை பார்த்த சினேகா… தனுஷைத் தேடி அலைந்து அவரது வீட்டிற்கு வருகிறார். அங்கே முனீஸ்காந்த் இருக்க.. அப்போதுதான் சினேகாதான் தனுஷின் தாய் என்பது தெரிய வருகிறது.

இந்த நேரத்தில் கேடயத் திருட்டுக்காக தனுஷை வில்லன்களின் ஒரு கோஷ்டி விரட்ட.. அதே நேரம் சினேகா யாரென்றே தெரியாத மெஹ்ரீன் சினேகாவை வில்லனிடம் சிக்க வைக்கிறார். சினேகா யாரென்று தெரியாமல் அவரிடமே ஜேப்படி செய்கிறார் தனுஷ்.

ஆனால் அவருடைய உள் மனது எதையோ உருத்த.. திரும்பவும் சினேகாவைத் தேடிப் போகிறார். அங்கே வில்லன் கோஷ்டி சினேகாவை கொலை செய்ய முயல்வதைப் பார்த்தவுடன் அவர்களிடமிருந்து சினேகாவைக் காப்பாற்றி அழைத்து வருகிறார்.

இப்போதுதான் தனுஷுக்கே தான் யார் என்பது தெரிய வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான ‘அடி முறை’ என்னும் வீர விளையாட்டின் சாம்பியனான ‘திரவியப் பெருமாள்’ என்பவரின் மகன்தான் தான் என்பது தனுஷுக்குத் தெரிகிறது.

பொறாமையின் காரணமாக வில்லன் நவீன் சந்திரா தனது தந்தையைக் கொலை செய்ததையும், அதன் விளைவாகவே இப்போது தனது தாய் சினேகா வில்லனை கொலை செய்ய முயல்வதையும் அறிந்து கொள்கிறார் மகன் தனுஷ்.

“இனி இந்தப் பொறுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன். என் தந்தையை கொன்றவனை நானே பழி தீர்க்கிறேன்…” என்கிறார் தனுஷ். சொன்னதை செய்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பின்னான திரைக்கதை.

எதைப் பற்றியும் கவலைப்படாத திருடன் ‘சக்தி’யாக ஒரு தனுஷ்.. ‘அடி முறை’ என்னும் கலையை ஆண்டாண்டு காலத்திற்கும் வாழ வைக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கும் ஒரு தமிழ்க் குடிமகனான ‘திரவியப் பெருமாளாக’ இன்னொரு தனுஷ்.. என்று இரண்டு கதாபாத்திரங்களில் அசத்தியிருக்கிறார்.

சண்டை காட்சிகளில் நீண்ட நாட்கள் பயிற்சியெடுத்து நடித்திருக்கிறார் போலும். படத்தின் இருக்கின்ற ஏழு சண்டை காட்சிகளிலும் அனல் தெறிக்கிறது. சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயனுக்கு ஒரு சபாஷ்..

முறுக்கிவிடப்பட்ட மீசை.. உருப்பேறிய உடம்புடன் திரவியப் பெருமாளாக சினேகாவுக்கு தக்க ஜோடியாக வருகிறார். குருவுக்கும், அவருடைய மகனுக்கும் பாலமாக இருக்க முனையும் அளவுக்கு நல்லவராகவும் இருக்கிறார். “என் மகனை நம்பாதே… அவன் விஷம்…” என்று பெத்த அப்பனே சொன்ன பிறகும் நம்பிக் கெடும் அந்தத் துயரக் காட்சியில் கண்களை கசிய வைத்திருக்கிறார் தனுஷ்.

‘அடி முறை’ கலையை அதே இலக்கணத்தோடு கற்றுணர்ந்து அதை வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்காக கடுமையான உழைப்பையும் கொட்டியிருக்கிறார் தனுஷ். பாராட்டுக்கள்.

இதே பாராட்டு சினேகாவுக்கும் போய்ச் சேர வேண்டும். அப்பாவுக்கு ஜோடியான சினேகாதான் படத்தின் நிஜமான ஹீரோயின். இப்போதும் அழகு ராணியாகவே இருக்கிறார். சிறையில் இருந்து வெளியில் வரும்போது அவருடைய முகத்தில் இருக்கும் கடுமை.. தன் மகனைப் பார்த்தவுடன் வெளிவரும் பாசம்.. எப்படியாவது கணவரை கொன்றவனை பழி தீர்க்க நினைக்கும் அவரது வெறியையும் தப்பில்லாமல் காட்டி நடித்திருக்கிறார்.

இது எல்லாவற்றையும் கடந்தும் நிற்கிறது அவரது சண்டை போடும் திறன். ‘அடி முறை’ கலையைக் கற்றுணர்ந்து அதே போல் மிகவும் திறமையாக நடித்திருக்கிறார் சினேகா. பாராட்டுக்கள்..

இன்னொரு நாயகியாக மெஹ்ரீன் பிரசாதா. அதிகம் நடிக்க வைக்கப்படவில்லை. டப்பிங் கொஞ்சம் ஒட்டவில்லை என்பது தெரிகிறது. ஆனால் நடிப்பு தாராளமாக வருகிறது. இன்னும் சிறந்த இயக்குநர்கள் கைகளில் கிடைத்தால் உருப்படுவார்.

‘கலக்கப் போவது யாரு’ சீஸனில் நடித்த சதீஷ் இதில் தனுஷூக்கு கிரைம் பார்ட்னராக நடித்திருக்கிறார். அறிமுகம் போல தெரிகிறது. போகப் போக இன்னும் பெரிய ஆளாகலாம். இவர் அவ்வப்போது அடிக்கும் ‘விட்டு’கள்தான் பட்டாஸாக படத்தில் தெரிக்கிறது.

வில்லன் நவீன் சந்திரா வில்லத்தனத்துக்கே ஒரு சபாஷ் போட்டிருக்கிறார். இள வயதில் அப்பா தனுஷூடன் போட்டி போட்டு முடியாமல்போய் அது பொறாமையாக வளர்ந்து வருவதை கச்சதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மிகப் பெரிய அளவுக்கு வளர்ந்து வந்த பின்பும் தனது பொறாமைக் குணத்தைக் காட்டும் பல இடங்களில் பெஸ்ட் வில்லன் என்று சொல்ல வைத்திருக்கிறார்.

கனிவான அதே சமயம் கண்டிப்பான ‘அடி முறை’ கலையின் ஆசிரியராக நாசர்.. தனக்குக் கிடைத்த வேடத்தில் எப்போதும்போல் மிச்சம் மீதி வைக்காமல் நடித்து முடித்திருக்கிறார்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தை மிகவும் ரிச்சாகக் காட்டியிருக்கிறது. ‘அடி முறை’ பயிற்சிக் கூடத்தை வடிவமைத்த கலை இயக்குநருக்குக் கொடுக்கும் அதே பாராட்டை ஒளிப்பதிவாளருக்கும், சண்டை இயக்குநருக்கும் தர வேண்டும். கலை இயக்குநர் மிகப் பிரயத்தனப்பட்டு பயிற்சிக் கூடங்களை அமைத்திருக்கிறார்.

விவேக்-மெர்வின் இரட்டையர்களின் இசையில் பாடல்கள் படத்தின் கதைக்குச் சம்பந்தமில்லாம் ராக் அண்ட் ரோல்லாக இருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. கிராமியக் கலையோடு சம்பந்தப்பட்ட இசையுடன் பாடல்கள் ஒலித்திருக்க வேண்டும்.

ஆனால் முதல் பாடலில் தனுஷ் ஆடும் ஆட்டம் அழகு.. விஜய்க்கு பிறகு நடனத்தில் சிறப்பாக திகழ்பவர் தனுஷ் மட்டுமே என்பதில் சந்தேகமேயில்லை.

இதுவரையிலும் கேள்விப்பட்டிருக்காத ‘அடி முறை’ என்னும் தமிழர்களின் பாரம்பரியக் கலையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் இத்திரைப்படம் உருவாகியிருப்பதே இந்தப் படத்தின் சிறப்புக்கு ஒரு காரணம்.

இந்த ‘அடி முறை’ கலையில் இருந்து பிரிந்ததுதான் ‘டேக்வோண்டா’, ‘குங்பூ’, ‘கராத்தே’ போன்ற சண்டை பயிற்சிகள் என்பது வரலாற்று உண்மை. இப்படிப்பட்ட விஷயத்தை வெளிப்படுத்தியதற்காக இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டினைத் தெரிவிக்கிறோம்.

ஆனாலும் திரைப்படமாக பார்வையாளனுக்குத் தரப்பட வேண்டிய ஈர்ப்பு சற்றுக் குறைவாக இருப்பதையும் இயக்குநர் கவனத்தில் கொள்ள வேண்டும். இடைவேளைக்கு பின்புதான் படம் சீரியஸாக சென்றாலும் கிளைமாக்ஸை சண்டை காட்சியில் முடித்திருப்பது படத்தை என்னவோ வழமையான அடிதடி படம்போலாக்கிவிட்டது..!

ஒரு முறை பார்க்கலாம்தான்..!




error: Content is protected !!