அறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..!

அறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..!

ரசிகர்களின் பேராதரவையும், பத்திரிகையாளர்களின் பாராட்டையும், திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய படம் இது.

இந்தப் படம் இப்பொழுது கன்னடத்தில் மொழி மாற்றம் செய்யப்பட இருக்கிறது.  இந்தக் கன்னட படத்தை பிரபல மறைந்த தமிழ்த் திரைப்பட இயக்குநரான மணிவாசகத்தின் மகனும், களவாணி மாப்பிள்ளை படத்தை இயக்கிய இயக்குநருமான காந்தி மணிவாசகம் இயக்கவுள்ளார்.

ஏற்கெனவே இத்திரைப்படம் பற்றி அறிந்த பல கன்னட முன்னணி ஹீரோக்கள் இந்தப் படத்தில் நடிக்க போட்டி போட்டனர். ஆனால், இயக்குநர் காந்தி மணிவாசகம் இந்தப் படத்திற்கு இமேஜ் இல்லாத புதுமுக நடிகர் நடித்தால்தான் கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் பல புதுமுக நடிகர்களை தேடி அலைந்தார்.

இறுதியாக, தமிழ்த் திரையுலகத்தின் மூத்தத் தயாரிப்பாளரான ஏவி.எம்.சரவணனின் பேத்தியின் கணவரான அறிமுக நடிகர் மைத்ரேயனை தமிழில் கதிர் நடித்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்துள்ளார்.

maitreya (1)

இந்தப் படத்திற்காக மைத்ரேயனை படத்தின் கதைக் களமாக விளங்கும் பெங்களூர் பகுதிகளிலும், அங்கு வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒட்டி பழக வைத்திருக்கிறார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழகி அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார்.

படத்தின் மற்ற கதாபாத்திரங்களுக்கு கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், மற்றும் பிற கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள். 

விரைவில் இந்தப் படத்திற்கான துவக்க விழா பெங்களூரில் நடைபெறவிருக்கிறது.