“அந்த அப்பா கேரக்டர்ல யாரு நடிக்கப் போறாங்க?” – படத் தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா கேட்ட கேள்வி.!

“அந்த அப்பா கேரக்டர்ல யாரு நடிக்கப் போறாங்க?” – படத் தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா கேட்ட கேள்வி.!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இமாலய வெற்றியடைந்து, சமூகத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. 

கதை மாந்தர்கள், கதைக் களம், கதை சொல்லும் பாங்கு, கதை கூறும் கருத்து என அத்தனையும் சேர்ந்து பார்வையாளர்களுக்கான முழு சினிமாவாக ‘பரியேறும் பெருமாள்’ உருவாக திரைக்குப் பின்னால் உழைத்தவர்கள் பலபேர். இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், கலை இயக்குநர் ராமு, படத் தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது. 

இவர்களில் குறிப்பாக படத் தொகுப்பாளர் ஆர்.கே.செல்வாவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை இந்த ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

அடிப்படையில் விசுவல் கம்யூனிகேசன் படித்தவரான செல்வா, பிரபல படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீனிடம் ‘மங்காத்தா’ உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட படங்களில் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார்.

pariyerum perumal-movie-poster-3

பிறகு பா.இரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் அசோசியேட் எடிட்டராக பணிபுரிந்திருக்கிறார். பின்னர் ஜெயம் ரவி நடித்த ‘அப்பாடக்கர்’ படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் ‘ராஜா மந்திரி’, ‘காலக்கூத்து’,  ‘கத்திச் சண்ட’, ‘இவன் தந்திரன்’  ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

இப்படி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தவரை இந்த ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் ஜெட் வேகத்தில் பறக்க வைத்திருக்கிறது.

பரியேறும் பெருமாள் படம் பற்றியும் அதில் தன்னுடைய படத் தொகுப்பாளர் என்கிற பங்களிப்பைப் பற்றியும் நிறையவே பேசினார் ஆர்.கே.செல்வா.

“ஒரு நாள் இரஞ்சித் அண்ணா என்னைக் கூப்பிட்டு, ‘நீலம் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தில் முதல் படம் பண்ண போறோம். இதுதான் ஸ்கிரிப்ட். ரொம்ப எமோசனலான ஸ்கிரிப்ட், முழுசா படிச்சிட்டு சொல்லு’ன்னு சொல்லி ஸ்கிரிப்ட்டை கையில் கொடுத்தார். 

நானும் ஸ்கிரிப்ட்டை வாங்கிட்டுப் போய்  படித்தேன். படிச்சவுடனேயே எனக்கு மிகவும் பிடிச்சுப் போச்சு. அந்த அப்பா கேரக்டர் என் மனசுக்குள்ளேயே நின்றுச்சு. அடுத்த நாள் ரஞ்சித் அண்ணாவை பார்க்கும்போது, ‘அந்த அப்பா கேரக்டர்ல யார் நடிக்கப் போறாங்க?’ன்னுதான் கேட்டேன். இயக்குநர் மாரி செல்வராஜிடம் ‘இப்படிப்பட்ட கதைக்காகத்தான் நானும் காத்திருந்தேன்’னு சொன்னேன்.

இதனால் படம் எடிட்டிங் டேபிளுக்கு வரும்போது என்னால் புரிஞ்சிகிட்டு வேலை பார்க்க முடிஞ்சது.  இயக்குநர் மாரி செல்வராஜ் எடிட்டிங்கிற்கு உட்காரும்போதே, அந்த காட்சியின் பிண்ணனியைக் குறித்தும், அதன் எமோஷன் குறித்தும் விளக்கி விடுவார். அது இன்னமும் எனக்கு வேலை செய்ய சுலபமாய் அமைந்தது.

இந்த வெற்றி எனக்கு பெரிய திருப்புனையையும், நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த ரஞ்சித் அண்ணாவிற்கும், மாரி செல்வராஜுக்கும் எனது நன்றிகள்…” என்றார் படத் தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா.