2 பாடல்களை பாடிய எஸ்.ஜானகி – நெகிழும்  ‘பண்ணாடி’ படக் குழு .!

2 பாடல்களை பாடிய எஸ்.ஜானகி – நெகிழும்  ‘பண்ணாடி’ படக் குழு .!

திரையுலகிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும் இளைஞர்களை ஊக்கப்படுத்த பிரபல மூத்த பின்னணி பாடகியான எஸ்.ஜானகி அம்மா, 2 பாடல்களை பாடிக் கொடுத்ததை எண்ணி ‘பண்ணாடி’   படக் குழு நெகிழ்ந்து போய்க் கிடக்கிறது.

முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகி வரும் படம் ‘பண்ணாடி’. இந்தப் படத்தை ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் சார்பில் ரேவதி பழநிவேலன் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் தெ.ரா . பழநி வேலன். இவர், கிராமியக் கதைகளுக்குப்  பெயர் பெற்ற இயக்குநர்  ஆர்.வி.உதயகுமாரின் மாணவர்.

இப்படத்திற்கு பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பிரகாஷ்.

IMG-20181204-WA0048 (1)

இந்தப் படத்தில் பின்னணிப் பாடகியான எஸ்.ஜானகி அம்மா 2 பாடல்களை பாடியிருக்கிறார். சமீபமாக “இனிமேல் சினிமாவில் பாடல்களை பாட மாட்டேன். புதியவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்கிறேன்…” என்று ஒரு விழாவில் பகிரங்கமாக சொல்லிவிட்டு ஒதுங்கிய பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியை வீடு தேடிச் சென்று பார்த்து “நீங்கள் எங்கள் படத்தில் பாடியே ஆக வேண்டும்…” என்று வற்புறுத்தி அழைத்து வந்து பாட வைத்திருக்கிறார்கள் இந்தப் படக் குழுவினர்..!

அந்த அனுபவம் பற்றி பேசிய இயக்குநர் பழனிவேலன், “நம்மை யார் என்று நமக்கு சொல்ல வரும் புதுமையான கதைக் களம் கொண்டது இந்த ‘பண்ணாடி’ திரைப்படம். முழுக்க, முழுக்க கிராமத்துப் பின்புலத்தில் இத்திரைப்படம் உருவாகிறது .முற்றிலும் புதிய களத்தில்  ஆர்.வி.உதயகுமார், வேலராமமூர்த்தி, முக்கிய கதாபாத்திரங்களில் பிரபலமான  நட்சத்திரங்களின் நடிப்பில் இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாதவண்ணம் யதார்த்த  கதாபாத்திரங்களின்  உணர்வுகளில்  இப்படம் உருவாகிறது…” என்றார்.

எஸ்.ஜானகியம்மாவை தனது இசையில் பாட வைத்த அனுபவம் பற்றி படத்தின் இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் கூறும்போது, ““இத்திரைப்படத்தை தொடங்குவதற்கு முன் சேகர் என்பவர் மூலமாக இப்படத்தில் ஒரு பாடலை பாட ஜானகி அம்மாவைக் கேட்டிருந்தோம். அப்போதே ஜானகியம்மா சினிமாவில் பாடுவதை நிறுத்தியிருந்தார். அப்போது  கேட்டபோது சூழல் பிடித்துப்போய் ‘பார்க்கலாம். படம் தொடங்கும் போது வாருங்கள்’ என்றிருக்கிறார். 

நாங்கள் மீண்டும் ஜானகியம்மாவைப் பார்த்த காலக்கட்டத்தில் அவர் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ‘நான் இனிமேல் சினிமாவில் பாடுவதில்லை என்று முடிவெடுத்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட் டேன்’ என்றிருக்கிறார்.

IMG-20181204-WA0060

இப்படத்தில் வரும் ஒரு பாடல் மகிழ்ச்சி, துயரம் என இரு வேறு வடிவங்களில் இருக்க வேண்டும். இதற்கு நான் ஜானகியம்மாவைப் பாட வைப்பதை ஒரு கனவு போல எண்ணியிருந்தேன். அவர் ‘நான் சினிமாவை விட்டு விலகிவிட்டேன்’ என்றதும் எனக்கு சற்றே அதிர்ச்சியாகவே இருந்தது.. 

ஜானகி அம்மாவிடம் ‘நீங்கள்தான் பாட வேண்டும்’ என்று கேட்டேன். அதற்கு ‘நீங்கள் வேறு யாராவது புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன். என்னை விட்டு விடுங்கள்’ என்றார். நாங்கள் விடாமல் நச்சரித்தோம். விடுவதாக இல்லை.

ஒரு கட்டத்தில் எங்கள் தொல்லை தாங்காமல் ‘என்ன வரிகள்?’  என்றார். ‘ஒன் உசிரு காத்துல காத்தாடியா பறக்குறேன் ‘என முதல் வரியைச் சொன்னேன். புன்முறுவல் செய்தார். ‘அப்பாடா’ என்றிருந்தது.

முதலில் சோகப் பாடலைப் பாடியவர் ‘டூயட் பாடுவது ஆண் குரல் யார்’ என்றார். நான் டிராக் பாடி இருந்ததைப்  போட்டுக் காட்டினேன். என் குரல் அவருக்குப் பிடித்து விடவே ‘ நீயே பாடு’ என்றார். ‘இல்லம்மா நான் சும்மா டம்மி வாய்ஸ்க்காகப் பாடினேன்’ என்றேன். ‘வேறு யாரையாவது வைத்துப் பாட வைப்பதே திட்டம்’ என்றேன். ஆனால்  ‘நீயே பாடு’ என்றார் ஜானகியம்மா. நான் மறுத்தேன். இருந்தும் ஒரு கட்டத்தில், ‘நீ பாடினால்தான் நான் பாடுவேன்’ என்றார் பிடிவாதமாக. நானும் அவரைப் பாட வைக்க வேண்டுமே என்பதற்காக ‘சரி’ என்றேன்.

மகிழ்ச்சி, சோகம் என இரண்டு பாடல்களையும் ஒரே டேக்கில் பாடிக் கொடுத்தார். அத்துடன் எங்களது படக் குழுவையும் வாழ்த்தினார். 80 வயதிலும் சற்றும் உற்சாகம் குறையாமல் அவர் பாடிக் கொடுத்தது  எங்களை வியப்பூட்டியது. ஜானகியம்மா எங்கள் படத்திற்குள் வந்தது எங்களுக்குப் பெரிய ஊக்கமாக இருந்தது…” என்கிறார்.

எஸ்.ஜானகி அம்மா பாடிய இரண்டு பாடல்களையும் விரைவில் வெளியிடவுள்ளனர்.