‘பாண்டி முனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஜாக்கி ஷெராப்..!

‘பாண்டி முனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஜாக்கி ஷெராப்..!

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிப்பில் உருவாகும் ‘பாண்டி முனி’ படத்திற்காக 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘யாரடி நீ மோகினி’ ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘3’ ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம், தற்போது தயாரித்து வரும் திரைப்படம்  ‘பாண்டி முனி.’

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ‘முனீஸ்வர சாமி’ என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார். படத்தின் நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே,  சிவசங்கர், சுமன் ஆகியோரும்  நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மது அம்பட், இசை – ஸ்ரீகாந்த்தேவா, நடனம் – சிவசங்கர், சண்டை பயிற்சி  – சூப்பர் சுப்பராயன், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கஸ்தூரி ராஜா.

jackie sheroff

படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசுகையில், “இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக திருவண்ணாமலை அருகே உள்ள ‘வேட்டவலம்’ என்ற ஊரில் நடைபெற்றது. அந்த ஊரில்  ஜமீனுக்கு  சொந்தமான குளம் ஒன்று உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே அந்தக் குளம்  இருக்கிறது. அந்த குளத்தில் சுமார் 4000 சதுர அடி அளவுக்கு இரும்பு தூண்கள் இரும்பு பலகைகளைக் கொண்ட  அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மீது அமர்ந்து அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் 400 அகோரிகள் பூஜை செய்வது போன்ற காட்சிகள் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினோம்.

அத்துடன் 25 அடி உயரமுள்ள சிவன் சிலை ருத்திரதாண்டவ கோலத்தில் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இரண்டு மலைகளுக்கு இடையே தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. அதில் அகோரிகள் வலம் வருவது மாதிரியான காட்சிகளும் படமாக்கப்பட்டது.

கைலாயத்தை பிரதி எடுத்தது மாதிரியான இந்த அரங்குகள் திரையில் பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். சுமார் 50 லட்சம் ரூபாயை இதற்காக செலவு செய்திருக்கிறோம். 

என் சினிமா பயணத்தில் இந்த ‘பாண்டி முனி’ படம் வித்தியாசமான அனுபவத்தை தரவிருக்கிறது…” என்றார் கஸ்தூரிராஜா.